தீபாவளி

தீபாவளி
தீபாவளி

நமஸ்தேஸ்து மஹா மாயே, ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே ஸ்ரீ மஹா லஷ்மி நமோஸ்துதே

தீபாவளியின் போது நாம் ஏன் விளக்குகளை ஏற்றுகிறோம்?

தீபாவளி – ஒளி விழா – விளக்குகளுக்கானது என்பது நன்கு தெரிந்ததே. சிறிய மண் விளக்குகள் ஒரு நகரத்தை விந்தையானதோர் உலகமாக மாற்றிவிடுகின்றன. இந்த பண்டிகை காலத்தில் வீடுகளாயினும், குடிசையாயினும், சுவர்கள், மாடங்கள் அனைத்திலும் ஒளி விடும் சுடர் விளக்குகள் கண்களைப் பறிக்கின்றன.

தீபாவளியில் விளக்கேற்றும் இந்த நடைமுறைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கின்றது. முன்னொரு காலத்தில், நேர்மையான நல்லாட்சி செய்த அரசன் ஒருவன் இருந்தான். ஒர் நாள் அவன் அரசியும், அவள் சேடிகளும் தோழிப்பெண்களும் குளத்தில் நீராடச் சென்றார்கள். நீரில் இறங்குமுன், அரசி தன்னுடைய விலையுயர்ந்த புடவை மற்றும் அணிகலன்களைக் கழற்றி கரையில் துணிகளுடன் வைத்தாள். அந்த குவியலின் மேலே இருந்தது அவளுடைய வைர நெக்லஸ்.

அந்த நேரம் அருகில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த ஒரு கருடன் பளபளத்த நெக்லசை, கொத்திக்கொண்டு பறந்து விட்டது. அனைத்துப் பெண்களும் குளிப்பதில் கவனமாயிருந்ததால் யாரும் இந்த சம்பவத்தை கவனிக்கவில்லை. நீரை விட்டு வெளியே வந்தவுடன், அரசி நெக்லஸைத் தேடினாள். அவளது தோழிகள் அனைவரும் தேடினர். ஆனால் அவர்களால் கண்டு பிடிக்க இயலவில்லை.

அவர்கள் அரண்மனைக்குத் திரும்பினர். அரசனிடம் பதட்டத்துடன் நெக்லஸ் தொலைந்தது பற்றிக் கூறினர். அரசன், அரசி இருவருமே நெக்லஸ் தொலைந்தது பற்றி நிலை குலைந்தனர் தொலைந்து போன நெக்லஸை எவரொருவர் தேடிக் கொண்டு வந்து கொடுத்தாலும் அவர்கள் கேட்கும் சன்மானம் வழங்கப்படும் என அரசன் தண்டோரா மூலம் அறிவிக்க செய்தான். சன்மானம் பெறும் ஆசையில் ராஜ்ஜியத்தில் இருந்த அனைவரும் நெக்லஸை தேடத் தொடங்கினர்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு வாழ்க்கைக்கான எந்த ஜீவனோபாயமும் இல்லாதிருந்தது. அவரது குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருந்தது. ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ள அவர் மனைவி கூறிக் கொண்டேயிருந்தார். முதியவர் எவ்வளவோ வருடங்களாகத் தேடியும் எந்த வேலையும் கிடைக்காத தன் இயலாமையை வெளிப்படுத்தினார். அவள் சாலையில் ஏதேனும் கண்டால் எடுத்துவரும்படி கூறினாள். ஒரு நாள் அவள் அறிவுரைப்படி அவர் சாலையில் கிடந்த குப்பையைப் பொறுக்கி வந்தார். அவர் மனைவி இதைக்கண்டு, வருத்தமுற்று அதனை வீட்டுக்கூரையில் எறியும்படி கூறினாள். அவருடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் அந்த குப்பை மூட்டையில் ஒரு இறந்து போன பாம்பும் கிடந்தது.

அதிர்ஷ்டவசமாக ராணியின் நெக்லஸை தூக்கிச்சென்ற அதே கருடன் பறந்து சென்றுக் கொண்டிருந்த போது இந்த செத்துபோன பாம்பை கூரையில் கண்டது. உடனே கீழே இறங்கி பாம்பை கொத்திக்கொண்டு நெக்லஸை அந்த கூரையில் போட்டுவிட்டு போய் விட்டது. கூரையில் கிடந்த நெக்லஸ், அமாவாசை இருட்டில் ஒளியை சிந்திக்கொண்டு கிடந்தது. அந்த பெண்மணிக்கு உடனே, இது ராணியின் தொலைந்துபோன நெக்லஸ்தான் என்று தெரிந்து விட்டது. உடனே அவர்கள் வேகமாக ஒப்பனை செய்துக் கொண்டு அரசவைக்குச் சென்று அனைத்து விஷயத்தையும் கூறி நெக்லஸை அரசனிடம் ஒப்படைத்தனர். நெக்லஸ் திரும்ப கிடைத்ததாலும் அவர்கள் நேர்மையைக் கண்டும் மனமகிழ்ந்த அரசன் அவர்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டான்.

அவள் அதற்கு தயாராகவே வந்திருந்தாள். “அரசரே, எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களுக்கு தீபாவளி விளக்குகள் கொடுத்தால் நாங்கள் மகிழ்வோம்” என்றாள். அரசர் கூறினார், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. உங்களுக்கு வேண்டியதை எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அவள் கூறினாள், ”இல்லை அரசே, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், தீபாவளியன்று இரவு எண்ணை, விளக்குகள், திரிகள் அனைத்தும் எங்களுக்கு தரப்பட வேண்டும். எங்கள் வீட்டில் மட்டும்தான் விளக்கெரிய வேண்டும் முழு ராஜ்ஜியத்திலும் எவரும் விளக்கேற்றக்கூடாது.

அரசன் இது கேட்டு குழம்பினான். ஆனால் ஏற்கனவே வாக்கு கொடுத்து விட்டபடியால், இதற்கு சம்மதித்தான். நாட்டில் வசிப்பவர் அனைவருக்கும் உத்தரவு வழங்கப்பட்டது, என்னவென்றால் தீபாவளியன்றோ அல்லது அமாவாசையன்றோ ஒருவர் வீட்டிலும் விளக்கேற்றக்கூடாது என்று.

அந்த பெண்மணி தன்னுடன் விளக்கு எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள். தீபாவளியன்று இரவு நகரம் முழுவதிலும் இவளது வீட்டில் மட்டுமே விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. மற்ற இடங்கள் யாவும் இருளில் மூழ்கிக் கிடந்தது.

நகரம் முழுவதும் கும்மிருட்டு. நள்ளிரவில் லக்ஷ்மி தேவி நகரில் நுழைந்தாள். நகரைப் பார்த்து துன்பமடைந்தாள். அமாவாசை இரவு (கும்மிருட்டு நேரம்) எங்கும் விளக்கெரியவில்லை. இருளில் உலவிய அவள் விளக்கேற்றப்பட்டிருந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்றாள். கதவைத் தட்டினாள்.

உள்ளிருந்த பெண்மணி கேட்டாள் ”யாரது? லக்ஷ்மி தேவி பதிலிறுத்தாள்” நான் தான் லக்ஷ்மி தேவி. இரவில் திரிந்து இங்கு வந்துள்ளேன். கதவைத்திறந்து என்னை உள்ளே வரவிடு” என்றாள். அந்த பெண்மணி கூறினாள் ”யாரது லக்ஷ்மி? எங்களுக்கு எந்த லக்ஷ்மியையும் தெரியாது. போய்விடு” என்றார்.

லஷ்மி கூறினாள்: “பெண்மணியே. நான் தான் லக்ஷ்மி. வளங்களையும் செல்வத்தையும் கொணர்பவள். என்னை தயவு செய்து உள்ளே வர விடு.”

அந்த பெண்மணி பதிலுரைத்தாள்: “ஆனால் நீ எங்கும் தங்க மாட்டாயே. எனக்கு சிறிது காலம் இருந்துவிட்டுப் போகும் செல்வம் தேவையில்லை.”

லக்ஷ்மி மீண்டும் உள்ளே வர மன்றாடினாள். ஏனென்றால் வெளியே மிகவும் இருட்டாக இருந்தது. அந்த பெண்மணி லக்ஷ்மியிடம் உள்ளே வந்த பிறகு எப்பொழுதும் வெளியே போக மாட்டேன் என்ற வாக்குறுதியை முதலில் அளிக்கக் கோரினாள். லக்ஷ்மிக்கு இதற்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே உடனே ஒத்துக்கொண்டாள்.

மிகவும் தொல்லையுற்ற லக்ஷ்மி தேவி வீட்டுக்கதவைத் திறந்தவுடன் ஆனந்தமாக உள்ளே நுழைந்தாள். அவள் நுழைந்தவுடன் வறுமை வெளியே ஓடிற்று. அந்த நாள் முதல் முதியவரும் அவரது மனைவியும் சௌகரியமாக பெரிய வீட்டில் வசிக்கத் தொடங்கினர். அந்த நாள் முதல் தீபாவளியன்று அனைத்து இல்லங்களிலும் செல்வ வளம் வேண்டி விளக்குகள் பிரகாசமாக எரியத்தொடங்கின.