வகுப்பு 33 – நற்குணம்

வகுப்பு 33 – நற்குணம்
கதை : ஓட்டப் பந்தயம்

ஒரு முறைக் கடவுள், விலங்குகளிலேயே அதி வேகமாக ஓடக் கூடிய விலங்கு எது என்றறிய விரும்பினார். அதனால், ஒரு ஓட்டப்பந்தயம் வைக்க முடிவு செய்தார். ஆனால், நிறைய விலங்குகள் அதில் கலந்துகொள்ள விரும்பவில்லை.

இருந்த போதிலும், மான், சிறுத்தை மற்றும் ஆமை இவை மூன்றும் பந்தயத்தில் ஓட முன்வந்தன. அந்நாட்களில், இவை மூன்றும்தான் அதிவேகமாக ஓடக் கூடிய விலங்குகளாகக் கருதப்பட்டன. கடவுள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் விசில் அடித்துப் பந்தையத்தை ஆரம்பித்து வைத்தார். மூன்று போட்டியாளர்களும் வெகு வேகமாக ஓடத் துவங்கினர். பந்தையம் மிக விறு விறுப்பாக நடந்தது.

இந்த ஆமைக்கு ஒரு தீய நண்பன் உண்டு. அவன் வேறு யாரும் இல்லை, பாம்பு. பாம்பு ஆமைக்கு சக போட்டியாளர்களைக் கவிழ்க்க ஒரு சூழ்ச்சி சொல்லிக் கொடுத்தது. இந்த மூட ஆமை அந்த விஷம் கலந்த தந்திரத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறே செய்ய முடிவு செய்தது.

பந்தயத்தின் பாதியில், மூன்று போட்டியாளர்களும் கிட்டத்தட்ட சமமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ஆமை திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாகத் தன் வலது காலை மான் முன்பு நீட்டியது. உடனே, மான் தடுமாறி விழுந்துத் தன் காலை உடைத்துக் கொண்டது. ஆமை வேகம் பிடித்தது. ஆனால் சிறுத்தையோ, நன்கு ஓடிப் பந்தையத்தில் வெற்றி பெறுவதை விட்டு விட்டுத் தன் சக போட்டியாளரான மானுக்கு உதவி செய்ய வந்தது. ஆமை வெற்றியாளராக வந்து நின்றது. http://demo3.esales.in:8081/ அதன் நண்பனான நாகம் ஆமையைக் கட்டித் தழுவ வந்தது.

ஆனால், பாம்பின் சூழ்ச்சிக்கும், ஆமையின் தந்திரத்திற்கும் நேரடி சாட்சி கடவுள் ஒருவரே. அதனால், ஆமைக்குப் பரிசு கொடுப்பதற்குப் பதிலாக, அனைத்து விலங்குகளுக்கிடையே ஆமையே மிகவும் மெதுவாக ஓடக்கூடிய விலங்கு என்று அறிவித்து மேலும் நயவஞ்சக தந்திரம் கற்றுக்கொடுத்த பாம்பிற்கு, அவமானத்தில் தவழ்ந்தே செல்லுமாறு சாபமிட்டார்.

ஆனால், சிறுத்தையின் தன்னலமற்ற செயலினால் அவர் மகிழ்ந்தார். நிலத்தில் ஓடக் கூடிய விலங்குகளிலேயே, அதி வேகமாக ஓடக் கூடியது சிறுத்தைதான் என்ற ஓர் அரிய பரிசையும் சிறுத்தைக்குக் கொடுத்தார். வனத்திலுள்ள விலங்குகளிலேயே, இரண்டாவதாக வேகமாக ஓடும் விலங்கு மான் தான் என்றும் அறிவித்து அருள் அளித்தார். இந்த பாரம்பரியம் இன்று வரை உண்மையாக உள்ளது.

நீதி
  • நீ யாரையும் ஏமாற்றாமல் உண்மையாக விளையாடினால், இறுதியில் தகுந்த வெகுமானம் கிடைக்கும். மாறாக, நீ பிறரை ஏமாற்றி குறுக்கு வழியில் வெற்றி அடைய விரும்பினால், உன் பொய் புலப்பட்டு விடும்.