வகுப்பு 46 – வாழ்க்கை ஒரு கண்ணாடி

வகுப்பு 46 – வாழ்க்கை ஒரு கண்ணாடி
கதை
பிரதிபலிப்புகள்

ஒருமுறை ஒரு மனிதன் ஹிமாசல ப்ரதேசத்தின் மலைப் பகுதிகளில் இருந்து புனிதமான பள்ளத்தாக்கை அடைய நீண்ட தூரம் நடந்தான். அது மிகவும் தெய்வீகமான அழகைக் கொண்டிருந்ததால் அந்த கிராமத்தினர் கடவுளரின் பள்ளத்தாக்கு என்றே அழைத்தனர்.

அவர்கள் மலைகளின் கடவுள் அங்கே வாழ்வதாகவும் தம்முடன் பேசுவதாகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த மனிதன் தாம் எண்ணிய அவ்விடத்தை அடைந்த போது ஆங்காங்கே அழகிய மலைகளின் மலர்ச்சியோடு கூடிய புல்வெளிச் சமநிலங்கள் மற்றும் அரைவட்ட வடிவில் அமைந்த மலைத்தொடர்களால் சூழப்பட்ட மூச்சையடைக்கச் செய்யும் அழகிய பள்ளத் தாக்கைக் கண்டான்.

அவன் நீண்ட நேரம் காத்திருந்து மலைகளின் கடவுள் பேசுவார் என எதிர் பார்த்தான். ஆனால் அமைதியை மட்டுமே சந்தித்தான். எனவே, பொறுமையிழந்தவனாய், “நீங்கள் ஏதும் கூறக் கூடாதா?” எனக் கூவினான்.

மலைகளின் கடவுள் “நீங்கள் ஏதும் கூறக் கூடாதா?” எனப் பதில் அளித்தார்.

அவன் கோபம் கொண்டு மேலும் கத்தினான்,

“நீ இவ்வாறு கத்தும் அளவுக்கு முரடனா?” என்று.பதில் மிகவும் சத்தமாகவே வந்தது:”நீ இவ்வாறு கத்தும் அளவுக்கு முரடனா?” என்று.

இதனால் அந்த மனிதன் திட்டும் அளவிற்கு கோபமடைந்து, “நான் உங்களை வெறுக்கிறேன்!” என்றான். சரியான தருணத்தில் பதிலும் வந்தது, “நான் உங்களை வெறுக்கிறேன்!”

மனிதன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என முடிவு செய்து பள்ளத்தாக்கை விட்டு வெளியே வந்து விட்டான்.

சில வருடங்கள் கழித்து முனிவர் ஒருவர் அந்த கிராமத்திற்கு வருகை தந்தார். அவர் கிராமத்தினரிடம் தான் கடவுளரின் பள்ளத் தாக்கில் இருந்து வருவதாகவும் அவ்விடம் மிகவும் புனிதமான அமைதி கொண்டது என்றும் கூறினார்.

அந்த இடம் சென்று வந்த மனிதனோ முனிவருக்கு எதிராக எழுந்து அவரது பேச்சுக்கு எதிராகவும் கோபமாகவும் தன் அனுபவத்தைக் கூறினான்.

அவனுடைய அனுபவத்தைக் கேட்ட முனிவர் புன்முறுவல் கொண்டு, “உன்னை மீண்டும் அங்கு அழைத்துச் செல்லும் ஒரு வாய்ப்பை அளிப்பாயா?” என்றார்.

தயக்கத்துடனும் அதே நேரம் பயபக்தியுடனும் அவன் சம்மதித்தான்.

பல நாட்கள் நடந்து சென்று அவர்கள் கடவுளரின் பள்ளத்தாக்கை அடைந்தனர். ஏமாற்றம் கொண்டிருந்த மனிதன் ஏற்கனவே சென்ற போது தான் பெற்ற கசப்பான அனுபவத்தை நினைவில் கொண்டு, “மலைகளின் கடவுளிடம் நான் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். நீங்கள் மன நிறைவு கொள்ளும் வரை அவரிடம் பேசி அவமதிப்பைப் பெறுங்கள்!” என்றான்.

முனிவர் புன்முறுவல் கொண்டார். அவர் தம் கரங்களைக் குவித்து உரக்கக் கூவினார்,”தங்களை வாழ்த்துகிறேன்!” என்று.

உடனே மலைகளின் கடவுள் “தங்களை வாழ்த்துகிறேன்!” என்று பதில் அளித்தார்.

முனிவர் பிறகு,”நான் உங்களை நேசிக்கிறேன்!” எனக் கத்தினார்.

சத்தமாகவும் தெளிவாகவும் பதில் கிடைத்தது, “நான் உங்களை நேசிக்கிறேன்!” என்று.

உடன் வந்து ஆச்சரியம் கொண்டிருந்த சக மனிதனிடம்,” இதோ பார். நான் அவரிடம் மரியாதையும் நல்லதையுமே கொண்டிருந்தேன். அவரும் அதையே நல்ல தன்மையுடன் திரும்ப அளித்தார்.

வாழ்க்கையும் கூட இது போன்றதே! நீங்கள் அன்பையும் கனிவையும் உற்சாகத்தையும் பரவச் செய்தால் பதிலுக்கு அதையே பெறுவீர்கள்.

மாறாக வெறுப்பு, துன்பம் மற்றும் முரட்டுத் தனத்தை மட்டும் கொண்டு இவ்வுலகிற்கு அளித்தீர்களானால் மீண்டும் இதையே பெறுவீர்கள். ஆகவே, நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால் மற்றவருக்கும் மகிழ்ச்சியை அளியுங்கள்” என்றார்.

இளம் கிராமத்து மனிதர் செய்த தவறையே நம்மில் பலரும் செய்து வருகின்றனர். நாம் ப்ரச்சனைகளைச் சந்திக்கையில் நாம் நம்முள் காண வேண்டும். அதற்குப் பதிலாக இவ் உலகத்தை – தம் குடும்பத்தை, நண்பர்களை, வீட்டை, பள்ளியை, சமூகத்தை, இது மட்டுமல்லாது போக்குவரத்து வெப்ப நிலை உள்ளிட்ட பலவற்றையும் கூட குறை கூறுகிறோம்.

வாழ்க்கை என்பது எதிரொலிக்கும் மலையைப் போன்றதே என்பதையும் நாம் எதைத் தருகிறோமோ அதையே எளிதில் திரும்பவும் பெறுகிறோம் என்பதையும் உணர்வதில்லை.