வகுப்பு 50 – நன்றி

வகுப்பு 50 – நன்றி
கதை
இறைவனுக்கு நன்றி:

ஒரு பாலைவனத்தில் சிறிய பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே பசுமையின் அடையாளமே இல்லாத நிலையில் நாள் முழுவதும் அந்தப் பறவை வெம்மையான மணலைச் சுற்றி குதித்து குதித்து வாழச் செய்தது. அவ்வழியே கடவுளைக் காணச் சென்ற தேவன் ஒருவர் சிறிய பறவையைக் கண்டு பரிதாபம் கொண்டார். அவர் அதன் அருகே சென்று, “ஓ சிறிய பறவையே! இந்த வெப்பமான பாலைவனத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நான் உனக்காக ஏதேனும் செய்யக் கூடுமோ?” என்றார். சிறிய பறவை, “நான் என் வாழ்க்கையில் திருப்தியுடன் இருக்கிறேன். ஆனால் இங்குள்ள வெப்பம் தாங்க இயலாததாக இருக்கிறது. என் பாதமிரண்டும் பொசுங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு ஒரே ஒரு மரம் இருந்தால் போதும்! நான் மகிழ்வடைவேன்” என்றது. அதற்கு தேவன், “இந்த வெப்பமான பாலைவனத்தில் மரம் வளரச் செய்வது என்பது என் சக்திக்கு மீறிய செயல். நான் இறைவனை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவருடன் பேசிப் பார்க்கிறேன்; அவரால் உன் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியுமா எனக் கேட்கிறேன்” என்றார். பிறகு இறைவனை அடைந்த தேவன், “கடவுளே! தாங்கள் சிறிய பறவைக்கு உதவி செய்ய முடியுமா?” என்றார். இறைவன் கூறினார் “நான் ஒரு மரத்தை அங்கே வளர்க்க இயலும். ஆனால் அந்தப் பறவையின் விதி அதற்குத் தடையாக உள்ளதே!” என்றார். “நான் ஏதும் மாற்ற இயலாது! இருந்தாலும் எனது செய்தியை அவளிடம் கூறு! அதுவே அவள் வெப்பத்தைத் தாங்கி வாழ உதவும்” என்றார். “அவளிடம் ஒரு சமயத்தில் ஒரு காலால் மட்டும் குதிக்கச் சொல்லுங்கள். இதன் மூலம் தன் ஒரு கால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளவும் இன்னொரு கால் ஒய்வு கொண்டு பின் அடிக்கடி கால்களை மாற்றிக் கொள்ளவும் இயலும். இது ஒரு கால் மூலம் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டால் மற்றொரு கால் ஒய்வு எடுத்துக்கொண்டு துன்பத்தில் இருந்து குணமடைய இயலும். மேலும் அவளிடம் கூறுங்கள், அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல விஷயங்கள் அனைத்தையும் நினைவு கொண்டு அதற்காக இறைவனுக்கு நன்றி கூறச் சொல்லுங்கள்” என்றார். தேவன் சிறிய பறவை இருந்த இடத்திற்கு வந்தார், இறைவனின் இந்த செய்தியைத் தெரிவித்துச் சென்றார். இறைவனின் இந்த ஆலோசனை பறவைக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. தான் வசதியாக வாழ வேண்டி இறைவனிடம் அவர் மேற்கொண்ட முயற்சிக்கு தேவனுக்கு நன்றி செலுத்தியது. சில நாட்களிலேயே தேவன் அதே பாலைவனத்தைக் கடந்து செல்ல நேரிட்டது; பறவையைப் பார்த்து செல்ல முடிவு செய்து கீழே இறங்கினார். அவர் சிறிய பறவை அந்த பாலை வனத்தின் மத்தியில் பெரிய பசுமையான மரத்தில் அமர்ந்திருக்கக் கண்டார். தேவன் பறவை வசதியாக வாழ்வதைக் கண்டு மகிழ்ந்தாலும் இறைவன் இந்தப் பறவையின் விதிப்படி மரம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற ஆலோசனை கூறியிருந்ததால் ஏமாற்றம் அடைந்தார். அவர் இறைவனிடம் சென்றடைந்து, பறவையின் முழுக் கதையையும் கூறினார். இறைவன், “நான் ஒருபோதும் உங்களிடம் பொய் உரைக்கவில்லை. பறவையின் விதிப்படி அங்கு எந்த மரமும் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் நீங்கள் என்னுடைய செய்தியை அவளுக்குத் தெரிவித்த பிறகு கடவுள் அவளுக்கு அளித்த கனிவான அனைத்துக்கும் அவளை நன்றி தெரிவிக்கக் கோரியதால் அவள் அந்த வார்த்தைகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தாள். அவள் தன் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சாத்தியமான நிகழ்வையும் நினைவு கூர்ந்து தூய இதயம் கொண்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்தாள். நானும் அவளுடைய நன்றி உணர்வினால் நெகிழ்ந்து போனேன். அதுவே அவளது விதியை மாற்றக் காரணமாக இருந்தது” என்றார். தேவன் இப்பதிலால் மகிழ்ச்சியடைந்தார். சிறிய ஒரு நன்றியே நம் வாழ்வில் மிகவும் உயர்ந்ததை அளிக்க வல்லதாகிறது.

நீதி

இந்த உலகம் போதிய அளவிற்கு அழகிய மலைகளையும், பசுமையான புல்வெளிகளையும் பிரமிக்கத்தக்க ஆகாயங்களையும் தூய அமைதி கொண்ட ஏரிகளையும் பெற்றிருக்கிறது. போதிய பசுமையான மரங்கள் அடர்ந்த காடுகளையும் பூக்கள் நிறைந்த வயல் வெளிகளையும் மணல் கொண்ட கடற்கரைகளையும் கொண்டுள்ளது. நிறைந்த நட்சத்திரங்களையும் ஒவ்வொரு நாளும் புதிய சூரிய உதய – சூரிய அஸ்தமனத்தைத் தரும் உறுதியையும் கொண்டுள்ளது. பாராட்டவும் அனுபவிப்பதற்கும் உலகம் இதற்கு மேல் என்ன பெற்றிருக்க வேண்டியுள்ளது?” நன்றி என்பதே நாம் நமக்கு உருவாக்கிக் கொள்ளவேண்டிய கரன்சி நோட்டுக்களாகும்; வங்கிகள் திவாலாகிவிடும் எனும் அச்சமேதுமின்றி செலவு செய்ய இயலும். உங்கள் இதயத்தில் நன்றி இருந்தால் பிறகு உங்கள் கண்களில் ப்ரம்மாண்டமான இனிமை தோன்றும்.