வகுப்பு 32 – நேர்மை

வகுப்பு 32 – நேர்மை

ஒரு கிராமத்தில் ராமு என்கிற பால்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ராமு மிகவும் நேர்மையானவர் என்பது அவ்வூரில் இருந்த அனைவரும் அறிந்ததே. அவருக்கு சூர்யா, சந்திரா என்று இரண்டு மகன்கள் இருந்தனர். ராமு, ” எவரையும் ஏமாற்றக்கூடாது. எவருக்கும் துரோகம் செய்யக்கூடாது.

நேர்மையான உழைப்பு மட்டுமே வாழ்க்கையில் உண்மையான அமைதியும் சந்தோஷமும் கொடுக்கும்” என்று மீண்டும் மீண்டும் மகன்களுக்கு அறிவுறுத்துவார். ஒரு நாள் சூர்யா, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வில்லை என்று தந்தை ராமு அவனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அதனால் மனமுடைந்த சூர்யா, திரும்பி வரவேக்கூடாது என்ற தீர்மானத்துடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். வயது முதிர்ந்த ராமு சூர்யாவைப் பற்றி நினைக்கும்பொழுதெல்லாம், மிகவும் மனமுடைந்து போனார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னர் , சந்திராவை அழைத்து , “எனது அருமை மகனே உன் சகோதரன் சூர்யாவைக் கண்டுபிடிக்க முடிந்த வரை முயற்சி செய். அவனுடைய நெற்றியில் ஒரு பெரிய கருப்புத் தழும்பு இருக்கும் .அதை வைத்து நீ அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் பத்து எருமை மாடுகளில் ,ஐந்தை அவனுடைய பங்காக அவனிடம் கொடுத்துவி்டு” என்றார். ராமு இறந்த பிறகு, சந்திரா அருகில் உள்ள கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும், கண்காட்சிகளிலும் சூர்யாவைத் தேடிப் பார்த்தான். ஆனால் பயனில்லை. ஒரு நாள், சந்திரா மேய்ச்சல் முடித்து மாடுகளுடன் வீடு திரும்பும்போது, வழியில் ஒரு மரத்தடியில் புதிதாக ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டான். அருகில் சென்று பார்த்தால், அந்த மனிதரின் நெற்றியில் ஒரு பெரிய கருப்புத் தழும்பு இருப்பதைக் கண்டான். தன் சகோதரன் என்பதை உணர்ந்தான். ஆனால் சகோதரனின் கிழிந்த அழுக்கேறிய ஆடைகளை கண்டு மிகவும் மனம் வருந்தினான். அழுகை வந்தது. ” சூர்யா அண்ணா! நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு? வாருங்கள் நம் வீட்டிற்குச் செல்லலாம். நம் தந்தை நமக்காக விட்டுச் சென்ற எருமை மாடுகளில் ஐந்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பாலும், வெண்ணெயும் விற்று சந்தோஷமாக வாழலாம்” என்றான். இருவரும் வீடு சென்றனர். இரவு உணவிற்குப் பிறகு இருவரும் படுக்கை விரித்து உறக்கத்தில் ஆழ்ந்தனர். அடுத்த நாள் காலை சந்திரா கண் விழித்துப் பார்த்தால், அண்ணனைக் காணவில்லை. ஐந்து எருமை மாடுகளையும் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார். சந்திரா விற்கு ஒரே குழப்பம். சூர்யா ஏன் இப்படி ஓடியிருக்க வேண்டும் ? நான் ஏமாற்றப் பட்டுவிட்டேனா? இல்லை. கடவுள் தான் சாட்சி. தந்தையின் அறிவுரைப்படி , நேர்மையாக அவர் கூறியதைத்தான் செய்தேன். நான் ஏன் கவலைப்பட வேண்டும்? ” என்று கூறிக் கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு அழகிய மாட்டு வண்டி சந்திராவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சந்திரா வெளியில் சென்று பார்த்தால் , நெற்றியில் ஒரு பெரிய கருப்புத் தழும்புடன் ஒருவர் சந்திராவை நோக்கி வந்தார். ஆனால் அவர் இன்று நல்ல ஆடை உடுத்தியிருந்தார். பணக்காரராகவும் இருந்தார். சந்திராவின் அருகில் வந்து ,”என்ன தம்பி , என்னை உனக்கு அடையாளம் தெரியவில்லையா? என்று கேட்டார். அதற்குச் சந்திரா வருத்தமான குரலில், ” அண்ணா உங்களை எனக்கு நன்றாக அடையாளம் தெரிகிறது. ஆனால், நான் ஒரு தவறு இழைத்து விட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாரோ ஒருவரை நீங்கள் என்று தவறாக நினைத்து , உங்களுடைய ஐந்து மாடுகளையும் கொடுத்து விட்டேன். அந்தத் தவறுக்காக, நான் எனக்காக வைத்திருக்கும் 5 மாடுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்.

சூர்யா சகோதரனை கட்டித்தழுவிக்கொண்டு, “என் அன்பு சகோதரனே! நீ எந்தத் தவறும் செய்யவில்லை. நான்தான் உன் நேர்மையைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக ஒரு ஏழையைப் போல் உடையணிந்து வந்தேன். ஆனால் நீயோ நம் அன்புத் தந்தையைப் போலவே மிகவும் நேர்மையாக இருக்கிறாய். அவருடைய ஆசீர்வாதத்தால் நான் நல்ல முறையில் காய் கனி வியாபாரம் செய்து வருகிறேன். இப்பொழுது எனக்கு நகரத்தில் ஒரு பெரிய வீடு ,இந்த மாட்டு வண்டி, மற்றும் ஒரு பழத்தோட்டம் ஆகியவை உள்ளன. நான் உன்னையும் நகரத்துக்கு அழைத்துச் செல்லதான் வந்தேன். நான் உனக்காக சந்தையில் ஒரு இடம் வாங்கி இருக்கிறேன் . நீ அங்கு வந்து பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்கும் கடை வைக்கலாம் ” என்றார். பின்னர் இருவரும் அவர்களுடைய தந்தையாரின் படத்தின் முன் நின்று கொண்டு, “தந்தையே ! நீங்கள் எப்பொழுதும் எங்களுக்கு நேர்மையையே கற்றுக் கொடுத்தீர்கள் .அது எங்களுடைய அதிஷ்டம். இன்று அந்த நேர்மை தான் எங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது .எவ்வளவு பணம் வந்தாலும் கிடைக்கப்பெறாத மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தது” என்றனர்.

செயற்பாடு
  • எவன் ஒருவன் பொய் கூறாமல் பிறரை ஏமாற்றாமல் பிறர்பொருள் திருடாமல் இருக்கிறானோ அவனே நேர்மையானவன். நம் செயல்கள் அனைத்திலும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கிறார். மக்களுடைய உடைமைகளைப் பற்றியதுதான் நேர்மை என்பது. கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் செய்ய வேண்டிய நேர்மையான செயல்கள் எவை என்று கூறவும்.
  • நீங்கள் தரையில் ஒரு பென்சில் பார்க்கிறீர்கள். அதை வேறு எவரும் கவனிக்கவில்லை.
  • உனக்கு ரொட்டி வாங்க ரூபாய் 10 கொடுக்கிறார். ரொட்டி விலை ரூ 10/- . மீதமுள்ள சில்லறையை என்ன செய்வாய்?
  • மேஜை மேலுள்ள கிண்ணத்தில் இனிப்புகள் உள்ளன. அங்கு எவரும் இல்லை. நீ என்ன செய்வாய்?
  • உன் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக ,அப்பா உனக்கு 5 ஸ்டிக்கர்கள் கொடுக்கிறார். அதில் ஒன்று மிகவும் அழகாக இருக்கிறது . நீ அதை உன்னிடம் வைத்துக் கொள்ள விரும்புகிறாய் . என்ன செய்வாய்?
  • நீ உன் நண்பருடன் தாயம் விளையாடிக் கொண்டிருக்கிறாய். அவன் கவனிக்கவில்லை. காயை ஒரு சில கட்டங்கள் முன்னே நகர்த்தினால், நீ வெற்றி பெற்று விடுவாய் என்பது உனக்குத் தெரியும்.