வகுப்பு 50 – குழுவாக பணியாற்றல்

வகுப்பு 50 – குழுவாக பணியாற்றல்

கதை
மழைத்துளி – ஆலங்கட்டி மழை

முன்னொரு காலத்தில் ஒரு சிறு மழைத்துளி, தான் ஒரு ஆலங்கட்டி மழையாக மாறி, இந்த பூமியை வெண்மையாக்கிட கனவு கண்டது ஆண்டுகள் கடந்தன. ஒரு பெரிய வறட்சி வந்து, அந்த சிறு துளி இருந்த ஏரியையே ஆவியாக்கியது. அது வானத்தை அடைந்தவுடன் மேகத்தினொரு சிறு பகுதியாகியது. பருவ நிலை குளுமையாக மாறியவுடன், அச்சிறுதுளி, தான் எங்கு விழுந்தால் அந்த இடத்தை பனியால் மூடி உதவலாம் எனத் தேடியது.

ஆனால் ஒர் சின்னஞ்சிறு துளியே விழுந்ததால், அது பூமியைத்தொட்டவுடன் உருகியது. எனவே அங்கே இருந்து திரும்ப தன்னை மேகத்துக்கு அனுப்ப சூரியனின் ஒளிக்கதிர் படுவதற்காக காத்திருந்தது. சூரியன் ஒளிர்ந்தவுடன் அச்சிறுதுளி மீண்டும் மேலேறியது, மீண்டும் பனியாக மாறியது, கீழே விழுந்தது. மீண்டும். தரைக்கு வந்தவுடனேயே உருகியது.

இவ்வாறு பலமுறை நடந்தது. முடிவில் இச்சிறுதுளி லட்சக்கணக்கான நீர்த்துளிகள் அடங்கிய மிகப்பெரிய மேக்கூட்டத்தை அடைந்தது. ப்ரம்மாண்டமானதாக இருந்தாலும் இந்த மேகத்தில் இருப்பது கொஞ்சம் அசவுகரியமாகத்தான் இருந்தது. சில துளிகள் சுற்றியிருந்த அனைவருக்கும் இந்த அமளியில் நெருக்கமாக சேர்ந்திருக்க உத்தரவிட்டுக் கொண்டேயிருந்தன.

பெரிய துளிகள் எல்லாம் கீழே, சின்னஞ்சிறு துளிகள் எல்லாம் மேலே, வாங்க,வாங்க, வீணாக்க நேரமில்லை திரும்பவும் பூமியில் விழணும் நம்ப சிறுதுளிக்கு இதில் நாட்டமில்லை. ஆனால் பக்கத்திலிருந்த ஒரு நட்பு மிக்க துளி இதைப்பற்றி பேச விழைந்தது. எங்கே போகிறாய். உனக்கு இதில் பங்கெடுக்க விருப்பமில்லையா?

ஆச்சரியமாகப் பார்த்த நம் சிறுதுளியைப் பார்த்து அந்த நட்புடனான துளி அவர்கள் எவ்வாறு ஒரு பெரிய பனிப்பொழிவிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என விவரித்தது.

இங்கு இருக்கும் எங்கள் அனைவருக்கும் பனியாகி நாட்கணக்கில் பூமியை போர்த்தியிருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நாங்கள் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். ரொம்ப வருடத்திற்கு முன் இதை நான் தனியாக முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் மற்றவர் உதவியின்றி. இது என்னால் முடியாது என்று தெரிந்துகொண்டேன். இந்த அழகான மேகத்தைப் பார்த்தேன். இங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் சிறிய உதவிகள் செய்கிறோம். நம்முடைய குழுப்பணிக்கு நன்றி. நாம் இதுவரையில்லாத ஒரு சிறந்த பனிப்பொழிவு தயார் செய்தோம்.