வகுப்பு 42 – மாற்றம்

வகுப்பு 42 – மாற்றம்
கதை
நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் – உலகத்தையல்ல!

நீண்ட காலத்திற்கு முன் அரசன் ஒருவனின் நல்ல ஆட்சியின் கீழ் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இந்த ராச்சியத்தின் மக்கள் மிகுந்த செல்வத்துடனும் துர்பாக்கியமற்ற மிக வளமான வாழ்க்கையை பெற்றதால் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தார்கள்.

ஒருமுறை அரசன் தொலைத் தூரத்தில் உள்ள சரித்திரப் புகழ் வாய்ந்த புண்ணிய தலங்களைச் சுற்றிப் பார்க்க எண்ணினான். அவன் மக்களுடன் உரையாட வேண்டி கால்நடையாக பயணம் செய்ய முடிவு செய்தான். நீண்ட தொலைவில் உள்ள மக்கள் தம் அரசனுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். அவர்கள் தம் அரசன் மிகவும் நற் குணங்கள் நிரம்பியவன் என்பதில் பெருமை கொண்டனர்.

சில வாரங்கள் பயணம் செய்த பின் அரசன் தன் அரண்மனைக்குத் திரும்பினான். தான் பல புண்ணியத்தலங்களைச் சுற்றிப் பார்த்து தம் மக்கள் வளமாக வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இருப்பினும் அவனுள் ஒரு வருத்தம் இருக்கவே செய்தது.

அவன் நீண்ட தூரம் நடந்தே சென்று வருவது இதுவே முதன் முறை என்பதால் கால்கள் பொறுத்துக் கொள்ள இயலாது வலித்தன. தனது மந்திரிமார்களிடம் நாட்டில் உள்ள சாலைகள் வசதியாக இல்லாமல் கற்கள் நிரம்பியதாக இருப்பதாகக் கூறினான். அவனால் தன் வலியைத் தாள முடியவில்லை. மக்கள் இந்தச் சாலைகளின் வழியேதான் பயணிக்க வேண்டியுள்ளதால் அவர்களுக்கும் இது எத்தகைய வலியைத் தரும் என்பதை எண்ணி தான் வருந்துவதாகக் கூறினான்.

இதைக் கருத்தில் கொண்டு தம் மக்கள் வசதியாக நடந்து செல்ல நாட்டில் உள்ள சாலைகள் அனைத்தின் மீதும் மாட்டுத் தோல்களைப் பரப்பி மூடிவிடச் சொன்னான்.

இதைக் கேட்டவுடன் மந்திரிமார்கள் பேச இயலாமல் வாயடைத்துப் போயினர்; ஏனெனில் போதிய அளவுக்கு தோல்களைப் பெற வேண்டுமெனில் ஆயிரக் கணக்கான மாடுகளும் பசுக்களும் அல்லவா வதைக்கப் பட வேண்டும்! அது மட்டுமில்லாமல் ஏராளமான பொருள் வசதியும் அல்லவா தேவைப்படும்!

இறுதியில் மந்திரிகளிலேயே புத்தி கூர்மை கொண்ட ஒருவர் அரசனிடம் வந்து தான் இதற்கு இன்னொரு உபாயம் கண்டிருப்பதாகக் கூறினார். அரசனும் என்ன உபாயம் எனக் கேட்டான்.

“சாலைகள் முழுவதையும் தோல் கொண்டு மறைப்பதற்குப் பதிலாக ஒரு சிறிய தோலைக் கொண்டு தாங்கள் தம் பாதங்களுக்கேற்ப காலணிகளைச் செய்து அணிந்து கொள்ளலாம் அல்லவா?” என்றார் மந்திரி.

அவருடைய ஆலோசனையைக் கேட்டு அரசன் ஆச்சரியம் கொண்டு அவரது மதியூகத்தைப் பாராட்டினான். ஆகவே தனக்கு ஒரு ஜதை காலணியை செய்து தரவும் தன் நாட்டு மக்களும் அது போலவே காலணிகளை அணிந்து கொள்ளும்படியும் ஆணையிட்டான்.

மகாத்மா காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி

பெண் ஒருத்தி காந்திஜியிடம் வந்து இனிப்பு சாப்பிடுவதைக் கைவிட தன் மகனுக்கு அறிவுரை பகரக் கோரினாள். காந்திஜி அடுத்த வாரம் பையனுடன் வருமாறு கூறி அனுப்பினார். அடுத்த வாரமே அந்தப் பெண் தன் மகனுடன் வந்தாள். காந்திஜி பையனிடம், “தயவு செய்து இனிப்பு சாப்பிடுவதைக் கைவிடு” என அறிவுறுத்தினார். அந்தப் பெண்ணும் காந்திஜிக்கு நன்றி தெரிவித்துப் பின் விடைபெறுகையில் ஏன் சென்ற வாரமே சிறுவனுக்கு அவ்வாறு அறிவுரை கூறவில்லை? எனக் கேட்டாள். காந்திஜி, “ஏனெனில் சென்ற வாரம் வரை இனிப்புப் பண்டம் சாப்பிடுவதைக் கைவிடாதிருந்தேன்” என்றார். நீயே மாற்றமாக இருத்தல் வேண்டும். இவ்வுலகின் வழியாகக் காண விரும்புவாயாக!” இவை யாவும் மகாத்மா காந்தியின் வார்த்தைகளாகும்.