வகுப்பு 16 – வீட்டிலும் பள்ளியிலும் சுத்தம்

வகுப்பு 16 – வீட்டிலும் பள்ளியிலும் சுத்தம்

நீ உன் வீட்டையும் பள்ளியையும் எவ்வாறு சுத்தமாக வைத்திருப்பாய்? அசுத்தமான நீரிலும், குப்பைக் குவியலிலும் தான் கொசுக்களும் நோய் பரப்பும் பூச்சிகளும் உற்பத்தியாகின்றன. அதனால், நாம் நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்கவேண்டியது அவசியமாகிறது.

கதை : குரங்கு புத்தி

ஒரு நாள் அனில் என்ற சிறுவன் தன் பெற்றோருடன் மிருகக்காட்சி சாலை சென்றான். சிறியது முதல் பெரியது வரையுள்ள அனைத்து மிருகங்களையும் நன்கு கண்டு களித்தான். குட்டி குட்டி அணில்கள், கம்பீரமான சிங்கம், சீரும் பாம்புகள், குளத்தில் நீந்தும் வாத்துகள், வண்ணமய மீன்கள் மேலும் பலவற்றைக் கண்டான்.

வெகுதூரம் நடந்ததால், அவனுக்குப் பசியெடுத்தது. அவன் தன் அம்மாவிடம் ஏதேனும் சாப்பிடக் கொடுக்குமாறு கேட்டான். அம்மா வாழைப்பழம் கொடுத்தாள். அணிலுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும்.

அவன் அதை சாப்பிட முற்படும்போது ஒரு குரங்கு அவனையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான். கையிலிருந்த வாழைப்பழத்தை அந்தக் குரங்கிற்குக் கொடுத்துவிட்டு, தனக்கு வேறொரு வாழைப்பழம் வாங்கிக்கொண்டான்.

பழத்தை சாப்பிட்டுவிட்டு அனில் என்ன செய்தான்? தோலைத் தரையில் வீசினான்.

குரங்கோ பழத்தை சாப்பிட்டது. அனிலை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தோலை குப்பைத் தொட்டியில் போட்டது.

எவ்வளவு அவமானமாகயிருந்தது அனிலுக்கு?

எப்படித் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்று மிருகங்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. பூனைக் குழி தோண்டி உபயோகப்படுத்தும். பின்னர் தன் கால்களால் மண்ணைத் தள்ளிவிட்டு அந்தக் குழியை மூடிவிட்டுச் செல்லும். நாயும் மேலும் பல மிருகங்களும் தம் உடலையும் தம் குட்டிகளின் உடலையும் நாக்கால் நக்கியே சுத்தம் செய்யும். இப்படிப் பல வழிகளில் அவைகள் சுத்தம் காக்கும். மனிதர்களாகிய நமக்கோ இரண்டு கைகள் இருப்பதனால், நம்மைச் சுத்தமாக வைக்கப் பல சுலபமான வழிகள் உள்ளன.

பேருந்து மற்றும் கார் ஜன்னல் வழியாகக் குப்பைகளை வீசி எரியாதீர்கள். பென்சிலைச் சீவும் பொழுது ஒரு குப்பைத் தொட்டிக்கு மேல் பென்சிலைப் பிடித்துக்கொண்டு சீவுங்கள். காகிதம் மற்றும் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுங்கள். சுவற்றிலோ, மேஜை மேலோ அல்லது புத்தகங்களிலோக் கிறுக்காதீர்கள். விளையாடி முடித்ததும் உங்கள் பொம்மைகளை எடுத்து வையுங்கள்.

பாடல்

“Bits of paper”

Bits of paper, bits of paper(2) Lying on the floor (2) Makes the place untidy(2) Pick them up(2)

செயற்பாடு
  • இரண்டு சிறுவர்கள் / சிறுமியரின் படங்களை வரையவும். ஒருவரை Mr/Ms சுத்தம் என்றும் மற்றொருவரை Mr/Ms அசுத்தம் என்றும் பெயரிடுக.
  • இந்த இருவரில், யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்று குழந்தைகளிடம் கேளுங்கள். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்றும் கேளுங்கள்.