வகுப்பு 45 – கடின உழைப்பு

வகுப்பு 45 – கடின உழைப்பு
கதை
மறைந்த சொத்து

முதியவர் ஒருவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். இந்த நான்கு பேருமே சோம்பேறிகளாக இருந்தார்கள்.

ஒரு நாள் முதியவர் நோய்வாய்ப் பட்டார். படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.தமது மகன்கள் யாரும் வேலை செய்ய முன்வராததால் அவர்களுடைய எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டிருந்தார். அவர்களோ தமக்குள்ள அதிர்ஷ்டம் ஒன்றே நல்லது செய்யும் என நம்பியிருந்தனர்.

முதியவரின் உடல் நலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. அவர் தம் மகன்களிடம் அவர்தம் எதிர்காலத்தைப் பேச முடிவு செய்தார். இருந்தாலும் அவர்கள் இது பற்றிப் பேசுவதாக இல்லை.

முடிவில் அந்த முதியவர் வேலை செய்ய வேண்டுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வழியொன்றைக் கண்டார். அவர் தம் மகன்கள் அனைவரையும் அழைத்து தம் படுக்கை மீது அமரக் கோரினார். ஒரு பெட்டி நிறைய தங்க நாணயங்களையும் விலை உயர்ந்த ரத்தினங்களையும் வைத்துள்ளதாகவும் அந் நால்வருக்கும் அதை சமமாகப் பங்கிட்டுத் தர விரும்புவதாகவும் கூறினார்.

இளம் மைந்தர்கள் அனைவரும் மனம் மகிழ்ந்து அந்த பொக்கிஷத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டனர். முதியவர், “பொக்கிஷத்தை எங்கு வைத்துள்ளேன் என்று நினைவு படுத்திக் கூற இயலவில்லை. இருப்பினும் பொக்கிஷப் பெட்டியை நம்முடைய நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன். உண்மையாகவே நான் எங்கு புதைத்து வைத்தேன் என உறுதியாகக் கூற இயலாதிருக்கிறேன்” என்றார்.

சோம்பேறியான இளம் மைந்தர்கள் மனம் மகிழ்ந்தாலும் பொக்கிஷம் மறைத்து வைக்கப்பட்ட இடத்தை முதியவர் மறந்து விட்டதை எண்ணி வருந்தவே செய்தார்கள்.

சில நாட்கள் கழித்து முதியவரும் இறந்து விட்டார். மகன்கள் நால்வரும் பொக்கிஷப் பெட்டியைக் காண நிலத்தைத் தோண்ட முடிவு செய்தார்கள். அவர்கள் மிகக் கடுமையாக உழைத்து நிலத்தைத் தோண்டினார்கள். அவர்களால் பொக்கிஷப் பெட்டியைக் கண்டுபிடிக்க இயல வில்லை.

இறுதியாக தம் நிலத்தில் ஒரு பகுதியில் வித்தியாசமாகக் குழியொன்று காணவே அங்கே தோண்டுவது என முடிவு செய்தார்கள். அந்த இடத்தில் மட்டும் ஆழமாகத் தோண்ட ஆரம்பித்தார்கள்; ஆனால் ஏதும் வருவதற்கு மாறாக தண்ணீர் வெளி வர ஆரம்பித்தது.

அவ்வழியே சென்ற சிலர் அங்கு நீர் பெருகி வழிவதைக் கண்டு இங்கு விவசாயம் செய்வது நன்மை தரும் எனக் கூறிச் சென்றனர். இளைஞர்கள் இதைக் கேட்டபிறகு காய்கறி விதைகளையும் கீரை மற்றும் பூ தரும் செடிகளையும் பதித்து வளர்த்தார்கள்.

அளவற்ற தண்ணீர் வளம் இருந்ததால் சில வாரங்களிலேயே அந்த நிலம் சத்து மிக்க காய்கறி மற்றும் கீரைச் செடிகள் கொண்ட பசுமையான ஒரு தோட்டமாகி விட்டது.

இளைஞர்கள் காய்கறிகளை நல்ல விலைக்கு விற்றார்கள். அதிக செல்வத்தையும் சம்பாதித்தார்கள்.

பிறகு தான் அவர்கள் கடின உழைப்பே ‘பொக்கிஷப் பெட்டி’ என்று தந்தையார் குறிப்பிட்டதாக உணர்ந்தார்கள். படிப்படியாக தம் சோம்பேறித்தனத்தை வென்று கடினமாக உழைத்தார்கள்; மிகுந்த செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

கடின உழைப்பே எப்போதும் ஊதியமளிக்க வல்லது.