வகுப்பு 46 – ஒற்றுமை

வகுப்பு 46 – ஒற்றுமை

கதை
ஒற்றுமையே வலிமை.

முன்பு ஒரு காலத்தில் புறா கூட்டம் ஒன்று தலைவர் புறாவின் ஆலோசனைப்படி உணவு தேடி வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தன. அவர்கள் வெகு தூரம் பயணம் செய்ததால் களைப்படைந்தன. தலைவர் புறா அவற்றை உற்சாகப்படுத்தியது. கூட்டத்தில் இருந்த சிறிய புறா உற்சாகத்துடன் பறப்பதைக் கண்டு மற்ற பறவைகளும் அதனுடன் இணைந்து பறந்தன. சிறிது தூரம் பறந்த பின் ஒரு பெரிய ஆலமரத்தடியில் நிறைய நெல்மணிகள் சிதறிக் கிடப்பதைக் கண்டன. புறாக் கூட்டம் அங்கே தரையிறங்கி தானியங்களை உண்ண ஆரம்பித்தன.

அப்போதுத் திடீரென ஒரு பெரிய வலை அனைத்து பறவைகள் மீதும் விழுந்தது. புறாக்கள் அனைத்தும் வலையில் மாட்டிக் கொண்டன. அப்பொழுது தூரத்தில் ஒரு வேடன், ஒரு பெரிய மூங்கில் கூடையுடன் புறாக் கூட்டத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தான். புறாக்கள் அனைத்தும் பயத்தில் படபடக்க ஆரம்பித்தன. ஆனால் அவற்றால் தப்பிக்க முடியவில்லை. உடனே தலைவர் புறாவிற்க்கு ஒரு யோசனைத் தோன்றியது. அது மற்ற புறாக்களிடம் நாம் அனைவரும் சேர்ந்து பறக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. தலைவரின் கட்டளைப்படி அனைத்து பறவைகளும் சேர்ந்து ஒற்றுமையாகப் பறக்க ஆரம்பித்தன.

இதைக் கண்ட வேடன் திகைத்து நின்றான். பின்னர் புறாக்களை பின்தொடர்ந்து ஓடினான். ஆனால் புறாக்கள் காடு, மலை கடந்து உயரமாக பறக்க ஆரம்பித்தன. புறாக்கள் நம்பிக்கையுடன் தன் நண்பன் எலி இருக்கும் நகர கோயிலை நோக்கிப் பறந்து சென்றன.

புறாக்களின் ஆரவாரச் சத்தத்தை கேட்டு, புறாக்கள் இருக்கும் இடம் நோக்கி எலி சென்று பார்த்தது. எலியிடம் தலைவர் புறா நடந்த அனைத்தையும் விளக்கியது. இதைக் கேட்ட எலி, தலைவர் புறாவை முதலில் விடுவிக்க எத்தனித்தது. ஆனால் தலைவர் புறா மற்றவர்களை முதலில் காப்பாற்றச் சொன்னது. எலி தன்னுடைய கூரிய பற்களால் வலையை கடித்து அனைத்து புறாக்களையும் விடுவித்தது. புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு ஒற்றுமையாக, சந்தோஷமாகப் பறந்து சென்றன.