வகுப்பு 37 – பகுத்தாராய்தல்

வகுப்பு 37 – பகுத்தாராய்தல்
கதை
மூன்று மீன்கள்

முன்னொரு காலத்தில் ஒரு ஏரியில் மூன்று பெரிய மீன்கள் வாழ்ந்து வந்தன . அவை மூன்றும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் குணாதிசயங்களில் பெரிதும் வேறுபட்டு இருந்தன. முதல் மீன் மிகவும் புத்திசாலி. எதைச் செய்தாலும் நன்றாக சிந்தித்து விட்டு செய்யும். இரண்டாவது மீன் மிகவும் உற்சாகமாகவும், புத்திசாலியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் .எந்த ஒரு பிரச்சனைக்கும் மூளையை உபயோகித்துத் தீர்வு கண்டு பிடிக்கும். மூன்றாவது மீன் விதியை நம்பும் .எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும் .யாராலும் மாற்ற முடியாது என்று நம்பிக் கொண்டிருக்கும். ஒருநாள் கரைக்கு அருகில் உள்ள நீரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, புத்திசாலி மீன் , ஒரு மீனவன் மற்றொரு மீனவனிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டது. ” இந்த ஏரி நல்ல நல்ல மீன்களால் நிரம்பியுள்ளது. நாம் நாளையும் மீன்பிடிக்க இங்கே வருவோம்” என்றான். இதைக் கேட்ட மீன் தன் நண்பர்களிடம் ஓடிப்போய் கூறியது,” நாம இந்த வாய்க்கால் வழியே சென்று மற்றொரு ஏரிக்குச் சென்று விடலாம்” என்றது. இரண்டாவது மீன், நான் இந்த ஏரியை விட்டு நகர மாட்டேன். மீனவன் வரும்பொழுது என்னை காப்பாற்றி கொள்ள ஏதேனும் வழி கண்டுபிடிப்பேன்.என்றது. மூன்றாவது மீன்,”நான் என் வாழ்நாள் முழுவதும் இங்குதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதை விட்டு நகர மாட்டேன் . என்ன நடக்கிறதோ நடக்கட்டும்” என்றது. இந்த புத்திசாலி மீனுக்கு அங்கு இருக்க மனமில்லை .அடுத்த ஏரிக்கு சென்று விட்டது. அடுத்த நாள் காலை மீனவன் வந்தான். வலை விரித்தான். இரண்டு நண்பர்களும் வலையில் சிக்கினர். ஆக்கப்பூர்வ மீன் வெளியே வர வழி யோசித்தது. இறந்த மீன் போல் அசையாமல் கிடந்தது. மீனவன் அதைத் தூக்கி நீரில் எறிந்து விட்டான். விதியை நம்பிய மீன் வலைக்குள் சிக்கித் தவித்தது. ஒரு மீனவன் அதைக் கொன்று விட்டான்.