வகுப்பு – 22 – அமைதி

வகுப்பு – 22 – அமைதி
கதை

ஒருமுறை புத்தர் தமது சீடர்கள் சிலருடன் பயணித்துக் கொண்டிருந்தார். அவர்கள் ஏரி ஒன்றைத் தாண்டி செல்கையில், “நான் தாகமுற்று இருக்கிறேன். ஏரியில் இருந்து சிறிது நீர் கொண்டு வாருங்கள்!” என்று சீடர்களில் ஒருவரிடம் கூறினார்.

சீடர் ஏரியின் கரைக்கு அருகே சென்றார்.

அப்போது மாட்டு வண்டி ஒன்று நீருக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றது.

இதனால் நீர் கலங்கிப் போய் சேறாகி விட்டது.

சீடர், “கலங்கிப்போன சேற்று நீரை எப்படி புத்தருக்கு அருந்தக் கொடுப்பேன்!” என எண்ணினார். ஆகவே அவர் புத்தரிடம் திரும்பி வந்து, “நீர் அங்கே கலங்கிச் சேறாகி விட்டது. அது அருந்துவதற்கு ஏற்றதாக எனக்குத் தோன்றவில்லை!” என்றார்.

சுமார் அரை மணி நேரம் கழித்து புத்தர் அதே சீடரை ஏரிக்குச் சென்று நீர் கொண்டுவரப் பணித்தார்.

சீடரும் அங்கு சென்று நீர் இன்னும் கலங்கியவாறே இருப்பதைக் கண்டார். மீண்டும் புத்தரை வந்து அடைந்த அந்த சீடர், நீர் அவ்வாறே கலங்கிய நிலையில் உள்ளதைத் தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து புத்தர் அவரையே மீண்டும் சென்று வரச் சொன்னார்.

இம்முறை நீர் தெளிவடைந்து சுத்தமாக இருந்ததையும் சேறு அடங்கிவிட்டதையும் கண்டார்.

ஆகவே சிறிது நீரைப் பானையில் எடுத்துக் கொண்டு புத்தரிடம் வந்தார்.

புத்தர் நீரைப் பார்த்து விட்டுப் பின் சீடரை நோக்கிக் கூறினார். “இதோ பார்! நீர் தூய்மையடைய நீ என்ன முயற்சி எடுத்தாய்? அதை ஏதும் செய்யாது அமைதியாயிருந்தாய். சேறு தானாகவே கீழே சென்று அடங்கியது. நீயும் சுத்தமான நீர் கிடைக்கப் பெற்றாய்!”.

“உன்னுடைய மனதும் கூட அதைப் போன்றதே! அது குழப்பமுற்ற நிலையில் அவ்வாறே இருக்க விடு. சிறிது நேரம் கழித்துக் கவனி. அது தானாகவே அமைதி கொண்டு விடும். நீ அதை அமைதியுறச் செய்ய தனி ஒரு முயற்சியை மேற்கொள்ளத் தேவையில்லை! அது நடந்தே தீரும்.