வகுப்பு 27 – நேர்மை

வகுப்பு 27 – நேர்மை

நேர்மை என்பது என்ன? நேர்மை என்பது எப்போதும் உண்மை பேசுதல். நேர்மை என்பது பிறர் பொருளை எடுக்காமல் இருப்பதும் ஆகும். பொய் பேசினாலோ, ஏமாற்றினாலோ அல்லது திருடினாலோ, பிடிபடும்போது மிகுந்த அவமானமாக இருக்கும். உடனே பிடிபடாவிட்டாலும், பிடிபட்டுவிடுவோம் என்ற உணர்வே துன்பத்தைக் கொடுக்கும். இது ஒரு மோசமான நிலையாகும்.

ஒரு நாள் நீ வீட்டு பாடம் செய்யாதிருந்து, ஆசிரியர் கேட்டபோது செய்து விட்டதாகப் பொய் கூறியிருந்தால் அந்த நாள் முழுவதும் ஆசிரியர் எங்கே நோட்டு புத்தகத்தை திறந்து பார்த்து விடுவார்களோ என்று பயந்து கொண்டேயிருப்பாய் அல்லவா? அதைவிட, ஆசிரியரிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிட்டு, மன அமைதியாக இருக்கலாம் அல்லவா?

உன்னுடைய நண்பன் ஒரு அழகான பென்சில் பாக்ஸ் கொண்டு வந்தான் என்று வைத்துக் கொள்வோம். அதை மறந்து வைத்துவிட்டு போய்விட்டான். நீ கண்டெடுத்தாய். நீ என்ன செய்வாய்? அதை பத்திரமாக வைத்திருந்து மறு நாள் அதை அவனிடம் ஒப்படைப்பாய் இல்லையா? அப்படி செய்யவில்லையென்றால், நீ நேர்மையானவன் இல்லை என்று அர்த்தம். சற்று கற்பனை செய்து பார், அந்த பென்சில் பாக்ஸ் திரும்ப கிடைத்ததற்கு அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான் என்று. அதே நீ கொடுக்காவிட்டால் அவன் வருத்தப்படுவான் இல்லையா? உன் நண்பன் சந்தோஷமாக இல்லையென்றால் நீ மட்டும் சந்தோஷமாக இருந்து விடுவாயா? வகுப்பில் நீ ஏதாவது தொலைத்து விட்டால் நீ வருத்தப்பட மாட்டாயா?

கதை

முன்னொரு காலத்தில் ஒரு மான் தன் இளவலுடன் வசித்து வந்தது. மேய்ச்சலுக்காக புல்லைத் தேடி காட்டுக்குள் சென்றது. ஒரு பெரிய சிங்கத்தால் பிடிக்கப்பட்டது. சிங்கம் அதனைக் கொல்ல முயன்றது. மான் தனக்காக காத்திருக்கும் தன் இளங்கன்றை நினைத்துப் பார்த்தது. அது அழுதுகொண்டே சிங்கத்திடம் கெஞ்சியது ”எனக்கு ஒரு இளங்கன்று இருக்கிறது, அதனைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை. சிறிது கால அவகாசம் கொடுத்தால் அதனை என் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி வருவேன் நீ என்னை உண்ணலாம்”.

சிங்கம் சத்தமாக சிரித்துவிட்டு, “நான் என்ன முட்டாளா உன்னைப் போக விடுவதற்கு? அல்லது வீட்டுக்கு போய் விட்டால், நீ தான் முட்டாளா, திரும்ப வருவதற்கு?” என்றது. மான் சொன்னது, “தயவு செய்து என்னை நம்பு. நான் என் வாழ்நாளில் ஒருபோதும் பொய்யுரைத்ததில்லை. நான் திரும்பி வருவேன்.” சிங்கம் சம்மதித்துப் போக விட்டது. மான் வீட்டுக்கு விரைந்தது. தன் கன்றை நண்பனிடம் ஒப்படைத்து தன் சோகக் கதையை கூறியது. நண்பனும், அதன் கன்றும் அதனை திரும்பப் போகவேண்டாம் என்று கெஞ்சின. அதற்கு மான் ”பொய் கூறி வாழ்வதை விட சாவதே மேல்” என்று கூறியது. மேலும் தன் கன்றிடம் ”எப்போதும் உண்மையே பேச வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும்” என்று சொல்லிவிட்டு காட்டுக்குத் திரும்பியது.

அங்கு சிங்கம் காத்திருந்தது. அது தான் தவறு செய்து விட்டோமோ என்று யோசித்தது. தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற, அந்த மான் திரும்ப வருமா? சிறிது நேரத்தில் மான் வருவதை அது பார்த்தது. தன் கண்களையே அதனால் நம்ப முடியவில்லை. மான் சிங்கத்தின் கருணைக்கு நன்றி கூறி, தான் இப்போது தயாராக இருப்பதாகவும், தன்னை கொன்று தின்னலாம் என்றும் கூறியது.

இதனைக் கேட்டு கொடூரமான சிங்கத்தின் மனமும் உருகியது. அதன் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சிங்கம் ”உண்மையின் மீதான உனது பற்றுதல் எனது இதயத்தை மாற்றி விட்டது. நான் உன்னைக் கொல்லமாட்டேன்” என்று கூறியது. மான் சந்தோஷமாக வீடு திரும்பியது.

செயற்பாடு
  • வாய்மையை வலியுறுத்தும் ஒரு நாடகம் நடித்துக் காட்டலாம்.