வகுப்பு 11 – அன்பு பள்ளியிலும் தொடரட்டும்

வகுப்பு 11 – அன்பு பள்ளியிலும் தொடரட்டும்

கேளிக்கை நிரம்பிய இடமாகப் பள்ளிக்கூடம் இருக்கிறது. நல்ல மாணவராக இருக்க வேண்டும். எப்படி நல்ல மாணவராக இருக்க முடியும்? உங்கள் ஆசிரியர்கள் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் நேரத்தை உங்களுடன் செலவிடுகிறார்கள். நீங்கள் கற்பதற்கும், நல்ல மனிதனாக வளர்வதற்கும் உதவுகிறார்கள். வகுப்பில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கூறுவதை கவனமாகக் கேளுங்கள். அவர்களைக் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதன் மூலம் உங்களின் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்தலாம். அதனால் அவர்கள் மகிழ்வார்கள்.

நல்ல மதிப்பெண்கள் எடுப்பதால் மட்டும் ஒருவனை நல்ல மாணவன் என்று சொல்ல முடியாது. பள்ளியில் எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஒரு நல்ல மாணவராக இருக்க, பள்ளிக்கு நேரம் தவறாது வர வேண்டும். வீட்டு பாடத்தைத் தவறாது ஒழுங்காகச் செய்ய வேண்டும். நல்ல சுத்தமான சீருடையை அணிந்து வர வேண்டும்.

அனைவரிடமும் நல்ல நண்பராக இருந்து சக மாணவர்களை மகிழ்வித்தல்

எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். நீ மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், இருப்பதன் மூலம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யலாம். மற்றவரைக் காணும்போது புன்னகை செய்ய வேண்டும். சிறிய விஷயங்களுக்காக சண்டையிட வேண்டாம். கோபம் கொண்டு அடுத்தவரை அடிக்கக்கூடாது. ஆசிரியரிடம் உதவி கேட்கலாம். உன் நண்பனிடம் கோபம் கொள்ளும் போது, “நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்” என்று சொல்லிக் கொள்ளுங்கள். நாம் நேசிக்கும் ஒருவரை நம்மால் கோபித்துக் கொள்ள முடியுமா? ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்” என்று சொல்லிக் கொள்ளுங்கள். உன் நண்பன் ஒரு செயலைச் சிறப்பாக செய்தால் சந்தோஷப்பட வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் அனைவராலும் வெற்றி பெற முடியாது. நீங்கள் வேறு ஒரு போட்டியில் வெற்றி பெறுவீர்கள். உன் நண்பன் வெற்றி பெற்றால் அவனை கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டும். நண்பர்களுடன் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. உன் நண்பன் ஒரு தவறு செய்தால் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். தனியாக இருப்பதை விட சேர்ந்து இருந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கதை : உண்மையான நண்பர்கள்

ஒரு அணிலும் நாய்க்குட்டியும் நண்பர்களாக இருந்தன. ஒன்றாக வாழ்ந்து விளையாடி மகிழ்ந்தன. விளையாட்டில் மிக ஆர்வமாக எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது அணில். நாய்க்குட்டியோ தான் எதற்கும் பயன்பட மாட்டோம் என்று மிக வருத்தத்துடன் எண்ணியது. ஒரு நாள் மிக பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மிக உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த அணில் திடீரென நிலைத் தடுமாறி மழை நீரில் விழுந்தது. செய்வதறியாது, தன் நண்பனை உதவிக்கு அழைத்தது. காப்பாற்ற வந்த நாய்க்குட்டியின் மேலேறி பாதுகாப்பான இடத்தை அடைந்தது.