வகுப்பு 31 – பகிர்ந்து கொள்ளுதல்

வகுப்பு 31 – பகிர்ந்து கொள்ளுதல்

நீ அன்பு காட்டவும், உன் மேல் அன்பு செலுத்தவும் கடவுள் உனக்கு தாய், தந்தை, சகோதரன், சகோதரி, தாத்தா, பாட்டி, குரு, நண்பர்கள் என அனைவரையும் உனக்களித்துள்ளார். இவர்கள் அனைவர் மேலும் உனக்குள்ள அன்பை நீ எப்படி வெளிப்படுத்துவாய்? அன்பு என்பது அனைவரையும் சந்தோஷப்படுத்துவது. உன் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர்கள் நிறைய நேரமும், பணமும் செலவிடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் உன்னை மிகவும் நேசிக்கிறார்கள். நீ இதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள். உன் பெற்றோரை சந்தோஷப்படுத்த முயற்சி செய். எப்படி என்று தெரியவேண்டுமா? அவர்களுக்குக் கீழ்படிந்து நடந்துகொள்.

சரி, சகோதர, சகோதரிகளை எப்படி மகிழ்விப்பது? அவர்களுடன் சண்டையிடாமல் இருத்தல் வேண்டும். இனிமையான பேச்சினால் அவர்கள் மேல் உனக்குள்ள அன்பை நீ வெளிப்படுத்தலாம். தாத்தா, பாட்டிக்கு உன் மேல் அளவு கடந்த அன்பு. அவர்களுடன் நேரம் செலவிடு. அவர்களுடன் சிறிது நேரம் உரையாடு. அவர்களை சிறிது தூரம் வெளியே நடைப் பயிற்சி அழைத்துச் செல். வயதானவர்களுக்குக் கீழ்படிந்து நடந்துகொள்.

கதை

ஒரு ஊரில், இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் சிறந்த நட்புடன் பழகினர் மேலும் எப்பொழுதும் ஒன்றாக விளையாடுவர். இருப்பினும், ஒரு நாள், ஒரு பொம்மையின் பேரில் அவர்களிடையே ஒரு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவாக, அன்றிலிருந்து இருவரும் அவரவர் பொம்மையை அவரவர்தான் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அவர்களிடம் நிறைய பொம்மைகளும் பிற பொருட்களும் இருந்தன. அதனால் அடுத்த நாள் எந்த பொம்மை யாருடையது என்று அவர்களுக்குள் பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். அடுத்த நாள் முழுவதும் இருவரும் இதே வேலையாகத் தத்தம் பொருட்களைக் குவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்த பெரிய பொம்மைகளைப் பிரித்து முடித்ததுமே இரவு நேரமாகிவிட்டது. அதனால், அடுத்த நாள் சிறு சிறு பொம்மைகளைப் பிரிக்க உட்கார்ந்து விட்டனர். வீட்டையே பிரிக்கத் தொடங்கினர்.

நாட்கள் சென்றன. தினமும் இதே கதைதான். எப்பொருள் யாருக்குச் சேரும் என்று அலசி ஆராயவே நேரமெல்லாம் கழிந்தது. முடிவில், அவர்கள் வீட்டின் முன் இரு பெரும் குவியல்கள் நின்று கொண்டிருந்தன.

வருடங்கள் கடந்தன. ஒரு சிறு மாற்றமும் இல்லை. தினமும் காலை அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். எப்பொருள் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி ஒரு வாக்குவாதம் நடக்கும். அவர்களுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. ஊரார் அவர்களை ‘சிடு சிடு கிழவர்கள்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். எவராலும் அவ்விருவர் முகத்திலும் ஒரு புன்முருவலைக் கூடப் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், ஒரு நாள் காலை அவர்கள் வெளியில் சென்று பார்த்தால், அவர்களுடைய மலை போன்ற குவியல்களிரண்டும் நன்கு கலைக்கப்பட்டு ஒன்றாகக் கலந்து கிடந்தது. யாரோ வந்து அனைத்தையும் கலைத்திருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு நாட்கள் அவற்றைப் பிரிக்கச் செலவிட்ட நேரம், முயற்சி அனைத்தும் வீண் போனது.

மிகவும் கோபமடைந்த அந்த சகோதரர்கள், இந்த வேலையைச் செய்தது யாரென்றறிய முயற்சித்தனர். இந்த மலைகளின் அடுத்த பக்கத்தில் இரு குழந்தைகள் விளயாடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அந்த குழந்தைகள் இரண்டு குவியல்களும் ஒன்றாகக் கலப்பது பற்றி சிறிதும் கவலைப் படாமல் ஒவ்வொரு பொருளாக எடுத்து மிகவும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிருவரும் உணமையாகவே மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர்.

இந்த மகிழ்ச்சியான குழந்தைகளைக் கண்ட சிடு சிடு கிழவர்கள், ‘நாம் இவ்வளவு நாட்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்’ என்று உணர்ந்தனர். இந்த பொருட்களையெல்லாம் விளையாடி, அனுபவித்து மகிழ்வதற்கு பதிலாக, எதை யார் விளையாடுவது என்று வாக்குவாதம் செய்வதிலேயே கழித்திருக்கிறோமே என்று வருந்தினர். வாழ்நாட்களை கோபத்திலே கழித்துவிட்டோமே என்று கவலைப்பட்டனர். அதே சமயம், நாம் இப்போதாவது திருந்தினோமே என்று மகிழ்ந்தனர்.

அன்று முதல் எஞ்சியிருந்த நாட்களையெல்லாம் அவர்கள் அனைத்து பொருட்களையும் கலைத்து, ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்து, அந்த இரு குழந்தைகளுடன் விளையாடுவதிலேயே கழித்தனர்.

மக்கள் அவர்களை ‘சிடு சிடு கிழவர்கள்’ என்றழைப்பதை நிறுத்திவிட்டு மாறாக, ‘பெரிய குழந்தைகள்’ என்றழைக்கத் தொடங்கினர்.

பாடல்

ஒரு லட்டுவிற்காக சண்டை மூண்டது இங்கு!
நானே முழுவதும் உண்பேன் என்று சொன்னான் சங்கு!
இல்லை இல்லை தரமாட்டேன் என்று சொன்னான் மங்கு!
இடையில் வந்தாள் அம்மா வேகமாக அங்கு!
கொடுத்தாள் அடி இரு பங்கு!
பாதிப் பாதி பிரித்திடுங்கள் பிறருக்குக் கொடுங்கள் பங்கு!

செயற்பாடு
  • ‘LOVE’ என்ற வார்த்தையை வைத்து ஒரு வீடு வரையவும்.