வகுப்பு – 23 – இறைவனின் பரிசு

வகுப்பு – 23 – இறைவனின் பரிசு
கதை
இறைவனின் பரிசு

கட்டிடப்பணிக் கண்காணிப்பவர் ஒருமுறை தாம் ஆறாவது மாடியில் இருந்தவாறு தரைப் பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த பணியாள் ஒருவரை அழைத்தார். கட்டிடப் பணியின் சத்தம் காரணமாக கண்காணிப்பவர் தம்மை அழைப்பதைக் கேட்க இயலாமல் இருந்தார்.

அந்தப் பணியாள். இவரது கவனத்தைத் திருப்புவதற்காக கண்காணிப்பவர் பத்து ரூபாய் தாளை அவர் இருக்குமிடத்தே அவர் முன்பாக விழும்படி செய்தார்.

பணியாள் பத்து ரூபாயைக் கண்டு அதை எடுத்துத் தம் பையில் வைத்துக் கொண்டு பணியினைத் தொடர்ந்தார்.

கண்காணிப்பாளர் அவரது கவனத்தைத் மீண்டும் தம் பக்கம் திருப்ப வேண்டி ஐநூறு ரூபாய் தாளைக் கீழே விட்டார். இதைக் கண்ட பணியாள் அந்த ஐநூறு ரூபாய் தாளையும் எடுத்து வைத்துக் கொண்டு முன் போலவே பணியைத் தொடர்ந்தார்.

இதனாலும் பணியாள் தம் பக்கம் திரும்பாமற் போகவே அவர் ஒரு சிறிய கல் ஒன்றை பணியாள் மீது எறிந்தார். அந்தக் கல் சரியாக பணியாளின் தலை மீது பட்டது. இந்த முறை பணியாள் மேலே நிமிர்ந்து கவனித்தார். கண்காணிப்பவரும் தாம் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார்.

இந்த கதை நமது வாழ்க்கையைப் போன்றதாகும். இறைவன் உயரே இருந்துகொண்டு நம்மிடம் பலவற்றைத் தெரிவிக்க எண்ணுகிறார். ஆனால் நாம் உலகியற் செயல்களில் தீவிரமாக இருந்து வருகிறோம். இறைவன் சிற்சில பரிசுகளை வழங்குகின்றார். நாம் அவற்றை எங்கிருந்து பெற்றோம் எனக் கூட அறியாமல் இருக்கிறோம்.

பிறகு இறைவன் மேலும் பல பரிசுகளை வழங்குகிறார். நாம் முன்பு போலவே பரிசுகளை மட்டும் பெற்றுக் கொண்டு சும்மா இருக்கிறோம். அவை எங்கிருந்து தரப்பட்டன என்பதை அறியாமலும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்காமலும் பரிசுகளை மட்டும் வைத்துக் கொள்கிறோம். நாம் அதிர்ஷ்டமானவர்கள் என்றுகூட கூறிக் கொள்கிறோம். பிறகு நாம் பிரச்னை என்று அழைக்கும் சிறு கற்கள் நம் மீது விழும்போது உயரே பார்த்து இறைவனுக்குத் தெரிவிக்கிறோம்.