வகுப்பு 19 – நன்றியறிதல்

வகுப்பு 19 – நன்றியறிதல்

யாராவது உங்களுக்கு உதவும்போது நீ நன்றி கூறுகிறாயா? யாருக்கெல்லாம் நாம் நன்றி கூற வேண்டும்? பெற்றோர், ஆசிரியர், இறைவன், நண்பர்கள்………… இறைவனுக்கு நன்றி கூற எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

இறைவன் நம்மை படைத்தார். நம்மிடம் உள்ள அனைத்து திறமைகளும் அவர் கொடுத்ததுதான். நாம் உலகில் எவ்வாறு ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கற்பிக்க தனது தூதர்களையும் அனுப்புகிறார். நமக்காக பணியாற்றுபவர்களுக்கு நாம் எப்போதும் நன்றி கூற வேண்டும். நாமும் அவர்களிடம் கருணையுடனும் உதவிகரமாகவும் நடந்துக் கொள்ள வேண்டும். நாம் தினமும் இறைவனுக்கு அவர் நமக்கு அளித்துள்ளவைகளுக்கு நன்றி கூற வேண்டும். நாம் இறைவனைக் கண்ணால் காண முடியாத போது நாம் அவருக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்படி காட்ட முடியும்? எப்படி சொல்ல முடியும்? இதற்கான சிறந்த வழி, நாம் ஒருவருக்கொருவர் அன்போடு இருப்பதேயாகும். நமது நன்றி நமது இதயத்தில் இருந்து வரவேண்டும். இறைவனுக்கு பிடித்தமான செயல்கள் எவையோ அவற்றை செய்ய வேண்டும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்

இதோ, ஒரு சிறுவன் எவ்வாறு சிறிய பூனைக்குட்டியிடமிருந்து அன்போடு இருப்பதை கற்றுக்கொண்டான் என்பதை குறித்த ஒரு கதை.

கதை : அன்பான பூனை

சுனில் மிகவும் தனிமையில் இருந்தான். அவனுடன் விளையாட யாருமில்லை. அவன் என்ன செய்ய முடியும்? அப்போது ஒரு பூனை ஜன்னல் வழியாக உள்ளே குதித்தது. சூ,சூ என்று அதை விரட்டினான். அப்போதுதான் கவனித்தான் அது நொண்டிக்கொண்டிருந்ததை. “வெட்கக்கேடு, என்ன பிரச்னை உனக்கு? கேட்டுக் கொண்டே, அதனை மடியில் இருத்தி பார்த்தபோது, பாதத்தில் அடிபட்டிருந்தது தெரிந்தது. “கொஞ்சம் பொறு. என்னசெய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். கொஞ்சம் களிம்பு போடுகிறேன்” என்று கூறி அதனை களிம்பு இருந்த குளியலறைக்கு எடுத்துச்சென்று பாதத்தில் போட்டான். பூனை முனகிக்கொண்டே அவன் பாதத்தில் உரசியது, நன்றி சொல்வது போல. இரவு சாப்பாட்டு வேளையில் அந்த பூனைக்கும் உணவு கொடுத்தான், பிறகு அது அவன் படுக்கச் சென்ற போது படுக்கையில் குதித்து இரவு முழுதும் அங்கேயே தூங்கியது.

மறு நாள் காலை அம்மா கூறினார், “இதோ பார் சுனில், அது உன் பூனையல்ல. யாராவது இது தொலைந்து போனதற்காக மிகவும் வருந்துவார்கள். நீ அண்டையில் புதிதாக வந்தவர்களிடம் அவர்கள் பூனை ஏதாவது தொலைந்து விட்டதா என்று கேட்டு வரவேண்டும்.” என்றார். சுனில் பூனையை எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குச் சென்று கதவை தட்டினான். யாருடைய பூனையாவது தொலைந்து விட்டதா என்று கேட்க வாயெடுக்கும் முன் ஒரு சிறுவன் ஓடி வந்து, “அம்மா, அம்மா, இங்கு யாரோ என் பூனையுடன் நிற்கிறார்கள்” என்று கத்திக்கொண்டே, பூனையை வாங்க கையை நீட்டினான். அதை செல்லமாக கட்டி அணைத்துக்கொண்டான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என் பூனை திரும்ப வந்ததற்கு. நான் அது எங்கேயோ ஓடிவிட்டது. இனிமேல் அதை பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்தேன். அப்போது அவர்கள் அம்மா உள்ளே நுழைந்தார்கள். “ஓ ரொம்ப நன்றி! எங்கள் பூனையைக் கண்டுபிடித்ததற்கு! ஒரு நாய் அதைக் கடித்துவிட்டு ஓடிவிட்டது, நீ அதனை மிகவும் அன்புடன் கவனித்திருக்கிறாய். நீ இங்கு வந்து விளையாடலாம்.” பூனையிடம் அன்பாக இருந்ததால், சுனில் பக்கத்து வீட்டில் விளையாடுவதற்கு வரவேற்கப்பட்டான்.