வகுப்பு 37 – நேரத்தை வீணாக்குதல்

வகுப்பு 37 – நேரத்தை வீணாக்குதல்

கதை : தீயத் தொலைக்காட்சிகள்

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு டிவி பார்ப்பது மிகவும் பிடித்தமான வேலை. அதனால் அவன் எங்கு சென்றாலும் தாமதமாகவேச் செல்வான். அவன் டிவி பார்க்க வரவேண்டும் என்ற ஆவலால், எந்த ஒரு வேலையையும் முழுதாக செய்து முடிக்கமாட்டான், காலை உணவைக்கூட ஒழுங்காக முடிக்கமாட்டான்.

ஒரு நாள், அவன் வீட்டுத் தபால் பெட்டியில், மர்மமான பார்சல் ஒன்று இருந்தது. அதனுள், ஒரு வித்தியாசமான கண்ணாடியும், ஒரு துண்டுக் காகிதமும் இருந்தது. “ இந்தக் கண்ணாடியைக் கொண்டு இனி உன்னால் சரியாக நேரம் பார்க்கமுடியும்” என்று எழுதப்பட்டிருந்தது.

சிறுவனுக்குப் புரியவில்லை. அவன் அந்தக் கண்ணாடியை அணிந்துத் தன் சகோதரனைப் பார்த்தான். அவன் தலையில் ஒரு மிகப்பெரிய மலர் குவியல் இருப்பதைக் கண்டான். அந்த மலர்கள் ஒவ்வொன்றாய்க் கீழே விழுவதையும் கண்டான். அது அவனுக்குத் தன் சகோதரனாகவும் தெரியவில்லை. அவன் அந்தக் கண்ணாடி வழியாக யாரைக் கண்டாலும் இதே காட்சிதான் தெரிந்தது. ஒரே ஒரு வித்தியாசம்தான். என்னவென்றால், பார்க்கப்படுபவரின் வயது அதிகமாக இருந்தால், அவர் தலையில் இருந்த மலர்க்குவியலின் அளவு குறைவாக இருக்கும். மேலும் அந்த நபர் எப்படி நடந்து கொள்கிறாரோ அதற்கேற்றாற் போல் அந்தக் குவியலில் மலர்கள் கூடவோ குறையவோ செய்யும்.

அடுத்த நாள் காலை சிற்றுண்டி சாப்பிடும்பொழுது அவனுக்குக் கண்ணாடி ஞாபகம் வந்துவிட்டது. அதை அணிந்தவுடன் அவன் கண்ட காட்சி அவனை மிகவும் நடுங்கச் செய்தது. அவன் தலையிலிருந்தே தொடர்ச்சியாக மலர்கள் தொலைக்காட்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. அது மட்டுமல்ல. அந்தத் தொலைக்காட்சிக்கு இப்போழுது ஒரு பெரிய வாய் இருந்தது. அதன் வழியாக அது வரும் மலர்களையெல்லாம் கொடூரமாக விழுங்கிக்கொண்டிருந்தது.

மேலும், அவன் எங்கு சென்றாலும் அந்தத் தீயத் தொலைக்காட்சிகள் மலர்களை விழுங்கும் காட்சியைக் கண்டான்.

முடிவாக, தொலைக்காட்சிகள் என்ன செய்கின்றன என்பது அவனுக்கு விளங்கியது. அதனால் அவன், “இனியும் நம் நேரத்தை இந்தத் தொலைகாட்சி விழுங்குவதை நாம் அனுமதிக்ககூடாது” என்ற முடிவுக்கு வந்தான்.