வகுப்பு 34 – உதவியாயிருத்தல்

வகுப்பு 34 – உதவியாயிருத்தல்

உதவியாய் இருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? ஏதேனும் ஒரு சிறு வழியிலாவது பிறரை சந்தோஷப்படுத்தும் வகையில் அவருக்கு வேண்டியதைச் செய்தல். உன் வீட்டிலேயே ஏதேனும் சிறு உதவி செய்யலாம். உன்னுடைய இளைய சகோதரன் அல்லது சகோதரிக்கு அவர்களுடைய வீட்டுப் பாடத்தில் உதவலாம். விலங்குகளிடத்தில் அன்பாகப் பழகுவதன் மூலமும், அவற்றிற்கு உணவளித்து, அவற்றைப் பராமரிப்பதன் மூலமும் விலங்குகளுக்கு உதவலாம். உன் வகுப்பில் உன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் உன்னுடைய பொருட்களைக் கொடுத்து உதவலாம். அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் வகுப்பிற்கு வரவில்லை என்றால், அவர்களுக்கு உன் வகுப்பு நோட்டுப் புத்தகங்களைக் கொடுக்கலாம். இவ்வளவு ஏன்?. ஒரு புன்னைகைக் கூட உதவிதான். மக்கள் புன்னகையையே விரும்புவார்கள். இல்லையா? நீ பிறருக்கு உதவி செய்யும்போது அவர்களை மகிழ்விக்கிறாய். நீ அவர்களை நேசிக்கிறாய் என்று உணர்த்த இதுவே சிறந்த வழி. உன்னால் முடிந்த பொழுது நீ பிறருக்கு உதவினால், உனக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் அவர்களும் சந்தோஷமாக உதவ முன் வருவார்கள்.

நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவுபவர்கள் நிறைய உள்ளனர். நாம் அவர்களை உதவியாளர்கள் என்று கூறலாம். அந்த உதவியாளர்கள் யார் என்று பார்ப்போமா?

நம் உதவியாளர்கள் (அட்டைகளும், சார்ட் பேப்பர்களும் வைத்து) வீட்டில் வேலை செய்பவரின் படத்தை ஒட்டவும். மிகக் கடினமான வேலைகளான, வீட்டைப் பெருக்குதல், துடைத்தல் மேலும் சுத்தம் செய்தல் போன்ற அனைத்து வேலைகளையும் இந்த உதவியாளர்தான் செய்கிறார் என்று குழந்தைகளிடம் கூறுங்கள். அவர் நமக்கு உதவுகிறார். இல்லையேல், நாமே அனைத்தையும் செய்யவேண்டி இருக்கும் என்றும் அதனால் நாம் அவர்களிடம் அன்பு காட்டவேண்டும் என்றும் குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். மேலும் , நாம் அவரைப் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்றும் அவர் நம்மை விட வயதில் மூத்தவராதலால் அவரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசவேண்டும் என்றும் சொல்லுங்கள்.

செயற்பாடு
  • ‘HELP’ என்கிற வார்த்தையை உருவாக்கும் ஒரு புதிர் தயார் செய்யவும் – குழந்தைகளிடம் குதிரை(Horse), யானை(Elephant), சிங்கம்(Lion) மற்றும் பன்றி(Pig) அல்லது கிளி(Parrot) ஆகியவற்றின் படங்களைக் காட்டவும். அவர்களை அந்த மிருகங்களின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துக்களை எடுத்து எழுதச் சொல்லவும். நமக்குக் கிடைக்கும் அந்த மாய வார்த்தை ‘HELP’. குழந்தைகளை வண்ணம் தீட்டச் சொல்லவும்.