வகுப்பு 40 – மறப்போம், மன்னிப்போம்

வகுப்பு 40 – மறப்போம், மன்னிப்போம்
கதை
(இதை ஒரு செயல்பாடு ஆகச் செய்து காண்பிக்கலாம்)

பேராசிரியர் கண்ணாடிக் குவளையில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு வகுப்பை ஆரம்பித்தார். அவர் அனைவரும் காணும்படி தம் கரங்களில் ஏந்தியவாறு மாணவர்களிடம், “இந்த கண்ணாடிக் குவளை எவ்வளவு எடை இருக்கும் என எண்ணுகிறீர்கள்?” என வினவினார்.

“50 கிராம்…….100 கிராம் ………..125 கிராம் ” என மாணவர்கள் பல பதில்கள் உரைத்தார்கள்.

“இதை நிறுத்துப் பாராவிடில் எனக்கும் தெரிய வாய்ப்பில்லை” என்று உரைத்த பேராசிரியர், “ஆனால் என்னுடைய கேள்வி யாதெனில் நான் இவ்வாறே கரங்களில் ஏந்தியவாறு சில நிமிடங்கள் இருந்தால் என்ன நிகழும்?” என்பதாகும்.

“ஒன்றும் நிகழாது” மாணவர்கள் பதில் உரைத்தார்கள்.

“சரி! இப்படியே ஒரு மணி நேரம் பிடித்தவாறு இருந்தால் என்ன நிகழும்?” என்றார் பேராசிரியர்.

“தங்களுடைய கரம் வலிக்க ஆரம்பிக்கும்” என்றார் மாணவர்களில் ஒருவர்.

“நீ சரியாகக் கூறினாய்! இதையே ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால் என்ன நிகழும்?”

“தங்களது கரம் மரத்துப் போகும். தாங்கள் கடும் தசைப் பிடிப்பும் வாத நோயும் வர, அவதியுற்று மருத்துவ மனைக்குச் செல்வது உறுதி.” என இன்னொரு மாணவர் நகைச் சுவைபடக் கூற மாணவர் அனைவரும் நகைக்கின்றனர்.

“மிகவும் நல்லது. ஆனால் இவை அனைத்தும் நிகழ்கையில் கண்ணாடிக் குவளையின் எடை மாறியதா?” என்றார் பேராசிரியர்.

“இல்லை” என பதில் வந்தது.

“பிறகு கரம் வலிப்பதற்கும் தசை பிடிப்புக்கும் எது காரணமாகியது?”

மாணவர்கள் புதிரைக் கண்டு குழம்பினார்கள்.

“வலி வராமல் இருக்க வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும்?” பேராசிரியர் மீண்டும் கேட்டார்.

“கண்ணாடிக் குவளையைக் கீழே இறக்கி வையுங்கள்” என்றார் ஒரு மாணவர்.

“மிகச் சரியாகக் கூறினாய்!” பேராசிரியர்.

வாழ்க்கையின் பிரச்னைகள் யாவும் இது போன்ற ஒன்றே!

சில நிமிடங்கள் வரை அவற்றைச் சிரத்தில் கொண்டால் சரியாக இருப்பதைப் போலத் தோன்றும்.

அவற்றையே நீண்ட நேரம் சிந்தியுங்கள். வலிக்க ஆரம்பிக்கும்.

அவற்றை மேலும் நீண்ட நேரத்திற்கு மனதில் கொள்ளுங்கள்; அவை உங்களை முடக்க ஆரம்பிக்கும். நீங்கள் எதையும் செயலாற்ற இயலாதவராவீர்.