வகுப்பு 29 – உண்மை

வகுப்பு 29 – உண்மை

நீ ஏன் உண்மை பேச வேண்டும்?

உன்னிடம் எவரும் பொய் சொல்வதை விரும்ப மாட்டாய் இல்லையா? ஆகவே நீயும் ஒரு பொழுதும் எவரிடமும் பொய் சொல்லக்கூடாது. ஒருவேளை உன் நண்பன் உன்னிடம் பொய் சொன்னதை நீ அறிய நேர்ந்தால், நீ எப்படி உணர்வாய்? ஏமாற்றப் பட்டதாக நினைப்பாய் அல்லவா? ஆகவே நீ எவரிடமாவது பொய் சொன்னால் அவர்கள் மறுபடி உன் சொற்களை நம்ப மாட்டார்கள்.

சத்தியத்தின் அடிப்படையிலான ஒரு வாழ்க்கையை நீ எப்படி வாழக்கூடும்?

செயற்படி 1: உன் எண்ணங்களை செம்மையாக்குக. நல்லனவற்றையே சிந்திக்க, சந்தோஷமானவற்றையே சிந்திக்க. மற்றோர்களின் குற்றங்களை மன்னிக்க. நீ உட்பட எவரும் முழுவதும் சரியானவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க.

செயற்படி 2: எதை நினைக்கிறாயோ அதை சொல். நினைப்பது ஒன்று சொல்வது ஒன்று என்று இருக்காதே. உண்மையைக் கூறும் போது அதனை மரியாதையாகவும் பிறரைத் துன்புறுத்தாமலும் கூற வேண்டும் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்.

செயற்படி 3: எதைச் சொல்கிறாயோ அதனைச் செய். உன் வார்த்தையைக் காப்பாற்று. அதனை நீ சத்தியம் செய்யாதிருந்தாலும், அதனைச் செய்ய வேண்டும். எல்லா விஷயத்திலும் உன் வார்த்தைகள் எங்கு காப்பாற்றபட வேண்டுமோ அங்கு அதனை காப்பாற்ற முயற்சி செய். ஒரு சிறு விஷயத்தைக்கூட நீ செய்வேன் என்று சொல்லியிருந்தால் நீ அதனைச் செய்யத்தான் வேண்டும். நீ சொல்லும் எந்த வார்த்தையையும் நீ காப்பாற்ற முயற்சிக்கத்தான் வேண்டும்.

கதை

ஜார்ஜ் என்னும் பெயருடைய சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் தந்தை ஒரு நாள் ஒரு சிறு கோடரியை விளையாடக் கொடுத்தார். ஜார்ஜ் கோடரி, கிடைத்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். உடனே தோட்டத்துக்கு ஓடிச்சென்று ஒரு சிறிய செர்ரி மரத்தை வெட்ட ஆரம்பித்தான்.

மாலையில் ஜார்ஜின் தகப்பனார் வெட்டப்பட்டு தரையில் கிடந்த செர்ரி மரத்தைப் பார்த்தார். யார் இதை செய்தது? என்று கோபத்துடன் கேட்டார்.

பயந்துபோன ஜார்ஜ், பதிலிறுத்தான். தந்தையே, நீங்கள் கொடுத்த சிறிய கோடரியால் நான் தான் வெட்டினேன். ஜார்ஜின் தகப்பனார் உடனே அவனைக் கட்டியணைத்துக் கொண்டு கூறினார்” நீ உண்மை கூறியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். என் மகன் பொய் உரைப்பதை கேட்பதை விட அனைத்து மரங்களையும் இழந்தாலும் பரவாயில்லை.

அந்தப் பையன் யார் என்று உனக்குத் தெரியுமா? அவர்தான், ஜார்ஜ் வாஷிங்டன்.