வகுப்பு 46 – வலிமை

வகுப்பு 46 – வலிமை
கதை : ஒரு வேலையை செய்து முடிக்க உன்னுடைய முழு வலிமையையும் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிறுவனும் அவனுடைய அப்பாவும் காட்டுப்பாதை வழியே நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பெரிய மரக்கிளை செல்லும் பாதையில் விழுந்திருந்தது. அந்தச் சிறுவன் அவன் அப்பாவிடம் “நான் முயற்சி செய்தால் இந்தக் கிளையை இவ்விடத்திலிருந்து நகர்த்த முடியுமா?” என்று கேட்டான். அதற்கு அவர் “நீ உன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தினால் முடியும்” என்றார்.

சிறுவன் அந்தக் கிளையை தூக்குவதற்கும் மற்றும் தள்ளவும் முயற்சி செய்தான். ஆனால் அதை நகர்த்துவதற்கான தெம்பு அவனிடம் இல்லை. அவன் ஏமாற்றத்துடன் அவன் அப்பாவிடம் “என்னால் அதை நகர்த்த முடியவில்லை” என்றான். “மீண்டும் முயற்சி செய்”, என்று அவன் அப்பா கூறினார். அவன் மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கிளையை தள்ள முயன்றான். அவன் எவ்வளவு போராடியும் அதைத் தள்ள முடியவில்லை. “அப்பா என்னால் தள்ள முடியவில்லை” என்றான். கடைசியாக அவன் அப்பா, “மகனே நான் உன்னிடம் “உன்னுடைய வலிமைகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்” என்று சொன்னேன். “ஆனால் நீ செய்யவில்லை. என்னிடம் நீ உதவி கேட்கவில்லை” என்றார்.

இக்கதையின் பிரதிபலிப்பு :
  • நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நம்மை விரும்புபவர்கள் மேலும், நம் நோக்கத்தில் அக்கறையுள்ளவர்களின் பலத்தையும் அடையாளம் கண்டு அவற்றை உபயோகிக்கவில்லையென்றால் நாம் நம் முழு பலம் அறியவில்லை என்று தான் அர்த்தம்.
  • உண்மையான வலிமை என்பது தனித்து இயங்காமல் மற்றவர்களின் துணையுடன் இயங்குவது. எந்த ஒரு மனிதனுக்கும், எல்லாவித வலிமைகளும், எல்லா வளங்களும், திண்மையும் ஒரு செயலை மலரச் செய்வதற்கான பார்வையும் இருப்பதில்லை. அதற்குத் தேவை நிறைய மனிதநேயமுள்ள மனிதர்கள் இணைந்திருத்தல் ஆகும்.
  • நாம் உதவி மற்றும் ஆதரவு கேட்பது என்பது நாம் பலவீனமானவன் என்பதைச் சொல்ல அல்ல. நமது புத்திசாலித்தனத்தை காட்டுவதற்காகத்தான் ஆகும். நாம் ஒற்றுமையாக வாழ்வது தான் மிகப்பெரிய வலிமை. நாம் உதவி கேட்கும் போது மறுத்தலுக்கு அர்த்தம் மறுபடியும் கேட்க வேண்டும், அல்லது வேறு விதத்தில் அல்லது வேறு சமயத்தில் கேட்க வேண்டும் என்றோ அல்லது வேறு ஒருவரிடம் கேட்க வேண்டும் என்று அர்த்தம்.