கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கும்பண்டிகை இது. அவர்கள் இந்நாளில் விதவிதமான தின் பண்டங்களைப் பெறுவர். அஷ்டமி தினத்தில் கிருஷ்ணர் பிறந்ததால் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது.

அஷ்டமி என்பது பௌர்ணமிக்குப் பிறகு தேய்பிறைக் காலத்தே வரும் எட்டாவது தினமான கிருஷ்ணபக்ஷம் ஆகும். இன்று தான் பகவான் விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள். இத்தினம் வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வருகிறது. இந்நாள் மிகவும் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைபிடிக்கப் படுகிறது. மாலையில் கிருஷ்ணரின் விக்ரகம் தொட்டிலில் வைத்து வணங்கப்படுகிறது.

கதை
கிருஷ்ணரும் சுதாமரும்

சுதாமர் கிருஷ்ணரின் பால்ய சினேகிதனும் பக்தனும் ஆவார். அவர் ஏழ்மையான அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர். வருடங்கள் கழிந்தன. கிருஷ்ணர் துவாரகையின் அரசன் ஆனார். ஆனால் சுதாமரோ ஏழ்மையாகவே இருந்தார். போதிய உணவின்றி சுதாமர் தன் மனைவி குழந்தைகளுடன் பட்டினி கிடந்தார். தங்கள் பரிதாப வாழ்க்கையினால் சோர்வுற்ற அவர் மனைவி சுதாமரை கிருஷ்ணரிடம் சென்று உதவி கேட்டுப் பெற வேண்டுமாய் அறிவுரை கூறுகிறாள். மிகவும் நேர்மையானவரான சுதாமர் கிருஷ்ணரைக் கண்டு உதவி கேட்பதை இழிவாகக் கருதினார். அவரது மனைவி வற்புறத்தவே, வேறு வழியின்றி செல்வதற்கு சம்மதிக்கிறார்; அதே சமயம் நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர் ஒருவரைச் சந்திக்கச் செல்கையில் வெறுங்கையுடன் போவதைக் காண்பவர் விந்தையெனப் பேசுவர் என எண்ணினார். ஆகவே அவர் கையளவு அவலை எடுத்து பரிசளிக்க வைத்துக் கொண்டார். சுதாமர் கிருஷ்ணரின் மாளிகையை அடைந்த போது கிருஷ்ணர் அவரை மிக்க அன்புடன் வரவேற்றார். ப்ரம்மாண்டமான துவாரகை நகரின் அழகைக் கண்ட சுதாமர் பயபக்தி மிகக் கொண்டார். கிருஷ்ணரின் உபசரிப்பால் அவர் குறுகிப் போனார். ஆகவே, தான் கொண்டு வந்திருந்த எளிய பரிசை வெளியே எடுக்க சங்கடம் கொண்டார். சுதாமரின் கரத்தில் இருந்த சிறிய பையைக் கண்ட கிருஷ்ணர் அவரது பரிசுப் பொருள் அந்த பையில் உள்ளதா எனக் கேட்டார். சுதாமர் விருப்பமின்றி பையை வெளியே எடுத்து அரசன் ஒருவனுக்குத் தான் கைப்பிடி அளவு அவலைப் பரிசாகத் தர இயலா நிலையில் இருப்பதாகக் கூறினார். கிருஷ்ணர் உடனே சுதாமரின் கஷ்ட நிலையை உணர்ந்து கொண்டார். அவர் அந்த பரிசுப் பொருளை மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாகக் கொண்டு சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் சுதாமர் வீட்டை அடைந்த போது தன் குடிசை வீட்டுக்குப் பதிலாக ப்ரம்மாண்டமான மாளிகையையும் அதில் தம் மனைவி குழந்தைகள் அனைவரும் புத்தாடை உடுத்தி பொலிவுடன் இருப்பதையும் கண்டார். உள்ளே சென்று ஏராளமான உணவு வகைகள் இருக்கக் கண்டார்.