வகுப்பு 5 – இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார்

வகுப்பு 5 – இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார்
கதை : இறைவன் ஜன்னலோரம் இருக்கிறார்

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் தன் பாட்டி தாத்தாவைக் காண அவர்களுடையப் பண்ணைக்குச் சென்றான்.

அவனுக்கு காட்டுப்பகுதியில் விளையாடுவதற்காக ஒரு கவண் கொடுத்தனர். அவன் பலமுறை முயற்சித்தும் அவனால் எதையும் குறிபார்த்து அடிக்க முடியவில்லை. சிறிது நம்பிக்கை இழந்து இரவு உணவிற்காக வீட்டிற்குத் திரும்பினான் அச்சிறுவன். அவன் திரும்பி வரும் பொழுது அவன் தன் பாட்டியின் வளர்ப்பு வாத்தைக் கண்டான். சும்மா விளையாட்டுக்காக அந்தக் கவணைப் பறக்க விட்டான். அது சரியாக வாத்தின் தலையில் சென்று அடித்தது. வாத்து இறந்து விட்டது. அதிர்ந்து போனான். மிகவும் வருந்தினான். பதட்டத்தில் அவன் இறந்த வாத்தை, மரங்களுக்கு நடுவில் ஒளித்து வைத்தான். அவனுடைய சகோதரி சுனிதா இதைக் கவனித்து விட்டாள். ஆனால் அவள் ஒன்றும் கூறவில்லை. அடுத்த நாள் மதிய உணவிற்குப் பிறகு பாட்டி சுனிதாவை அழைத்து, “வா நாம் சென்று பாத்திரங்களைக் கழுவலாம்” என்று கூறினார். ஆனால் சுனிதா, “பாட்டி, அஜய் உங்களுக்கு உதவ மிகவும் விரும்பினான் பாட்டி” என்று கூறினாள். பின்னர் அஜயிடம் ரகசியமாக, “வாத்து ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள். உடனே அஜய் சென்று பாத்திரங்களைக் கழுவினான். நாளின் பின் பொழுதில் தாத்தா குழந்தைகளைப் பார்த்து, “நாம் மீன்பிடிக்கச் செல்லலாமா?” என்று கேட்டார் ஆனால் பாட்டி, “வேண்டாம் வேண்டாம்! எனக்கு சுனிதா இரவு உணவு செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறினாள்.

சுனிதா சிரித்துக் கொண்டே , “சரி சரி, அஜய் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டான்” என்று கூறினாள். இவ்வாறு பல நாட்கள் அஜய், தன் வேலையையும், சுனிதா வேலையையும் சேர்த்துச் செய்து கொண்டிருந்தான். முடிவில் அவனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் தன் பாட்டியிடம் சென்று தான் அந்த வாத்தைக் கொன்றதாக ஒப்புக் கொண்டான். பாட்டி உடனே மண்டியிட்டு அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு, “என் செல்லமே! எனக்குத் தெரியும். நான் அப்பொழுது ஜன்னல் ஓரம் நின்று கொண்டு நடந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் நான் உன் மேல் மிகவும் அதிக அன்பு வைத்திருக்கிறேன். அதனால் உன்னை அன்றே மன்னித்து விட்டேன். ஆனால் எவ்வளவு நாட்கள் தான் நீயும் அந்த சுனிதாவிற்கு அடிமையாக வேலை செய்து கொண்டு இருப்பாய் என்று கவனித்து கொண்டே இருந்தேன்” என்றாள்.

சிந்திக்க வேண்டியவை:

நீ உன் கடந்த காலத்தில் என்ன தவறு இழைத்திருந்தாலும், (பொய் கூறுதல், ஏமாற்றுதல், கடன், பயம், துர்நடத்தை, வெறுப்பு, கோபம், மேலும் பல) ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. அது கடவுள் எப்பொழுதும் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கிறார் என்பதை.

உன் வாழ்க்கை முழுவதையும் அவர் பார்க்கிறார். அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார். உன்னை மன்னிப்பார். நீ எவ்வளவு நாள் தான் உன் தவறுகளுக்கு அடிமையாக வாழ்கிறாய் என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார்.

கடவுளின் சிறப்பு என்னவென்றால், நீ அவரிடம் மன்னிப்புக் கேட்டால், அவர் உன்னை மன்னித்து, உன் தவற்றையும் மறந்துவிடுவார்.

கடவுளின் கருணையால் தான் நாம் காப்பாற்றப் படுகிறோம். கிளம்பி செல். எவரேனும் ஒருவர் வாழ்க்கையில் இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்து.