வகுப்பு – 17 – ஒருபோதும் துன்புறுத்தாதீர்

வகுப்பு – 17 – ஒருபோதும் துன்புறுத்தாதீர்
கதை
பச்சை மின்மினிப் பூச்சி

ஆதித்யா, தன் பக்கத்து வீட்டில் ஹார்ஷ் மாமாவின் மோட்டார் சைக்கிளின் மீது சாணம் பூசி வண்ணமிட்ட பிறகு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான். ஹார்ஷ் ஆதித்யாவின் வீட்டுக்குக் கோபத்துடன் வந்து ஆதித்யாவின் தந்தையிடம், “பாருங்கள்! உங்கள் பிள்ளை என்ன செய்திருக்கிறான் எனப் பாருங்கள். என் மோட்டார் சைக்கிள் மீது முழுதுமாக சாணத்தைப் பூசியிருக்கிறான்”. ஆதித்யாவின் தந்தை அவமானத்தால் தலை குனிந்தார். அவர் மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்து தரச் சொன்னார். அவனை வாளி நிறைய தண்ணீர் மற்றும் துணியைக் கொண்டு வரச் செய்து மோட்டார் சைக்கிளைச் சுத்தம் செய்ய வைத்தார். ஹார்ஷ் மாமாவிடம் மன்னிப்பும் கேட்கச் சொன்னார். ஆனால் இது போன்று நடப்பது இது முதல் முறையல்ல. ஒரு முறை விஜயா ஆன்ட்டியின் பூனையைப் பிடித்து அதன் வாலில் ஒரு டப்பாவைக் கட்டினான். பூனை ஓடும் போது ஒரு வித சத்தம் எழுந்தது. இதனால் பூனை பயந்து வேகமாக ஓடும் போது மேலும் அதிக சத்தம் கேட்டது. டாம்லே மாமாவின் தோட்டத்தில் மாங்காய்களைத் திருடியிருக்கிறான். குறும்புத்தனமாக இப்படி விளையாடுவதில் மனம் மகிழ்ந்தான். அவனை அமைதியாக இருக்கச் சொன்னால் மிகவும் சலிப்படைவான். அவனது பெற்றோர் அவனை எப்படி திருத்துவது என அறியாது விழித்தனர்; ஏனெனில் அவனுக்கு எந்த அளவுக்கு தண்டனையளித்தாலும் திட்டினாலும் அவன் திருந்துவதாக இல்லை.

ஒரு முறை ஆதித்யா தோட்டத்தில் விளையாடச் சென்றபோது அவன் பச்சை வண்ண மின்மினிப் பூச்சியைக் கண்டான். உடனே அந்தப் பூச்சியைப் பிடித்து தீப்பெட்டியினுள் வைத்துக் கொண்டான். பிறகு அதைத் தம் நண்பர்களிடம் மிகப் பெருமையுடன் காண்பித்தான். அன்று இரவு தனது தங்கையின் முடியில் சூயிங் கம்மை ஒட்ட வைத்துவிட்டு இவ்விளையாட்டில் மனம் மகிழ்ந்தான். பிறகு உறங்குவதற்காக தன் அறையை அடைந்த போது அந்த அறை முழுவதும் பச்சை வண்ணமே ஒளிரக் கண்டான். அந்த அறை முழுவதும் பூச்சிகளின் ரீங்கார ஒலி வேறு கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த ஒலியைக் கேட்டு அவனுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. தனது காதுகளை தலையணைக்குள் வைத்து மூடிக்கொள்ள முயன்றான். யாரோ ஒருவர் தம்மிடம் இருந்து தலையணையைப் பறித்து விட்டார்கள். தன் முன்பாக பெரிய ஒரு பச்சை மின்மினிப் பூச்சி இருக்கக் கண்டான். அதற்கு உருண்டையான பெரிய கருவிழிகள் இருந்தன. அதன் கால்களோ மிகவும் நீளமாக இருந்தன. ஆதித்யா மிகவும் தைரியம் மிக்க சிறுவனாக இருந்தாலும் ராக்ஷ்சஸ உருவம் கொண்ட பூச்சியைக்கண்டு பேச இயலாதவன் ஆனான்.

அந்தப் பூச்சி அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே சாலைக்குச் சென்று சேற்று நீரில் மூழ்க வைத்தது. ஆதித்யாவை நீரில் இருந்து வெளியே தூக்கிப் பிறகு கூறியது: “இப்போது உன் உடல் முழுதும் டப்பாக்களை கட்டிவிடப் போகிறேன். டப்பாக்கள் சுற்றிலும் கட்டியிருக்க நீ பள்ளிக்குச் செல். நீ நடந்தாலும் ஓடினாலும் டப்பாக்களின் சத்தம் கேட்கும்”, என்றது. ஆதித்யா கண்கள் மீதிருந்த சேற்றைத் துடைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். பூச்சியிடம், “என்னை மன்னித்து விடு. இனி ஒருபோதும் குறும்புத் தனமாக விளையாட மாட்டேன்.” என்றான். உடனே பூச்சி அங்கிருந்து மறைந்தது. காலையில் கண் விழித்த உடனே தீப்பெட்டியைத் திறந்து விட்டான். அவன் அந்தப் பூச்சியிடம், “என்னை மன்னித்துவிடு எனது அன்பான நண்பனே! உன்னைச் சிறை பிடித்தமைக்கு மன்னிப்பாயாக” என்றான்.