வகுப்பு 45 – கீழ்ப்படிதல்

வகுப்பு 45 – கீழ்ப்படிதல்

நாம் எப்பொழுதும் நம் பெற்றோர் சொற்படி நடக்கவேண்டும். நம் பெற்றோர்கள்தான் நம்மைத் தீமைகளிலிருந்துக் காப்பாற்றுகின்றனர். அதனால்தான் அவர்கள் நம்மை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கின்றனர். “ நெருப்பைத் தொடாதே கை சுடும். “ நீ சற்று பெரியவனான பிறகு அந்தக் கூர்மையான கத்தியைப் பயன்படுத்தலாம்” என்றெல்லாம் கூறுவர்.

கதை
அடங்காதச் சிட்டுக்குருவி

ஒரு தாய் பறவையும், தந்தைப் பறவையும் தம் மூன்று குஞ்சுகளுடன் ஒரு உயரமான மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. குஞ்சுகளுக்கு உணவு சேகரிக்கும் பொருட்டுப் பெரிய பறவைகள் வெளியில் செல்லவேண்டியிருக்கும். அதனால், அவற்றைத் தனியாகக் கூட்டில் விட்டுவிட்டுச் சென்றன.

குஞ்சுகள் சிறியதாக இருந்தவரையில், பெற்றோர் சொல் கேட்டு, அவை உணவு எடுத்து வரும் வரைக் கூட்டில் அமைதியாகக் காத்திருந்தன. சற்று வளர்ந்ததும் மெதுவாகக் கூட்டின் விளிம்பில் அமர்ந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. “வெளியில் ஒரு பூனை இருக்கிறது. அது பார்க்க மிகவும் தோழமையோடு காணப்பட்டாலும், மிகவும் பொல்லாதது. குஞ்சுப் பறவைகளையெல்லாம் தின்றுவிடும். அது சொல்வதைக் கேட்காதீர்கள். அதனருகில் கூட செல்லாதீர்கள்” என்றெல்லாம் அறிவுரை கூறிப் பெரிய பறவைகள் குஞ்சுகளை எச்சரித்தன.

ஒரு நாள் பெரிய பறவைகள் வெளியில் சென்றிருந்த நேரத்தில், இந்த பொல்லாப் பூனை அந்தக் கூடு இருக்கும் மரத்தடியில் வந்தமர்ந்துகொண்டு, “ ஏ குருவிகளே! உங்களைப் பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கீழே இறங்கி வாருங்களேன். நாம் விளையாடலாம்” என்று கூறியது. அதற்குக் குருவிக் குஞ்சுகள் : மாட்டோம் மாட்டோம்.

எங்கள் பெற்றோர் உன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். நீ பறவைகளையெல்லாம் அடித்து உண்பாயாமே? நாங்கள் வரமாட்டோம் பூனை : இல்லை இல்லை! நான் அப்படியெல்லாம் செய்யவே மாட்டேன். நீங்கள் என் நண்பர்கள். வாருங்கள். விளையாடலாம்.குருவிகள் : மாட்டோம் மாட்டோம்.பூனை : (அழுதுகொண்டே) நான் தனியாக இருக்கிறேன். என்னுடன் விளையாட யாருமே இல்லை.இரு குருவிகள் மட்டும், “ முடியவே முடியாது! எங்கள் பெற்றோர் உன்னைப் பற்றிக் கூறியிருக்கின்றனர். நாங்கள் விளையாட வரவே மாட்டோம்” என்று கூறிவிட்டன.

ஆனால், சின்னஞ்சிறு மூன்றாவது குருவி மட்டும் எட்டிப் பார்த்து, “ அழகான பூனை. பாவம் நாம் விளையாட செல்லவில்லை என்று அழுகிறது” என்று கூறிற்று. இதைக் கேட்டப் பூனை, “ தயவு செய்து வாயேன். விளையாடுவோம்” என்றது. இந்த உருக்கமான வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குஞ்சுக் குருவி கூட்டிலிருந்து குதித்தது. அடுத்த நிமிடமே அந்தப் பூனை மகிழ்ச்சியுடன் அந்தக் குருவியை விழுங்கியது.

அங்கு வந்த பெரிய குருவிகள் இதைக் கண்டு வருந்தின. பூனையை விரட்டின.. கூட்டில் பத்திரமாக இருந்த இரண்டு குருவிகளும், “ நாம் ஏன் பெற்றோர் சொல் கேட்கவேண்டும் என்று இப்பொழுது புரிந்தது “ என்றன.

செயற்பாடு
 • சிறிய குழந்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளப் படத்திற்கு வண்ணம் தீட்டவும்
 • பெரிய குழந்தைகள் இந்தக் கதையை நடித்துக் காட்டலாம்
  யார் பெற்றோராக இருப்பீர்?
  யார் குழந்தைகள்?
  யார் அந்தப் பூனை?
  கூடு எங்கு வைக்கலாம்?
  பூனை எங்கு வசிக்கும்?
  இவற்றைத் திட்டமிடலாம்.