வகுப்பு – 19 – அன்னையின் அன்பு

வகுப்பு – 19 – அன்னையின் அன்பு
கதை
என் அன்னை மட்டும் ஒற்றைக் கண்ணுடையாள்!

என்னுடைய அன்னை மட்டும் ஒற்றைக் கண் உடையவளாயிருந்தாள். நான் அவளை வெறுத்தேன். அவள் அத்தகைய தர்ம சங்கடமானவளாக இருந்தாள். அவள் ஆசிரியர்களுக்கும் மாணவருக்கும் சமையல் செய்து கொடுத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாள்.

துவக்கப்பள்ளியில் நான் கற்று வந்த போது ஒரு நாள் எனக்கு ஹலோ கூற வந்தாள். நான் மிகவும் தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளானேன்.

அவளால் எப்படி எனக்கு இவ்வாறு செய்ய முடிந்தது? நான் அவளை உதாசீனப் படுத்தி வெறுப்பு கலந்த பார்வையைச் செலுத்திவிட்டு ஓடி விட்டேன். அடுத்த நாள் என் வகுப்பின் சக மாணவன் ஒருவன் “ஐயே! உன் அன்னை மட்டும் ஒரே ஒரு கண்ணை உடையவளா யிருக்கிறாள்” என்றான்.

நான் என்னைப் புதை யுண்டு போகவே விரும்பினேன். எனது அன்னை உடன் மறைந்து போக மாட்டாளா எனக் கூட விரும்பினேன். நான் அன்று அவளிடம் எதிருக்கு எதிராக, “நீ என்னைச் சிரிப்புக்கு ஆளாக்கும் பட்சத்தில் ஏன் நீ இறத்தலாகாது?” என்றேன்.

என் அன்னை இதற்கு ஏதும் பதில் அளிக்கவில்லை. நான் மிகவும் சினம் கொண்டு இருந்ததால் நான் என்ன கூறியிருந்தேன் என்பதைக் கணநேரம் கூட நிதானித்துச் சிந்திக்கவில்லை. அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளாதவனாக இருந்தேன்.

நான் அன்னையிடம் ஏதும் சகவாசம் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறவே விரும்பினேன். எனவே, நான் கடுமையாகப் படித்து வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற்றேன்.

பிறகு மணம் புரிந்து கொண்டேன். சொந்த வீட்டையும் வாங்கிக் கொண்டேன். குழந்தைகள் பிறந்தன. எனது குழந்தைகள் எனது வசதியென வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். பிறகு ஒரு நாள் என் அன்னை என்னைக் காண வந்தாள். அவள் வருடக் கணக்காக என்னைக் காணவில்லை; தனது பேரக் குழந்தைகளைக் கூடக் கண்டதில்லை.

அவள் எனது வீட்டு வாயிலில் வந்து நின்ற போது என் குழந்தைகள் அவளைப் பார்த்து சிரித்தார்கள். நானும் அவள் அழையா விருந்தாளியாக வந்திருப்பதைக் கண்டு கூச்சலிட்டேன். “என் வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பயமுறுத்த உனக்கு என்ன தைரியம்? இங்கிருந்து போய்விடு!இப்போதே!” என வீறிட்டேன்.

இதைக் கவனித்த என் தாய் அமைதியாக, “ஓ! என்னை மன்னித்து விடு! நான் தவறான முகவரிக்கு வந்து விட்டிருக்கலாம்!” என்று அமைதியாகப் பதில் கூறினாள். பிறகு என் பார்வையில் இருந்து மறைந்தாள்.

ஒருமுறை எனக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு விழாவுக்கான அழைப்புக் கடிதம் வந்தது. நான் எனது வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன் என மனைவியிடம் பொய் சொல்லி விட்டு விழாவுக்குச் சென்றேன். விழாவும் முடிந்தது.

ஆவலின் பேரில் நான் எனது பழைய வீட்டுக்குச் சென்றேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறினார்கள், “அவர்கள் இறந்து விட்டார்கள்!”. நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை! அவர்கள் என் தாய் என்னிடம் தர விரும்பியதாகக் கடிதம் ஒன்றைக் கொடுத்தார்கள்.

அதில் ” மிகவும் அன்புக்குரிய என் மகனே!

நான் உன்னை எல்லா நேரங்களிலும் நினைக்கிறேன். நான் உன் வீட்டுக்கு வந்து உன் குழந்தைகளை பயமுறுத்தியதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

நீ மாணவர் சந்திப்பு விழாவுக்கு வருகிறாய் எனக் கேட்ட போதே மிகவும் மனம் மகிழ்ந்தேன். ஆனால் என் படுக்கையில் இருந்து எழுந்து வந்து உன்னைக் காண என்னால் இயலாது.

நீ வளர்ந்து வருகையில் நான் உனக்கு நிலையான ஒரு தர்ம சங்கடமாக இருந்தமைக்கு வருந்துகிறேன்.

இதை நீ கவனி! நீ குழந்தையாக இருக்கையில் நீ ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்து உன் கண்ணை இழந்து விட்டாய். தாய் என்னும் நிலையில் மகன் ஒற்றைக் கண்ணுடன் வளர்ந்து பெரியவனாகி வருவதை பொறுத்துக் கொள்ள இயலாதவளானேன் நான். ஆகவே என் கண்களில் ஒன்றை உனக்கு தானமாக அளித்தேன்.

அந்தக் கண்ணுடன் என் மகன் இந்த புதிய உலகம் முழுவதையும் காண்பதை எண்ணி பெருமை கொண்டேன்.