வகுப்பு 20 – இறைவனே உனது உற்ற தோழன்

வகுப்பு 20 – இறைவனே உனது உற்ற தோழன்
அறியப்படும் பண்பு: நம்பிக்கை
ஜடிலாவின் கதை

ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முழுமையான நம்பிக்கை மிகவும் முக்கியம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடிக்கடி வலியுறுத்தினார். நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த, கீழ்கண்ட கதையை அவர் கூறினார். ஜடிலா என்ற சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். பள்ளிக்குப் போய் சேர, ஒரு அடர்த்தியான காடு வழியாக செல்ல வேண்டியிருந்ததால் அவனுக்கு பயமாக இருந்தது. இந்த விஷயத்தை அவன் தாயுடன் பகிர்ந்து கொண்டான்.

அதற்கு அவன் தாய் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், மதுசூதன் என்று அழைத்தால் உடனடியாக ஜடிலாவைக் காப்பாற்ற வந்து விடுவார் என்றும் தைரியம் கூறினார். அதற்கு ஜடிலா “மதுசூதனன் யார்?” என்று கேட்ட போது, அவன் தாய், மதுசூதனன் ஜடிலாவின் அண்ணன் என்றும், அவன் அந்தக் கட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தான் ஜடிலாவின் அண்ணன் என்று தாய் கூறியிருந்தாள், ஏனெனில் பகவானுக்கு மற்றொரு பெயர் மதுசூதனன் அல்லவா? இதற்கு பிறகு, ஒரு நாள், ஜடிலா காடு வழியாக செல்லும் போது, அவனுக்கு பயம் அதிகமாகி, “மதுசூதன் அண்ணா, நீ எங்கு இருக்கிறாய்? என்னை வந்து காப்பாற்று. எனக்கு பயமாக இருக்கிறது” என்று உரத்த குரலில் அழுதான்.

ஜடிலா, மனமார்ந்த, உண்மையான நோக்கத்துடன் அண்ணாவை அழைத்தான்; மேலும் தாயின் வார்த்தைகளில் அபார நம்பிக்கை வைத்திருந்ததால், மதுசூதனன் இருப்பதையோ, தன் உதவிக்கு வருவதையோ சற்று கூட ஜடிலா சந்தேகப் படவில்லை. இதற்கு மேல் கடவுளால் அங்கு வராமல் இருக்க முடியவில்லை. ஜடிலாவிற்கு முன் தோன்றி, “நான் வந்து விட்டேன். பயப்படாதே!” என்று கூறினார்.

இப்படி சொல்லி விட்டு, கடவுள் ஜடிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவனை பாதுகாப்பாகக் கூட்டிச் சென்று, பள்ளிக்கு வழியை காண்பித்தார். மேலும், ஜடிலா எப்போதெல்லாம் அவரைக் கூப்பிடுகிறானோ, அப்போதெல்லாம் வருவதாக கடவுள் வாக்களித்தார்.

ஜடிலா மாலை வீடு திரும்பிய பிறகு, தாயிடம் எல்லாவற்றையும் விவரித்த போது, தாய் பூரித்து போனார். பல வருடங்களாக பகவான் கிருஷ்ணரை பிரார்த்தித்த போதும், ஜடிலாவின் கண் முன் உண்மையாக காட்சியளிப்பார் என்று கனவில் கூட தாய் நினைத்ததில்லை. இந்த சிறு கதையின் மூலம், நம்பிக்கை இருந்தால், எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.