வகுப்பு 44 – அன்பைப் பகிர்தல்

வகுப்பு 44 – அன்பைப் பகிர்தல்
கதை
மிகவும் அழகிய இதயம்

ஒருநாள் மிகவும் கூட்டம் அதிகமான ஒரு இடத்தில் இளைஞன் ஒருவன் சத்தமிடத் துவங்கினான்.

“மக்களே! என்னைக் கவனியுங்கள். உலகிலேயே மிக அழகிய இதயத்தைப் பெற்றுள்ளேன்.”

மக்கள் பலர் அவனைப் பார்த்து அவனுடைய இதயம் மிகவும் நேர்த்தியாகவும் குறைகள் ஏதுமில்லாமலும் இருப்பதைக் கண்டு வாயடைத்து நின்றனர்.

அது மிகவும் அதிசயிக்கும் வகையில் காணப்பட்டது. மக்களில் பெரும்பாலோர் அவனுடைய இதயத்தின் அழகால் மயங்கிப் போய் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இருந்தாலும் அங்கு வந்த முதியவர் ஒருவர் இளைஞனிடம் சவால் விட்டார், “இல்லை என் மகனே! நான்தான் உலகிலேயே மிக அழகான இதயத்தைக் கொண்டுள்ளேன்” என்றார்.

“பிறகு அதைக் காண்பியுங்கள்!” என்றான் இளைஞன்.

முதியவர் தன் இதயத்தை இளைஞனிடம் காண்பித்தார். அது மிகவும் கடினமாக நேர்த்தியில்லாமல், எல்லா இடங்களிலும் தழும்புமாக இருந்தது. அதுமட்டுமின்றி அவரது இதயம் எந்த உருவமும் இல்லாமல் இருந்தது. அது துண்டு துண்டாக வெவ்வேறு நிறங்களை ஒன்று சேர்த்தாற் போல இருந்தது. ஆங்காங்கு முரடான விளிம்புகளுமிருந்தன. சில பகுதிகள் அகற்றப்பட்டு வேறு ஒன்றால் பொருத்தப்பட்டதைப் போல இருந்தது.

இளைஞன் சிரிக்க ஆரம்பித்தான். பிறகு “எனதருமை முதியவரே! நீங்கள் பைத்தியமா என்ன! என் இதயத்தைப் பாருங்கள். என்ன அழகு! குறைகள் ஏதுமில்லை! எந்த வித சிறு குறைபாடும் என் இதயத்தில் காண இயலாது. உங்களுடைய இதயத்திலோ முழுவதும் தழும்புகளும் காயங்களும் குறைபாடுகளுடன் இருக்கிறது. உங்கள் இதயம் மிக அழகு என்று எப்படிக் கூற இயலும்?” என்றான்.

“அன்பு மகனே! என் இதயம் உன்னுடைய இதயத்தைப் போலவே அழகுடையதாகும். அதில் தழும்புகளைப் பார்த்தாயல்லவா! ஒவ்வொரு தழும்பும் நான் என் அன்பை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டதை உணர்த்துகிறது. நான் என் அன்பைப் பகிரும் போதெல்லாம் என் இதயத்தின் ஒரு பகுதியையும் பகிர்ந்து கொள்கிறேன். அதன் பிரதி பலனாக மற்றவர் இதயத்தின் பகுதியைப் பெறுகிறேன். நான் கிழித்தனுப்பிய இடத்தில் அதைப் பொருத்துகின்றேன்”, என்றார் முதியவர்.

இதைக் கேட்ட இளைஞன் அதிர்ச்சியடைந்தான்.

மேலும் தொடர்ந்து முதியவர், “நான் பகிர்ந்து கொண்ட இதயத்தின் பகுதிகள் யாவும் சமமானதுமல்ல, ஒரே வடிவமோ அளவோ கொண்டதுமல்ல; எனவே என் இதயத்தின் பகுதிகள் முழுதும் ஒழுங்கற்ற விளிம்புகளுடன், துண்டு துண்டாக இருக்கிறது. சில நேரங்களில் நான் அன்பைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும் பிரதியாக அன்பைப் பெறாமல் இருந்ததால் என் இதயம் நிலையான உருவமற்று இருக்கிறது. எவ்வித தழும்பும் இல்லாமல் புதியதாகவும் முழுமையானதாகவும் தோன்றும் உன் இதயம் நீ ஒருபோதும் உன் அன்பை யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது.உண்மை இதுதானே!” என்றார்.

இளைஞன் அசைவற்றுப் போய் எவ்வித வார்த்தையும் பேசாது நின்றான். அவனுடைய கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது. அவன் முதியவரிடம் சென்று தன் இதயத்தின் ஒரு பகுதியைக் கிழித்து அதை அவரிடம் கொடுத்தான்.

பௌதீகமான அழகிற்கே பெரும்பாலோர் முக்கியத்துவம் அளித்து மதிக்கின்றனர்.