வகுப்பு 47 – அமைதி

வகுப்பு 47 – அமைதி
கதை
அமைதியின் உண்மையான பொருள்.

முன்னொரு காலத்தில் அமைதியை வர்ணித்து மிக நல்ல ஒவியம் வரைந்த ஒவியக் கலைஞருக்கு அரசன் பரிசு ஒன்றை வழங்கினான். பல ஒவியர்கள் முயன்று ஒவியம் வரைந்தார்கள். அரசனும் எல்லா படங்களையும் பார்த்தான். அவற்றுள் இரண்டு ஒவியங்களை மட்டும் அரசன் விரும்பினான். அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

ஒரு படம் அமைதியான ஏரி; அந்த ஏரி தன்னைச் சுற்றியுள்ள உயர்ந்த அமைதியான மலைகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது. உயரே பார்க்கையில் பரந்த பஞ்சு போன்ற வெண்ணிற மேகங்களுடன் இருக்கும் நீல வண்ண ஆகாயம்.

மற்றவர் வரைந்த படமும் கூட மலைகளைக் கொண்டிருந்தது. ஆனால் இவை யாவும் கம்பளம் விரித்தாற் போலவும் வெறுமையுடனும் இருந்தன. மேலே பார்த்தால் கோபம் கொண்ட ஆகாயமும் அதில் இருந்து மின்னல் கூடிய மழைப் பொழிவும் இருந்தன. மலைக்குக் கீழே சுழன்று விழுவதைப் போல நுரைதள்ளும் நீர் வீழ்ச்சி.

இது ஒருபோதும் அமைதியாகத் தோன்றவில்லை

ஆனால் அரசன் கூர்ந்து பார்க்கையில் நீர்வீழ்ச்சியின் பின்னால் இருந்த பாறையின் வெடிப்பில் இருந்து வளர்ந்த சிறிய புதர் இருந்தது. புதரில் ஒரு தாய்ப்பறவை தனது கூட்டைக் கட்டியிருந்தது. அங்கே கோபம் கொண்டு பொங்கி வந்த நீரின் மத்தியில் தாய்ப் பறவை தன் கூட்டில் முழு அமைதியுடன் அமர்ந்திருந்தது.

இவற்றுள் எந்த படம் பரிசு பெற்றதாக நீங்கள் எண்ணுகிறீர்கள்? அரசன் இரண்டாவது படத்தைத் தேர்ந்தெடுத்தான். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? “ஏனெனில், அமைதி என்றால் சத்தமோ, கஷ்டமோ அல்லது கடின உழைப்போ ஏதும் இல்லாத இடத்தில் இருப்பது என்பதாகாது.

அமைதி என்பது இத்தகைய அனைத்து இடங்களிலும் இருந்துகொண்டு இதயத்திலும் அமைதியுடன் வாழ்வதே! இதுவே அமைதி என்பதன் உண்மையான பொருள் ஆகும்.