வகுப்பு 35 – காலத்தின் மதிப்பு

வகுப்பு 35 – காலத்தின் மதிப்பு

நீ என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் உரிய நேரத்தில் செய்யவேண்டும். மேலும் உரிய நேரத்தில் செல்லவேண்டும். நாம் அவ்வாறு செய்யவில்லை என்றால், அது பிறருக்குத் தொந்தரவாக இருக்கும். ஒரு வகுப்பில், ஒரே ஒரு குழந்தை வகுப்புக்குத் தாமதமாக வந்தாலும் அந்த வகுப்பு முழுவதும் பாதிக்கப்படும். நீ வகுப்புக்குத் தாமதமாக செல்கிறாய், பாதி கதை முடிந்துவிட்டது. அது உனக்கு சுவாரஸ்யப்படுமா? நீ ஐஸ்கிரீம் சாப்பிடும் போது கூட நேரம் வைத்துக் கொள்ளவேண்டும். நீ மிகவும் மெதுவாக சாப்பிட்டால், அது உருகி வழிந்து உன் ஆடையை எல்லாம் வீணாக்கிவிடும்.

கதை : தாமத நீர் யானைக் கதை

ஒரு நீர் யானையின் வாலைப் பார்த்திருக்கிறீர்களா? அது மிகச் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். அந்த மிகப் பெரிய உருவத்தில் இப்படி குட்டி வாலிருப்பது வேடிக்கையாக இருக்குமல்லவா? அதன் வால் ஏன் குட்டியாகவுள்ளது தெரியுமா? இதோ இந்த கதையைக் கேளுங்கள்.

வெகு நாட்களுக்கு முன், விலங்குகளுக்கு வாலே இல்லை. கொசு, ஈ, மற்றும் பல பூச்சிகளால் விலங்குகளுக்குத் தொல்லையாக இருந்தது. ஏனெனில், அவைகளால் அந்த பூச்சிகளை விரட்டவே முடியவில்லை. பூச்சித் தொல்லையால் அந்த விலங்குகளால் நன்கு தூங்கக் கூட முடியவில்லை.

அதனால், எல்லா விலங்குகளும் ஒரு தீர்வு தேடி அவர்களுடைய அரசர் சிங்கத்திடம் சென்றன. அதற்கு சிங்கராஜா, “என்னாலும் தான் இந்தப் பூச்சிகளை விரட்டவே முடியவில்லை. கவலைப் படாதீர்கள், நான் இதற்கு ஒரு தீர்வு காண்கிறேன்” என்று கூறியது.

சிங்கம் இறைவனிடம் உதவி கேட்டு மனதாரப் பிரார்த்தனை செய்தது. இறைவன் அதன் முன் தோன்றி ஒரு வால் கொடுத்தார். உடனே சிங்கம், அனைத்து விலங்குகளுக்கும் வால் வேண்டும் எனக் கேட்டது. சிங்கராஜா தன் ராஜ்ஜியத்தில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் உதவி செய்ய நினைப்பதைக் கண்ட இறைவன் மிகவும் மகிழ்ந்தார். அதனால், அவர் சிங்கத்திடம் வெவ்வேறு அளவு, வடிவம் மற்றும் வெவ்வேறு நிறங்களில் பல வால்கள் கொடுத்து அவற்றை அனைத்து விலங்குகளுக்கும் விநியோகிக்குமாறு கூறினார்.

சிங்கம், அடுத்த நாள் அதிகாலையில் தன் குகைக்கருகே வந்து கூடுமாறு அனைத்து விலங்குகளுக்கும் ஓர் அறிக்கை விட்டது. சூர்ய உதயத்தின் போதே அனைத்து விலங்குகளும் குகைக்கருகே வந்து கூடின. அவையெல்லாம், ராஜா நம் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு வைத்திருக்கிறாரா என்றறிய ஆவலாக இருந்தன. சோம்பேறி நீர்யானை மட்டும் நன்கு உண்டு, உறங்கி பின் சென்று சிங்கத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டது. கடவுள் நம் பிரச்சினைத் தீர நம்மனைவருக்கும் வால் கொடுத்துள்ளார் என்று கூறியது. அது நிறைய வால்களைக் குவித்து வைத்து அவற்றிலிருந்து அந்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்லியது. விலங்குகள் எல்லாம் தத்தம் வால்களை எடுக்க விரைந்தன.

முதலாக சிங்கத்தை அடைந்த விலங்கு நரி தான். அதனால், அது நல்ல அடர்ந்த வாலைத் தேர்ந்தெடுத்தது. பின்னர், அணில், குதிரை, ஓநாய் என அனைத்து விலங்குகளும் அடுத்தடுத்து வந்தன. அந்தக் குவியலிலிருந்து அவைகளுக்குப் பிடித்த வாலை எடுத்துக்கொண்டன. ஒவ்வொன்றாக எல்லா விலங்குகளும் ஒரு ஒரு வாலைத் தேர்ந்தெடுத்தன.

இந்த நீர்யானை உறக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது மாலை ஆகிவிட்டது. அதனைச் சுற்றியிருந்த பூச்சிகளைக் கண்டவுடன் தான் தாம் சிங்கத்திடம் செல்ல வேண்டியது அதற்கு ஞாபகம் வந்தது. உடனே சிங்கத்தின் குகைக்கு விரைந்தது. அங்கு ஒரே ஒரு வால்தான் எஞ்சியிருந்தது. சிறிய, மெல்லிய வால். அதை வேறு எந்த விலங்கும் விரும்பவில்லை.

எல்லா விலங்குகளும் தமக்குக் கிடைத்த வாலைக்கொண்டு பூச்சிகளை விரட்டிக் கொண்டிருந்தது. நீர்யானையின் வால் மட்டும் மிகச் சிறியதாக இருந்ததால் அதனால் பூச்சிகளை விரட்டவே முடியவில்லை. எல்லா பூச்சிகளும் நீர்யானை பின்னால் ஓட ஆரம்பித்துவிட்டன. பாவம், நீர்யானையோ வேகமாக ஒடி ஒரு நதியில் இறங்கி உட்கார்ந்துகொண்டது.

இன்று கூட, நீர்யானைத் தன் குட்டி வாலை வைத்துக்கொண்டு பெரும்பாலான நேரம் நீரிலேயே கிடப்பதைப் பார்க்கலாம் – இதற்கெல்லாம் காரணம், வாலைத் தேர்ந்தெடுக்க அதுத் தக்க சமயத்தில் செல்லாததுதான். .

அமைதியாக அமர்தல்
  • நான் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பேன். என் வீட்டுப் பாடங்களை உரித்த நேரத்தில் செய்து முடிப்பேன். பள்ளிக்குத் தாமதமாகச் செல்லமாட்டேன்.