வகுப்பு 25 – மக்கள் சேவையே மகேசன் சேவை

வகுப்பு 25 – மக்கள் சேவையே மகேசன் சேவை
கதை : மக்கள் சேவையே மகேசன் சேவை

முன்னொரு காலத்தில் மார்ட்டின் என்னும் ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் மிகக் குறைந்த பொருட்களே இருந்தன. உண்பதற்கு சற்றே போதுமான உணவே இருந்தது. எனினும் இறைவனை நேசிக்க ஒரு இதயம் இருந்தது. ஒரு நாள் அவன் கனவில் வந்த இறைவன், மறு நாள் அவனைப் பார்க்க வருவதாகக் கூறினார். இறைவன் மார்ட்டினிடம், ஏதாவது நல்லதாகச் சாப்பிடுவதற்கு வைத்திருக்குமாறு கூறினார்.

மறுநாள் காலை மார்ட்டின் எழுந்திருந்து, தன்னிடம் இருந்த மொத்த பணத்திற்கும் காய்கறி வாங்கினான். இறைவன் சாப்பிடச் சுவையான உணவு தயார் செய்து வைத்து விட்டு காத்திருந்தான். ஜன்னல் வழியே பார்த்த போது குளிரில் நடுங்கி கொண்டிருந்த வயதான ஒரு ஏழை மனிதரைக் கண்டான். அந்த கிழவனுக்கு ஒரு போர்வையை அளித்து, தனக்காகத் தயார் செய்து வைத்திருந்த தேனீரைக் கொடுத்தான்.

அடுத்ததாக ஒரு வயதான பெண்மணி, பசியினால் ஏறக்குறைய மயக்கமடையும் நிலையில் இருப்பதைக் கண்ட மார்ட்டின், அவளுக்கு இறைவனுக்காகத் தயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டில் ஒரு பகுதியைக் கொடுத்து, சில பழங்களையும் அளித்தான். அவள் அவனை வாழ்த்திவிட்டுச் சென்றாள்.

பிறகு ஒரு குழந்தை அழுவதைக் கேட்டான். வெளியில் பார்த்தபோது, ஒரு ஏழைத் தாய், தன் பசிக்கும் குழந்தைக்குப் பாலளிக்க முடியாத தன் நிலையை எண்ணி அழுவதைப் பார்த்தான்.

தன்னிடமிருந்த மொத்தப் பாலையும், மார்ட்டின் அவளிடம் கொடுத்தான்.http://demo3.esales.in:8081/ பாலைக் குடித்த குழந்தை அவனைப் பார்த்து புன்னகைத்தது. தாயும் குழந்தையும் சென்றனர்.

இருட்டத் தொடங்கி விட்டது. மார்ட்டின் மிக வருத்தமாக இருந்தான். இப்போது இறைவனே வந்தாலும் அவனிடம் சிறிதளவு சில்லிட்டுப்போன உணவுதான் இருந்தது. பாலோ பழமோ ஏதும் இல்லை. அவன் இறைவனிடம் மன்னிப்புக் கோரினான். திடீரென வாயிலில் காலடியோசை கேட்டது. ஒரு \வினோதமான ஒளியும் அறைக்குள் புகுந்தது.

அந்த ஒளியில் அவன் முன்னே, அந்த வயதான நடுங்கும் கிழவன், பசித்திருந்த வயதான பெண்., குழந்தையுடன் கூடிய ஏழைத்தாய் ஆகியோர் தோன்றினர். பின்னர் அந்த அழகான ஒளியில் மார்ட்டின், இறைவனின் ஒலி; “அது நானே, அது நானே, அது நானே.” என்று சொல்லுவதைக் கேட்டான். ஒளி மறைந்தது.