வகுப்பு 30 – மகிழ்ச்சி

வகுப்பு 30 – மகிழ்ச்சி
கதை
நாம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? (குழுவின் செயல்பாடு மூலமாகக் காண்பிக்கலாம்)

ஒருமுறை ஐம்பது பேர் கொண்ட குழுவினர் போதனை வகுப்பில் கலந்து கொண்டனர்.

திடீரென உரையாளர் உரையை நிறுத்திவிட்டு குழுச் செயல்பாடு ஒன்றை நடத்த முடிவு செய்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு பலூன் கொடுத்தார் அவர்கள் தம் பெயரை பலூனில் எழுதச் சொன்னார். பின் பலூன்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வேறு ஒரு அறையில் கொண்டு போய் வைக்கப்பட்டன.

இப்பொழுது அனைவரும் பலூன்கள் இருக்கும் அறைக்குச் சென்று தம் பெயர் கொண்ட பலூனை ஐந்து நிமிடத்திற்குள் எடுக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஒவ்வொருவரும் மிகவும் ஆவல் கொண்டு மற்றவருடன் மோதிக் கொண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும் தம் பெயர் கொண்ட பலூனைத் தேட ஆரம்பித்தனர். அங்கு பெரும் குழப்பம் உருவானது.

ஐந்து நிமிடங்கள் முடிந்தன. தம் பெயர் கொண்ட பலூனை ஒருவராலும் எடுக்க இயலவில்லை. பின் அவருக்குக் கிடைத்த பலூனை எடுக்கும்படியும் அந்தந்த பெயருக்கு உரிய நபரிடம் சேர்க்கும்படியும் கூறப்பட்டது.

ஐந்து நிமிடத்துக்குள் அனைவரும் தம் பெயர் கொண்ட பலூனைக் கிடைக்கப் பெற்றனர்.

உரையைத் தொடருகையில் அவர், “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதுவே நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொருவரும் மிக ஆவலுடன் தமது மகிழ்ச்சியை அது எங்கிருக்கிறது என்று அறியாமலேயே சுற்றிமுற்றும் தேடி வருகின்றனர். நமது மகிழ்ச்சி என்பது மற்றவருடைய மகிழ்ச்சியில் உள்ளது. அவர்களுடைய மகிழ்ச்சியை அவர்களுக்குத் தாருங்கள். உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் அடையப் பெறுவீர்கள்.