வகுப்பு 15 – உள்ளச் சமநிலை

வகுப்பு 15 – உள்ளச் சமநிலை
கதை
மன நிறைவும் அமைதியும்

கௌதம புத்தர் காட்டின் வழியே நகரம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் குளிர்ந்த ஓடையைக் கண்டார். அந்த ஓடையில் தம் கை கால்களைக் கழுவி சுத்தம் செய்து கொண்டார். பின் மரத்தடியில் தியானம் செய்ய அமர்ந்தார்.

அதே வழியாக நகரத்தின் அரசன் தம் நகருக்குக் குதிரை மீது சென்று கொண்டிருந்தான். தன்னுடைய ராஜ்யத்தை விரிவு படுத்துவதற்காக மற்ற அரசர்களுடன் போரிடுவதிலேயே கவனம் செலுத்தி வந்ததால் அவனது இதயம் முழுவதும் வெறுப்பு, அச்சம் மற்றும் பொறாமை ஆகிய குணங்களே நிரம்பியிருந்தன.

சன்னியாசி ஒருவர் மரத்தினடியில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தவாறு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் குதிரையினின்று கீழ் இறங்கி புத்தர் மீது கோபம் கொண்டு சத்தமிடலானான். “ஓ சன்னியாசி! உங்கள் கண்களைத் திறந்து உங்கள் முன்பு நிற்பது யார் என்று பாருங்கள். என்னைப் போன்ற அரசன் ஒருவன் கூட வீணாக அமர்ந்து காலத்தைப் போக்குவதில்லை. உங்களைப் போன்ற சன்னியாசிகள் வீணாக மற்றவரிடமிருந்து உணவைப் பெற்று உண்டுவிட்டு அடுத்தவருக்கும் பொழுது போக்குவதையே கற்றுத் தருகிறீர்கள். இத்தகைய கடினமான வார்த்தைகளை உதிர்த்தவாற அரசன் மேலும் கோபத்துடன் கடினமாகப் பேசித் தான் களைப்படைந்து ஓயும் வரை கௌதம புத்தரை வசை பாடினான்.

எப்போதும் அமைதியே குடி கொண்டுள்ள கௌதமர் புன்முறுவலுடன் மெதுவாகத் தம் கண்களைத் திறந்து அரசனிடம், “உட்கார் எனதருமை மைந்தனே! உண்மையிலேயே நீ களைப்புற்று தாகம் கொண்டிருக்கிறாய்! நான் ஓடையில் இருந்து குளிர்ந்த நீரைக் கொண்டு வரட்டுமா?” என்றார்.

இத்தகைய மென்மையும் இனிமையுமான அன்பு வார்த்தைகளால் அசைவற்று நின்றான். உடனே அவன் இந்த சன்னியாசி அமைதியைத் தேடித் தம் அரண்மனை சுகங்களைக் விட்டுப் பின் ஞானம் அடைந்து புத்தரான மாபெரும் இளவரசர் சித்தார்த்தர் இவராகத்தான் இருக்கவேண்டும் என உணர்ந்தான்.

ஆகவே, அவன் சன்னியாசியின் கால்களில் விழுந்து, ” தயவு செய்து என்னை மன்னியுங்கள். கூறுங்கள், உங்கள் மீது கோபமுற்று வசை பாடியதைக் கேட்டும் கூட எவ்வாறு மிகவும் சாந்தமும் அமைதியும் கொண்டு என்னையும் அன்புடன்நடத்தினீர்கள்?”.

“என் மைந்தனே! ஒரு வேளை நீ தட்டு நிறைய இனிப்புகளை மற்ற ஒருவருக்கு வழங்க அவர் அதை ஏற்க மறுத்தால் அது பிறகெங்கே செல்லும்?”

அரசன் மிகச் சரியாகக் கூறலானான். “இயல்பாகவே அது கொடுத்தவரையே சென்றடையும்” என்றான். ” பிறகு நீ கூறிய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றைக் கூட நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நீ அறியவில்லையா? அவ்வாறு இருக்கையில் உனது வார்த்தைகள் என்னை எவ்வாறு பாதிக்கும்?”

இந்த சன்னியாசி புத்தரே தவிர வேறு யாருமில்லை என்பதை முற்றிலுமாக இப்போது அரசன் உணர்ந்தான்.

அவரைப் பணிந்து வணங்கி,”ஓ முற்றிலும் ஞானமடைந்தவரே! தயவு செய்து கூறுங்கள் உண்மையான மகிழ்ச்சி அடையும் வழிதான் என்ன என்று!” எனக் கூறி வேண்டினான்.

புத்தரின் கண்களில் தெய்வீக ஞான ஒளி பிரகாசித்தது. “எனது மகனே! கோபம், பேராசை, பொறாமை, அச்சம் மற்றும் இத்தகைய அனைத்து உணர்வுகளும் மனிதனின் எல்லா மகிழ்ச்சியினின்றும் களவாடிவிடும். மன நிறைவு, அமைதி மற்றும் அன்பு ஆகிய இவையே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சிக்கு ஆதாரமாகும். மன நிறைவும் அமைதியுமற்ற மனிதன் பிச்சைக்காரனே ஆவான். மற்றவருக்கு அன்புடன் உதவி செய்து சேவைசெய்யாத யாரும் வீணாகப் பொழுது போக்குபவர்களே.

மன நிறைவு, அமைதி மற்றும் அன்பாகிய கிரீடத்தை எப்போதும் அணிகின்றவனே தம் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டு கொண்டவனும் அரசருக் கெல்லாம் அரசனாவான்” என்றார்.

அரசன் நன்றியுடன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, “ஓ புத்த தேவரே! தயை கூர்ந்து என்னை தங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றில் இருந்து நீங்களே என் தலைவர். எனக்கு வழி காட்டுங்கள்.