வகுப்பு 7 – இயற்கை

வகுப்பு 7 – இயற்கை

இயற்கை என்றால் என்ன? இயற்கை என்றால் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரங்கள், செடிகள், பூக்கள், ஆறுகள், மலைகள் என எல்லாம் நிறைந்தவை.

கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனதில் இவை எல்லாவற்றையும் நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு அழகானது இயற்கை? அதில் எவ்வளவு அமைதி மற்றும் சந்தோஷங்கள்? என்று எண்ணிப்பாருங்கள்.

கதை : மரங்களுக்கு என்ன ஆயிற்று?

சுரேஷ் ஒரு தொலைக்காட்சிப் பிரியன். எப்பொழுதும் தொலைக்காட்சிப் பார்ப்பதையே விரும்புவான். அவனிடம் விளையாடுவதற்கு நிறைய பொம்மைகள் இருந்தாலும், ஓடி விளையாடுவதற்குப் பெரியத் தோட்டம் இருந்தாலும் அவனது கவனம் எப்பொழுதும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே இருந்தது. அவனது பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.

அவனுடைய அம்மா அவனது கவனத்தைத் தொலைக்காட்சியிலிருந்துத் திருப்பப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவை அனைத்தும் வீணாயின. அவனுடைய தந்தையோ தோட்டக்கலையில் ஆர்வம் மிகுந்தவர். அவனைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்வார். சுரேஷ் சிறிது நேரத்திலேயே வீட்டிற்குள் ஓடிச் சென்று டிவியைப் போடுவான். அவன் எப்பொழுதும் டிவி முன் அமர்ந்து வன்முறை நிறைந்த படங்களையே பார்ப்பான். அதாவது கத்தி, வாள் மற்றும் துப்பாக்கி வைத்து சண்டை போடும் காட்சிகளையே பார்ப்பான்.

ஒருநாள், சுரேஷின் அப்பா மிகவும் கடினமான தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் போது அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அவர் மிகவும் கோபப்பட்டு தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அவனை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார். அப்பொழுது அவன் வன்முறை நிறைந்த படங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அப்பா தொலைக்காட்சியை நிறுத்தியதால் அவன் கோபப்பட்டு ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்று அங்கு இருந்த செடி, கொடி மற்றும் பூக்களை எல்லாம் வெட்டிச் சிதைத்தான். அவனது அப்பா ஆசையாக வளர்த்த வாழை மரங்களைக் கூட வெட்டிப்போட்டான். அவனது பெற்றோர்கள் செய்வதறியாது, மிகவும் கவலையுடன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவனைத் திருத்துவதற்கான ஒரு வழியைக் கண்டுப்பிடித்து, அதனைச் செயல்படுத்த நினைத்தனர்.

ஒரு சனிக்கிழமை மதியம் சுரேஷின் அப்பா அவனை அழைத்துக்கொண்டு ஒரு அழகான இடத்திற்குச் சென்றார். அந்த இடம் முழுவதும் மரம், செடி, கொடி மற்றும் பூக்கள் நிறைந்து மிகவும் அழகாக இருந்தது. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடன் சுரேஷ் மிகவும் மகிழ்ந்து வண்ணத்துப்பூச்சியை துரத்திக்கொண்டும், பூக்களின் வாசத்தினை முகர்ந்தும் அனுபவித்தான். அதனால் அவன் அப்பா ‘போகலாம் வா’ என்று கூப்பிட்டபோதும் கிளம்ப மனமில்லாமல் கிளம்பினான்.

அவனது அப்பா அவனை வேறொரு இடத்திற்கு கூட்டிப்போனார். அங்கு இருந்த நிலங்கள் தரிசாகவும், மரங்களின் அடிப்பகுதி மட்டுமே இருந்தது. அந்தத் தரிசு நிலங்களைப் பார்த்து அவன் மிகவும் வேதனையடைந்தான். அவன் அவனது தந்தையிடம் இங்கு இருந்த மரம், செடி, பூக்களுக்கெல்லாம் என்னவாயிற்று என்று கேட்டான். அதற்கு அவர் “பேராசை மனிதர்கள் அதையெல்லாம் வெட்டி விட்டனர். அதனால் இது தரிசு நிலமாக மாறிவிட்டது” என்று கூறினார். அப்போது அவன் தன் தவற்றை உணர்ந்து அவன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டான்.