புத்த பௌர்ணமி

புத்த பௌர்ணமி
புத்த பௌர்ணமி

புத்தர் ஜன்ம தினம் அல்லது புத்த பௌர்ணமி எனப்படுவது மிகவும் புண்யமான தினமாகும். வைகாசி மாதம் பௌர்ணமியன்று, ஆங்கில மாதமான ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இந்நாள் மிகச்சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அந்தநாள் புத்தர் பிறந்தநாளாகும்; அவர் ஞானம் பெற்றதும் அந்நாளில் தான்; அவர் எண்பதாவது வயதில் இவ்வுலகை விட்டு ஏகியதும் இந்நாளே ஆகும்.

புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். புத்தரின் இயற்பெயர் கௌதம சித்தார்த்தர், இவர் நேபாளில் கபிலவஸ்துவில் கி.மு.543ல் பிறந்தார்.

புத்தரின் பிறப்பும் பிறப்பிடமும்

கௌதம சுத்தோதனர் என்ற அரசனுக்கும் மாயாதேவி என்ற அரசிக்கும் சித்தார்த்தன் பிறந்தார். நேபாளில் ரூபன்தேஹி என்ற மாவட்டத்திலுள்ள, அழகான மற்றும் அமைதியான லும்பினி என்ற காட்டுப்பகுதியில் சால் மரங்கள் நிறைந்த தோட்டத்தில் பிறந்தார். நேபாளில் அமைந்துள்ள கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினியை யுனேஸ்கோ, உலக பாரம்பரிய இடமாகக் பட்டியலிட்டிருக்கிறது,

புத்தர் என்றால் அறிவு விளங்கப் பெற்றவர் என்று பொருள். கௌதம புத்தர் “சாக்கிய முனி” என்றும் அழைக்கப்படுகிறார்.

பிறந்தவுடன் சித்தார்த்தர் வடக்கு நோக்கி ஏழு அடி எடுத்து வைத்து, ஒரு விரலை உயரத்தூக்கிக் காட்டி, தானே இவ்வுலகில் உச்ச சக்தி கொண்டவன் என்றும் இதுவே அவரது கடைசி மனிதப் பிறவி என்றும் உணர்த்தியதாக நம்பப்படுகிறது.

புத்தர் தனது எண்பதாவது வயதில், தன் நெருங்கிய சீடனும் உறவினனுமான ஆனந்தனிடம் தான் கூடிய சீக்கிரம் இவ்வுலகினின்று நீங்கப் போவதாக உரைத்தார். குஷி நகரம் என்ற இடத்தில் கெட்டுப்போன விஷ உணவைப் புசித்து உடல் நலம் குன்றிய போது சால் மரங்கள் நிறைந்த தோட்டத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அவர் உடலை உகுத்தார். அதற்கு முன் அவர் கூறிய இறுதிச்சொற்கள்: “உண்டாக்கிய பொருட்கள் அனைத்தும் நிலையற்றவை. உண்மையை அறிய விழிப்புணர்வுடன் கடுமையாக முயற்சி செய்வாயாக”

கொண்டாட்டங்களும் சடங்குகளும்

புத்த கயாவில் புத்த ஜெயந்தி மிகச் சிறந்த முறையில் கொண்டாடப் பட்டு வருகிறது. உலகிலுள்ள பெருவாரியான பக்தர்கள் அனைவரும் அங்கு கூடி தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர். அங்கு கோயிலையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் வண்ண வண்ண புத்த மதக் கொடிகளால் அலங்கரிக்கின்றனர்.

காலையில் பௌத்த சன்யாசிகள் ஊர்வலம் நடைபெறும். பின்னர் எண்ணற்ற பொருட்களை நைவேத்தியம் செய்து பட்சணங்கள், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றை எல்லோருக்கும் அளிக்கின்றனர்.

மற்ற இடங்களில், பௌத்த மடங்களிலும் மத அரங்குகளிலும் வீடுகளிலும் வழிபாடு, உபதேசங்களைப் படித்தல், புத்த மத நூல்களிலிருந்து இடைவிடாது ஓதுதல் ஆகியவை முழங்கும். புத்த ஜெயந்தியன்று பௌத்தர்கள் வெண்மை உடை உடுத்துகின்றனர். மக்கள் ஊதுவத்தி, பூக்கள், விளக்குகள், பழங்கள் ஆகியவைகளை புத்த விக்ரஹத்திற்கு அளிக்கின்றனர். அவர்கள் புத்தரின் வாழ்க்கை சரிதத்தையும் அவரின் போதனைகளையும் கேட்பதில் அன்றைய முழு நாளையும் செலவிடுகின்றனர்.

புத்த கயாவில், மகாபோதி கோயில் வண்ணக் கொடிகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப் பெற்று விழாக்கோலம் பூண்டிருக்கும். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தடியில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

புத்த ஜெயந்தியன்று தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து புத்தரின் எஞ்சிய எலும்பும் சாம்பலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

புத்த பௌர்ணமியன்று பொது இடங்களில் வருவோருக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், விலங்குகளிடம் கருணை காட்டவும் கொட்டகை அமைப்பார்கள்.

புத்த பௌர்ணமி ஒரு பேரமைதியும் சுய முன்னேற்றமும் தரும் ஒரு நிகழ்ச்சியாகும்

புத்த புராணத்தின் படி புத்தரின் மனைவி யசோதரா, அவரின் முதல் சீடன் ஆனந்தன், அவர் தேரோட்டி சன்னா, வாழ்க்கையின் உட்பொருளை நாட அரசைத் துறக்க அவர் கடைசியாக அமர்ந்த குதிரை கண்டகாவும் புத்தர் பிறந்த நாளான புத்த பௌர்ணமியன்று பிறந்தவர்களாகும்.