வகுப்பு 20 – காக்கும் நாமம்

வகுப்பு 20 – காக்கும் நாமம்
கதை- பண்டிதரும் பால்காரியும்( ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய கதை)

ஒரு காலத்தில் ஒரு ஆற்றங்கரையின் ஒரத்தில் ஒரு பண்டிதர் வசித்து வந்தார். அவர் மெத்தப் படித்தவர் ஆதலால், தொலைவிலிருந்தெல்லாம் இதர பண்டிதர்கள் அவரிடம் ஆலோசனை கேட்க வந்தனர். அவர் மீது பாராட்டு மழை பொழிந்தனர்.

ஆற்றின் எதிர்கரையில் இருந்த லஷ்மி என்னும் பால் வியாபாரம் செய்யும் பெண் பண்டிதருக்குப் பால் விற்று வந்தாள். அவளுடைய நாட்கள் மிகவும் பரபரப்பானவை. அவள் விடியற்காலையிலேயே எழுந்து, மாடுகன்றுகளைக் குளிப்பாட்டி, பால் கறந்து, பின்னர் தன் வயதான தந்தையார்க்கு உணவு சமைத்து வைத்து விட்டுப் பால் விற்பனை செய்ய கிளம்பி விடுவாள். அவள் ஆற்றைக் கடக்க படகு மூலம் தான் அக்கரை செல்ல வேண்டும். ஒரு நாள் பண்டிதர் வெகு நேரமாக அவள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அவள் வந்தபின் பண்டிதர் கூறினார், “ஆ! லட்சுமி ஒரு வழியாக வந்துவிட்டாயா? உனக்காக நான் விடியற்காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன். நாளையிலிருந்து சூரிய உதயத்திற்குள் எனக்குப் பால் வரவேண்டும்” என்றார். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் லக்ஷ்மி, நதிக்கரைக்கு விரைந்தாள். ஆனால் பொழுது விடிந்து வெகு நேரம் ஆகியும் படகோட்டி காணப்படவில்லை பண்டிதர் பாலுக்காகக் காத்திருப்பார் என்று லட்சுமிக்குத் தெரியும். எனவே “சீக்கிரம் சீக்கிரம்” என்று படகோட்டியை துரிதப்படுத்தினாள். பண்டிதர் குறை கூறினார். “நீ மறுபடியும் காலதாமதமாகவே வருகிறாய். என்ன நடந்தது?” என்று அவர் கேட்டார். அவர் அன்று கெட்ட மனநிலையில் இருந்தார். “எனக்கு தாமதத்திற்கான காரணம் வேண்டாம்.” என்று கத்தினார். “என் வார்த்தைகளை மதிக்காது இருக்க உனக்கு எவ்வளவு தைரியம்? நான் யார் என்று உனக்குத்தெரியுமா? நீ ஒரு சாதாரண பால்காரி. எனக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியும். அந்த நதி நமது வாழ்க்கை நீரோட்டம் போன்றது. மக்கள் நமது வாழ்க்கை என்னும் நதியையே விஷ்ணுவின் மற்றொரு பெயரான ஹரி நாமத்தைச் சொல்லியே கடந்து விடுகிறார்கள். http://demo3.esales.in:8081/ லட்சுமி பண்டிதரின் வார்த்தையைத் தீவிரமாக மனதில் கொண்டு, இதை இவர் முன்பே சொல்லியிருக்கலாகாதா என்று நினைத்தாள். மறு நாள் லட்சுமி, பண்டிதரின் வீட்டை சூரியோதயத்துக்கு முன்பே அடைந்து விட்டாள். அங்கு படகோட்டியைக் காணாததால் அவள் எங்ஙனம் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியும் என பண்டிதர் ஆச்சரியப்பட்டார். ”எவ்வாறு நதியைக் கடந்தாய்?” என்று லக்ஷ்மியை பண்டிதர் வினவினார்.

லக்ஷ்மி முறுவலுடன் கூறினாள், “ நீங்கள் எனக்கு ஹரியின் நாமத்தைக் கூறியவாறு நதியை கடக்க கற்றுக்கொடுத்தீர்கள். அதை நான் செய்தேன்”. இது நடவாத காரியம் என்று கூச்சலிட்ட பண்டிதர் மீண்டும் நதியைக் கடக்க உத்தரவிட்டார். லக்ஷ்மி எந்த கடினமுமின்றி, ஹரியின் நாமத்தை உச்சரித்தவாறு முன்போலவே, மீண்டும் நதியை கடந்தாள். அவள் துளிக்கூட நனையவில்லை. பண்டிதர் தாமும் ஹரியின் நாமத்தை உச்சரித்தவாறு கடக்க முயன்றார். ஆனால் அவர் தன்னுடைய ஆடைகள் நனையாமல் இருக்க முயற்சித்தபோது நதியில் விழுந்தார். லட்சுமி திகைப்புற்றாள்.

“ஓ,பண்டிதர் ஐயா, நீங்கள் ஹரியை நினைக்கவேயில்லை. நீங்கள் உங்கள் வேட்டியை பற்றித்தான் மும்முரமாக நினைத்தீர்கள். அதனால் தான் மந்திரம் வேலை செய்யவில்லை. என்றாள் லட்சுமி. பண்டிதர் லக்ஷ்மியின் பக்தியைப் புகழ்ந்து இவரது வெத்து படிப்பைவிட அவளுடைய நம்பிக்கையே சிறந்தது என்று உண்மையாகப் பாராட்டி வாழ்த்தினார்.

அறிவைவிட நம்பிக்கையே அதிக சக்தி வாய்ந்த்து.