விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

ஸ்லோகம்
  • வக்ரதுண்ட மஹாகாய
  • ஸுர்யகோடி ஸமப்ரப
  • நிர்விக்னம் குரு மேதேவ
  • ஸர்வ கார்யேஷு ஸர்வதா
கதை : கணேசரும் குபேரரும்

இந்து புராணங்களின் படி குபேரர் என்பவர் செல்வத்துக்கு அதிபதி. அவர் உலகத்தின் வளத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உலகத்தைப் பாதுகாப்பவர்களில் அவரும் ஒருவர். குபேரர், இமயமலையில் சிவன் பார்வதி அருகிலேயே வசித்துவந்தார்.

குபேரர் தான் எவ்வளவு பெரிய செல்வம் படைத்தவர், விருந்தோம்பல் செய்பவர் என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பினார். எனவே ஆடம்பரமான விருந்துகள் ஏற்பாடு செய்து அதில் அனைவரும் பங்கு கொள்வதை உறுதி செய்தார். அனைத்து தேவர்களும் பங்கு கொண்டு அவரது அரண்மனையையும், விருந்தோம்பலையும் பாராட்டினாலும் அவர் திருப்தி கொள்ளவில்லை. என்னுடைய விருந்துகளுக்கு சிவனும் அவரது தேவியும் வந்தால் தான் மக்கள் மேலும் புகழ்வார்கள். உயர்ந்த கடவுளும் அவரது தேவியும் வந்து எனது மாளிகையைப் பார்த்து பயபக்தி கொண்டால், மக்கள் என்னிடம் மேலும் மரியாதை கொள்வார்கள்“ என எண்ணினார்.

இவ்வித எண்ணத்தை மனதில் கொண்டு அவர் சிவனின் இருப்பிடமாகிய கைலாயம் சென்றார். உள்ளே நுழைந்தவுடன் வெகு சாதாரணமாக இருந்த சுற்றப்புறத்தைக் கண்டு ‘இவ்வளவு பெரிய கடவுளும் அவரது தேவியும் இந்த திறந்த மலைப் பகுதியில் வசிக்கிறார்கள். நானோ ஆடம்பரமான மாளிகையில் வசிக்கிறேன். இவ்வளவு பெரிய கடவுளுக்கு தன் குடும்பத்திற்கு இன்னும் சிறந்த ஒரு வீட்டை ஏற்பாடு செய்ய இயலாதா. என்னுடைய வசிப்பிட அறையே இவரது வீட்டைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது’ ஏளனம் கொண்டார்.

சிவனும் பார்வதியும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் குபேரன் உள்ளே நுழைந்து அவர்களுக்கு வணக்கம் செய்தார். “என்ன காரியமாக வந்துள்ளீர்கள் குபேரரே?” ஒரு புன்முறுவலுடன் சிவன் வினவினார். குபேரன் மெதுவாக பேச ஆரம்பித்தார், ”தேவா, நான் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.” பார்வதி இடைமறித்தாள், ”விருந்தா? என்ன விசேஷம்?”

குபேரன் மரம் போல் நின்றார். தேவியைப் பார்த்து பேசத் தடுமாற்றம் உற்றார், தன் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகத்தான் விருந்து என அவரால் சொல்ல முடியவில்லை. அது ரொம்பவும் தர்மசங்கடமாக இருக்கும். பின்னர் சமாளித்துக் கொண்டு ‘’தேவி, நான் கொண்டாட விரும்பினேன். வாழ்க்கையை கொண்டாடுதல். ஏனென்றால் அது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. எனவே நான் ஒரு விருந்து கொடுக்க நினைத்தேன்’’. என்று நொண்டி சமாதானம் கூறினார்.

சிவன் பார்வதியை ஏறிட்டு பார்த்தார். அவர்கள் இருவரும் உடனடியாக உணர்ந்து கொண்டார்கள். விருந்து ஏற்பாடு என்பது குபேரன் தனது பணக்காரத்தனத்தை வெளிச்சமிடத்தான் ஏற்பாடு செய்திருக்கிறாரே ஒழிய வேறொன்றுமில்லை என்று .பார்வதி தேவி சிவனைப் பார்த்து சிரித்து தலையசைத்தாள். அவள் குபேரனைப் பார்த்தாள். “குபேரா, உன்னுடன் வர எனக்கு விருப்பம்தான். ஆனால் நாங்கள் மிகவும் வேலையாக இருக்கிறோம்.” பார்வதி உறுதியாகக் கூறினாள்.

“என் இறைவா, என் தேவி, எனக்குத் தெரியும். நீங்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறீர்கள் என்று. நான் இந்த விருந்தை நீங்கள் வருவீர்கள், ஓய்வெடுப்பீர்கள் என்று எண்ணி ஏற்பாடு செய்து விட்டேன். தயவு செய்யுங்கள்” என்று கைகளை கூப்பி வேண்டி தேவியை பார்த்தார் நிராதரவாக.

“நல்லது குபேரரே. இப்பொழுது என் மகன் கணேசன் இங்கு வரப்போகிறான். அவன் சாப்பிட வேண்டும். நான் அவனுக்கு உணவிட வேண்டும்.” என்று பார்வதி ஒரு ஆழ்ந்த சிரிப்புடன் கூறினாள், அதை பார்க்கத் தவறிவிட்டார் குபேரன். குபேரன் சிரித்துக்கொண்டே, “ஓ தேவி, நீங்கள் கணேசரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நீங்கள் அனைவரும் அங்கு சாப்பிடலாம்.” பார்வதி குபேரனைப்பார்த்து, அவன் பொறியில் மாட்டிக்கொண்டதை அறியாமல் இருக்கிறானே என்று எண்ணிச் சிரித்தாள்.

சிவன் கூறினார், “நல்லது. கணேசனுக்கு விருந்துகள் என்றால் விருப்பம். அதுபோல சாப்பிடுவதிலும் விருப்பம். நீங்களே அவனை உங்களுடன் அழைத்துச்சென்று விடுங்களேன். எங்கள் இருவருக்கும் வேறு வேலை இருப்பதை தாங்களே பார்க்கிறீர்கள் அல்லவா?”

குபேரன் பெருமையுடன் தலையசைத்தார். ‘என்னால் இறைவனையும் தேவியையும் வரவழைக்க முடியவில்லை என்றால், கணேசரும் உயர்வுதான்!’ என்று எண்ணினார்.

அப்போது கணேசர் வீடு திரும்பினார், “அம்மா நான் வந்துவிட்டேன். எனக்கு பசிக்கிறது சாப்பாட்டுக்கு என்ன இருக்கிறது? எப்படி இருந்தது உன்னுடைய…………………………..” கணேசர் பெற்றோர் குபேரனுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்ணுற்றார். தன்னைப் பார்த்து விஷமத்துடன் கண் சிமிட்டும் தாயைப் பார்த்தார். குபேரனைப் பார்த்து தாய் தலையை அசைப்பதை பார்த்தவுடன், புரிந்து கொண்டு, குபேரனை வரவேற்றார். “நல்வரவு குபேரா, எப்பேர்ப்பட்ட ஆச்சரியம். நீங்கள் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? கணேசர் மரியாதையுடன் வினவினார்.

குபேரர் பதிலிறுத்தார். “ஐயனே நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன்.” கணேசர் சந்தோஷத்துடன் கை கொட்டினார். “விருந்தா? எனக்கு விருந்துகள் பிடிக்கும் ஆனால் என்ன விசேஷம்?” என்று புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்.

சிவனும் பார்வதியும் தங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒருவரையொருவர் பார்ப்பதை தவிர்த்தனர். குபேரன் தயக்கத்துடன் “ஐயா, நான் வாழ்க்கையை கொண்டாடுவதற்காக விருந்து தயார் செய்துள்ளேன். ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு சந்தோஷமாக உள்ளது.”

ஒரு நிமிடம் கணேசர் குபேரனைப் பார்த்தார். உடனே அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டார். அவர் கூறினார்,. “என் பெற்றோர் வேலை மும்முரத்தில் இருக்கின்றனர். நான் தான் உங்களுடன் வரவேண்டியதிருக்கும் என நினைக்கிறேன்.”

குபேரன் பெருமையுடன் தலையாட்டினார். தன் பெற்றோர்க்கு தலையசைத்து விட்டு குபேரனுடன் புறப்பட்டார் கணேசர். விரைவில் இருவரும் குபேரனது மாளிகையை அடைந்தனர். குபேரன் கூறத் தொடங்கினர் ”அந்தப் பூங்காவில் உள்ள நீரூற்றைப் பார்த்தீர்களா? அது விலை மதிப்பற்ற கற்களால் கட்டப்பட்டு இருக்கிறது.

கடுப்புடன் கணேசர் கூறத் தொடங்கினார், “குபேரா. நான் அம்மாவிடம் பசியாக இருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்ததை நீங்கள் கேட்டீர்கள் தானே. உண்மையில் இதையெல்லாம் நான் ரசிப்பேன் என எண்ணுகிறீர்களா?” பசி வயிற்றுடன், மாளிகை பக்கம் கையசைத்து கேட்டார்.

குபேரன் தன் வேலையாட்களை உடனடியாக அழைத்து அவசரமாகக் கூறினார். தட்டுகளை வேகமாக வையுங்கள். உணவுப் பொருட்களை எடுத்து வாருங்கள். கணேசர் நம்முடன் உணவருந்தப் போகிறார். குபேரன் ஏளனத்துடன் கணேசனை பார்த்து நினைத்தார் ‘இந்த சிறுவன் யானைத் தலையனால் எவ்வளவு உண்ண முடியும்?’ குபேரன் இதற்கான விடையை சற்று கடினமான வழியில்தான் கண்டுபிடிக்க நேர்ந்தது.

கணேசர் அமர்ந்து தன் முன்னே இருந்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார். அந்த உணவு உண்மையில் நூற்றுக்கணக்கான பேர் சாப்பிடத் தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், கணேசர், தட்டு காலியானவுடன் இன்னும் கொஞ்சம் உணவு வேண்டி குபேரன் முகத்தைப் பார்த்தார். குபேரன் மேலும் உணவு கொண்டு வர வேலையாட்களுக்கு கட்டளையிட்டார். வேலையாட்கள் மேலும் உணவு கொண்டு வர, அதனையும் குபேரன் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தின்று தீர்த்தார். வேலையாட்கள் சமைத்த உணவு மொத்தத்தையும் கொண்டு வந்து விட்டபடியால் பயந்து கொண்டிருந்தனர். குபேரன் சற்று பயத்துடன் இருந்தாலும், இத்துடன் கணேசர் திருப்தி அடைந்து விடுவார் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தார்.

தட்டை காலி செய்தவுடன், கணேசர் இன்னும் பசியுடன் காணப்பட்டார். ”சாப்பாடு!”, கோபத்துடன் கூக்குரலிட்டார். வேலையாட்கள் குழம்பிப் போய் குபேரனிடம் சென்று, மாளிகையில் இருந்த அனைத்து உணவும் காலியாகிவிட்டதாக முணுமுணுத்தனர். கணேசர் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து, சமைக்கப்படாத பொருட்களையும் கொண்டு வந்து அவரது தட்டில் குவித்தனர். அதுவும் மீதி சாப்பாட்டைப் போல அவரது வயிற்றுக்குள் சென்று மறைந்தது.

குபேரன் எச்சரிக்கையானார், “பக்கத்து கிராமங்களுக்குச் சென்று உடனடியாக கொஞ்சம் உணவு வாங்கி வாருங்கள்” என்று கட்டளையிட்டார். வேலையாட்களும், வீர்ர்களும் ஓடிச் சென்றனர். வேகமாக உணவை வாங்கி வந்து அதனை கணேசருக்கு முன் தட்டில் கொட்டினர். அதுவும் கணேசர் வயிற்றில் சென்று மறைந்தது. மேலும், மேலும் எரிச்சலுற்று, ”இவ்வளவு தானா உன்னிடம் உள்ளது? இது எனக்கு பசியூட்டி தான். எனக்கு உணவு வேண்டும் என்று கணேசர் கத்தினார். குபேரன் பயந்துபோய் பின் வாங்கினார்.

குபேரன் பயந்த குரலில் கூறினார், “ஐயா, என்னுடைய மொத்த உணவும் காலியாகிவிட்டது வீரர்கள் உங்களுக்கான உணவை வாங்கி வருவார்கள்”. “காலியாகிவிட்டதா?” கணேசர் கத்தினார். “இத்துனூண்டு உணவு எனக்கு எப்படி போதும்? இவ்வளவு கொஞ்சம் உணவை சமைத்துவிட்டு, இறைவன், தேவி மற்றும் என்னையும் அழைத்துள்ளீர்கள்?” கணேசர், கணத்துக்கு கணம் சீற்றம் அதிகரித்து காணப்பட்டார். “குபேரா, எனக்கு உணவளிப்பதாக என் தாயிடம் வாக்கு கொடுத்தீர்கள். நான் இன்னும் பசியாகவே இருக்கிறேன். ஆகவே, நான் உன்னைத்தான் இப்போது உண்ணப் போகிறேன்” என்றார்.

“ஆ!” என்று குபேரன் அலறிக்கொண்டே மாளிகையைவிட்டு ஓடினார். அவர் ஓடி, ஓடி, தன்னை கணேசரிடமிருந்து காப்பாற்றக்கூடிய ஒரே நபரை நோக்கி ஓடினார்.

குபேரன், கைலாசத்துக்கு ஓடிச்சென்று, சிவன், பார்வதி சரணங்களில் வீழ்ந்தார். “என் இறைவா, தேவி, தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்”, மூச்சிரைக்கப் பேசினார் குபேரன். “என்ன விஷயம்?” கண்ணைச் சிமிட்டியபடி கேட்டார் சிவன்.

குபேரன் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டார். “இறைவா, தயவு செய்து என்னை கேலி செய்யாதீர்கள். நான் வீண் பெருமை கொண்டிருந்தேன். உலகின் செல்வமெல்லாம் என்னிடம் உள்ளதால் என்னால் எல்லாம் செய்ய முடியும் என எண்ணியிருந்தேன். இப்போது பாடம் கற்றேன். இனி எப்போதும் என் செல்வத்தைக் குறித்து பெருமைப் பட மாட்டேன்.” குபேரன், கணேசர் இன்னும் பின் தொடர்கிறாரா என்று பின்னால் திரும்பிப் பார்த்தார். “தயவு செய்து என்னை கணேசரிடமிருந்து காப்பாற்றுங்கள்” என்றார்.

சிவன் சிறிதளவு சாதம் தன் வீட்டிலிருந்து எடுத்து குபேரனிடம் கொடுத்து. “போ, உன் பெருமையை விடுத்து இதனை கணேசரிடம் கொடு” என்றார். “ஐயன்மீர்! நூற்றுக்கணக்கான பேர்களுக்கு சமைத்து வைத்திருந்த உணவை அவருக்குக் கொடுத்தேன். எனினும் அவர் பசியாக உள்ளார். இந்த உணவு அவரைத் திருப்தி படுத்தும் என நீங்கள் நம்புகிறீர்களா?” எனக் கேட்டார்.

சிவன் முறுவலித்தார், “நீ உன் செல்வத்தின் பெருமையைக் காட்ட வேண்டி, கணேசருக்கு விருந்தளித்தாய். அது ஒருபோதும் அவனை திருப்தி படுத்தாது. நீ தூய மனதுடனும், புனிதமான இதயத்துடனும் எதை தந்தாலும் அது அவரைத் திருப்தி படுத்தும்” என்றார்.

குபேரர், அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பதுபோல். முக்கண்ணனை ஏறிட்டார். இறைவனும், தேவியும் எவ்வளவு ஞானம் நிறைந்தவர்கள் என்று எண்ணினார். இறைவன் கொடுத்த சாதத்தை எடுத்துக்கொண்டார். கணேசர் வீட்டில் நுழைந்திருந்தார். குபேரனை பார்த்தபடி இருந்தார். ஆனால் அடங்கிய நிலையில் இருந்த குபேரனைக் கண்டு ஒளிரும் புன்னகையை சிந்தினார்.

குபேரன் தயக்கத்துடன் முன் வந்து, அந்த சாதத்தை அளித்தார். “ஐய்யனே! இது உங்களை திருப்தி படுத்தும் என நம்புகிறேன்” என்று கூறினார். கணேசர், புன்முறுவலுடன் கேள்வி ஏதும் கேட்காமல், அந்த உணவை உண்டார். வயிற்றை தடவிக் கொண்டார். “குபேரா, வயிறு நிறைந்து விட்டது நன்றி” என்றார்.

கணேசர் வயிறு நிரம்ப உண்டு, தனது விருந்தில் மகிழ்ந்தது குறித்து ஞானம் பெற்றவராக வீடு திரும்பினார், குபேரர்.

கணேசரின் உடலின் பாகங்களின் சிறப்பம்சங்கள்
  • பெரிய காதுகள் – அதிகம் கேட்பது
  • பெரிய தலை –உயர்ந்ததாகவும், தெளிவாகவும் எண்ணுதல்
  • சிறிய கண்கள் – மன ஒன்றிப்பு மற்றும் கவனம்
  • சிறிய வாய் – குறைவாக பேசுதல்
  • பெரிய தும்பிக்கை – நிறைந்த வலிமை, வளைந்து கொடுத்தல்
  • பெரிய வயிறு – அமைதியாக அனைத்தையும் ஜீரணித்தல்; நல்லவை, கெட்டவை, கெடுதி, வலி, துன்பம், சந்தோஷம் என வாழ்க்கை வழங்கும் அனைத்தையும் வைத்துக்கொள்ளும்.