வகுப்பு 47 – பேராசை

வகுப்பு 47 – பேராசை

கதை
பேராசைப் பிடித்த எலி

ஒரு பேராசைப் பிடித்த எலி, சோளங்கள் நிறைந்த கூடை ஒன்றைக்கண்டது. உடனே அதற்கு சாப்பிட வேண்டுமென்று ஆசை. ஒரு சிறிய துளையிட்டு அதனுள் புகுந்தது. நிறைய சோளங்களை ஆசை தீர உண்டது. அதன் வயிறும் நிறைந்தது.

இப்போது அந்த சிறு துளை வழியாக வெளியே வர முயன்றது. ஆனால் வயிறு நிரம்பியிருந்ததால் வெளியே வர முடியவில்லை. திரும்பத்திரும்ப முயற்சி செய்து தோற்றது.

அழுது கொண்டிருந்த எலியை அந்த வழியாக வந்த ஒரு முயல் பார்த்து, “என்ன ஆயிற்று” என்று கேட்டது.

நடந்ததை கேட்டு சிரித்த முயல், “ வயிறு நிரம்பியதால் தானே அவதிப்படுகிறாய், சுருங்கும் வரை காத்திரு”, என்று கூறிச் சென்றது.

அப்படியே அந்த கூடையினுள்ளேயே தூங்கிவிட்டது. அடுத்த நாள் காலை, கண் விழித்த போது, அதன் வயிறு சுருங்கியிருந்தது. ஆனால் அந்த பேராசைப் பிடித்த எலி, மறுபடியும் சோளங்களை சாப்பிட ஆரம்பித்தது. அதன் வயிறு மிகவும் பெருத்தது.

வெளியே செல்ல முடியாது என்று தெரிந்து, நாளை போய் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டது.