வகுப்பு 17 – இரக்கம்

வகுப்பு 17 – இரக்கம்
கதை : ஒரு கோப்பைப் பால்

ஒரு ஏழைச் சிறுவன் ஒருவன் தினமும் பள்ளிக்கு செல்லும் பொழுது, வழியில் உள்ள வீடுகளில் பொருட்களை விற்று அவனது உணவு செலவுகளை ஓரளவு சமாளித்து வந்தான். ஒருநாள் அவனிடம் வெறும் பத்து பைசா தான் இருந்தது. ஆனால் மிகவும் பசியாக இருந்தான். அதனால் அருகில் இருந்த வீட்டில் சென்று சாப்பாடு கேட்கலாம் என்று முடிவு செய்தான். ஆனால் அந்த வீட்டின் இளம் மாது கதவைத் திறந்த பொழுது, சிறிது தடுமாற்றக்குப் பின் சாப்பாடு கேட்பதற்குப் பதிலாக ஒரு கோப்பை தண்ணீர் கேட்டான். இவன் பசியாக இருப்பதை அறிந்த அப்பெண் ஒரு பெரிய கோப்பை முழுவதும் பால் எடுத்து வந்து கொடுத்தாள். அவன் மெதுவாக அந்தப் பாலை குடித்து முடித்துவிட்டு அவளிடம் நான் உங்களுக்கு இதற்காக எவ்வளவு பணம் தரவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள் நீ எனக்கு எதுவும் தர வேண்டாம் இரக்க செயலுக்கு எவ்வித வருமானமும் பெறக்கூடாது என்று என் தாய் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று கூறினாள். ஓ அப்படியா என் உள்ளம் கனிந்த நன்றி என்று கூறிவிட்டு சென்றான். ‘கெல்லி’ என்ற அச்சிறுவன் அந்த வீட்டை விட்டு நகரும் போது அவன் உடலுக்கு மட்டும் வலிமை வரவில்லை அவன் உள்ளத்திலும் இறைவன் மீதும், மனிதன் மீதும் இருந்த நம்பிக்கையும் வலுத்தது. அவன் அத்தொழிலை விட்டு வெளியேறத் தயாரானான்.

பல வருடங்களுக்குப் பின்னர் அப்பெண்மணி நோய்வாய்ப்பட்டாள். உள்ளூர் மருத்துவர்களால் அவளது நோயைக் குணப்படுத்த முடியவில்லை அதனால் அவள் வெளியூருக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அவளுடைய விசித்திரமான நோயைக் கண்டுபிடிக்க நிறைய சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் டாக்டர் கெல்லியும் ஒருவர். அப்பெண்மணியின் சொந்த ஊரின் பெயரைக் கேட்ட டாக்டர் கெல்லியின் கண்கள் பளிச்சிட்டன. அவர் உடனடியாக எழுந்திருந்து , அப்பெண்மணி இருந்த அறைக்குச் சென்றார். மருத்துவ உடையணிந்த டாக்டர் கெல்லி அவளைக் காணச் சென்றார். அவளை உடனே அடையாளம் கண்டு கொண்டார். அவளுடைய நோயைக் குணப்படுத்த எப்படியாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு உடனடியாக அவருடைய அறைக்குத் திரும்பினார். அன்றுமுதல் அவள் மேல் சிறப்பு கவனம் செலுத்தினார். நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் அவர் வெற்றி கண்டார். மருத்துவமனை அலுவலகத்திடம்,அவளுடைய மருத்துவமனை கட்டணச் சீட்டைத் தம்மிடம் அனுப்பிவைக்குமாறுக் கேட்டார். அதைப் பார்த்துவிட்டு, அதன் அடியில் ஏதோ எழுதி விட்டு அவள் அறைக்கு அனுப்பிவிட்டார். அவள் கண்டிப்பாக கட்டணம் மிகவும் அதிகமாகத் தான் இருக்கும் என்ற பயத்துடனே சீட்டை பிரித்துப் பார்த்தாள். அதன் அடியில் ஏதோ எழுதப்பட்டிருந்ததை கவனித்தாள். அதில், “ஒரு கோப்பைப் பாலால் முழுப் பணமும் கட்டப்பட்டு விட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் கெல்லி கையெழுத்திட்டிருந்தார்.

மனித வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. முதலாவது இரக்கம். இரண்டாவது இரக்கம். மூன்றாவதும் இரக்கம். இரக்கச் செயல் என்றும் வீணாவதில்லை புன்னகையுடன் இரு.