வகுப்பு 25 – சத்யம்

வகுப்பு 25 – சத்யம்
கதை : எப்பொழுதும் உண்மையைச் சொல்

சிறுமி லதா சமயலறையில் உள்ள ஒரு அழகான ஜாடியை உடைத்துவிட்டாள். அவள் மிகவும் பயந்துவிட்டாள். அவள் வீட்டில் தனியாக இருந்தாள். அதனால் அவள் உடைத்ததை எவரும் பார்த்திருக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். அதனால், அம்மா கேட்டால், பழியை வேறு யார் மேலாவது போட்டுவிடலாம் என்று முதலில் நினைத்தாள்.

ஆனால், அவளுடைய மனசாட்சி பேச ஆரம்பித்தது, “லதா, உனக்குத் தெரியும் வேறு யாரும் இதைச் செய்யவில்லை என்று. இருப்பினும் ஏன் உண்மையை மறைக்க முயற்சிக்கிறாய்? அம்மாவிடம் நடந்ததை சொல்லிவிடு. அவர் முதலில் கண்டிப்பாக வருத்தப்படுவார், கோபப்படுவார். ஆனால், பிறகு நிச்சயம் உன்னை மன்னித்துவிடுவார். அவர் உன்னை எப்பொழுதும் உண்மையே பேசு என்றுதானே சொல்கிறார்? இல்லையா? உன் பள்ளி ஆசிரியர்கள் கூட அதைத்தானேக் கூறுகிறார்கள்? இல்லை?” என்று கூறியது.

அதனால் லதா தன் அம்மாவிடம் சென்று, உயரத்தில் இருந்த அந்த ஜாடியை எடுக்க முயற்சிக்கும் போது அது தன் கை தவறி எப்படிக் கீழே விழுந்தது என்று நடந்த அனைத்தையும் உண்மையாக விவரித்தாள். ஆஹா! உண்மையைக் கூறிய லதாவுக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது. பிறகு அவள் அம்மா கோபமாக இருக்கிறாரா என்றறிய மெதுவாகத் தன் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். ஆனால் இல்லை, அவள் அம்மா அவளைத் தூக்கி அனைத்து முத்தமிட்டு, “என் செல்லமே, நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எப்பொழுதும் சத்தியத்தை விடாதே, ஏனெனில் சத்தியமே கடவுள்” என்று கூறினாள்.