வகுப்பு 1 – கடவுளும் படைப்பும்.

வகுப்பு 1 – கடவுளும் படைப்பும்.
ஸ்லோகம் – ஓம்காரம் பிந்து சம்யுக்தம்.
கதை
கடவுளைப் பற்றிய உண்மைகள் – கடவுள் எங்கும் வியாபித்துள்ளவர். (இதை ஒரு செயல்பாடு மூலம் நடத்தலாம்)

மாமுனிவரான உத்தாலக ஆருணி ஒருமுறை தம் மைந்தன் சுவேதகேதுவுக்கு ப்ரஹ்மனைப் பற்றிய ஞானத்தைப் போதிக்க விரும்பினார். இதற்கு எளிய முறை ஒன்றைக் கையாள எண்ணினார். அவர் தம் மகனிடம் அருகில் இருந்த பெரிய ஒரு ஆலமரத்தைக் காண்பித்து அந்த மரத்தில் இருந்து நன்றாகப் பழுத்த கனி ஒன்றை எடுத்து வரக் கோரினார். அவன் அவ்வாறு மரத்தில் இருந்து சிவந்து பழுத்த ஒரு கனியைக் கொண்டு வந்தபோது, அவர் “இதை இரண்டாகப் பிளந்து காண்பி என் குழந்தாய்!” என்றார். சுவேதகேது அதை இரண்டாகப் பிளந்து காண்பித்தான். “அதில் என்ன காண்கிறாய்?” “மிக நுண்ணிய எண்ணற்ற விதைகள். இதையும் விட வேறு ஏதாக இருக்க இயலும்?” “நல்லது! அந்த நுண்ணிய விதைகளில் ஒன்றை எடுத்து பிளந்து காண்பி!” “அவ்வாறே! இதோ பிளந்து விட்டேன்” “அதில் என்ன காண்கிறாய்?” “ஏன்! எதையும் காணவில்லையே!” “எனதருமை குழந்தாய்! இந்த பெரிய ஒரு மரம் ஏதுமற்ற ஒன்றில் இருந்து வெளிவர வாய்ப்பில்லை! இந்த பெரிய மரம் வெளிவர காரணமான அந்த நுண்ணிய இல்லாத ஒன்றைக் காண இயலா நிலையில்தான் நீ இருக்கிறாய். இதுவே எல்லா இடங்களிலும் எல்லா பொருளிலும் வியாபித்துள்ள காண இயலா சக்தியின் வலிமையாகும். நம்பிக்கை கொள்.இருக்கின்ற அனைத்திலும் வேர்வரை இருக்கின்ற சக்தி அது நீயே ஓ ஸ்வேதகேது!” “இது மிகவும் குழப்பம் அளிக்கிறது தந்தையே! நான் இதை அறிந்திருப்பினும் இந்த பூமியில் இருந்து எவ்வாறு உணர்வேன்?” உத்தாலகர் கூறினார் “நான் கூறுவதை செய்வாயாக! நீ உறங்கச் செல்லுமுன் சிறிது உப்புப் படிகத்தை எடுத்து குவளை நீரில் போட்டுவை. அதை மறுநாள் காலையில் என்னிடம் கொண்டுவா.” இதற்குக் கீழ்படிந்த மகன் அவ்வாறே செய்து மறுநாள் காலை குவளை நீரைத் தந்தையிடம் கொண்டு வந்தான். தந்தை, “அன்பு மகனே! இதிலிருந்து உப்பை எடுத்துத் தருவாயா?” ஸ்வேதகேது இதனால் கோபமுற்று, “தந்தையே! என்ன கூறுகிறீர்கள். கரைந்த நீரில் இருந்து உப்பை எவ்வாறு பிரித்து வெளியில் எடுப்பது!” “மிக நல்லது! குவளை நீரை மேலே ருசித்துப் பார்.” “உப்பாக இருக்கிறது. அவ்வாறுதானே இருக்க இயலும்” “குவளையின் நடுவிலும் பிறகு அடிபாகத்திலும் இருந்து நீரை சுவைத்துக் கூறு!” “அதுவும் உப்பாகவே, இருக்க வேண்டியவாறே இருக்கிறது.” “எனதருமை குழந்தாய்! நான் கூறியவாறு குவளை நீர் முழுவதிலும் கரைந்துள்ள உப்பைப் போன்றே இருக்கின்ற அனைத்திலும் வியாபித்துள்ள அந்த சக்தியை இப்போது புரிந்துகொள். அதுவே காண இயலாத சக்தியாகும். ஸ்வேதகேது, அது நீயே! “தந்தையே! இந்த அனைத்தையும் எவ்வாறு ஏற்று நடப்பது? இது மிகவும் எளிதாகத் தோன்றுகிறது. ஆனாலும் கடினமாக அல்லவா இருக்கிறது.” உத்தாலகர் கூறினார்: அந்த சக்தியை எவ்வாறு உணர்வது என்று கூறுகிறேன். நாம் ஒருவரது கண்களைக் கட்டி அவரது பழக்கமான இடத்தில் இருந்து திக்கற்ற காட்டிற்கு அழைத்துச் சென்றால் அவர் என்ன செய்வார்? தனது வீட்டை எவ்வாறு கண்டுபிடித்து செல்வார் தான் தனித்து விடப்பட்டவுடனே தன் கண்களைத் திறக்கவே செய்வார். தான் எங்கிருந்து அழைத்து வரப் பட்டோமோ அந்த இடத்தை நோக்கிச் செல்ல விசாரித்துத் தேட ஆரம்பிப்பார். கிராமம் கிராமமாக சென்று முடிவில் தமக்கு சரியான திசையைக் காண்பிக்கும் ஒருவரை காண்பார். இவ்வாறாக தம் இல்லத்தை அடைய முற்படுவார். இவ்வாறே பிரிந்து வந்து வனத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் நாம் நமக்குச் சொந்தமான ஆன்மீக இல்லத்தினை தேடி அடைய முற்பட வேண்டும். நாம் அனைவரும் செல்ல வேண்டிய திசை உண்மையான சக்தி ஒன்றையே நோக்கியாகும்.