கிருஷ்ண ஜன்மாஷ்டமி - செயற்பாடு

அன்பு மாலை
(அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு நம் கண்ணனுக்கு ஓர் அன்பு மாலை)


கார்மேகம் போன்ற நிறம், தாமரையை ஒத்த கண்கள், முழு நிலவு போல் ஒளிவீசும் திருமுகம் என அந்தக் கமலக்கண்ணனின் அழகை வருணிப்பதே ஆனந்தம். காதுகளில், அசைந்தாடும் இரத்தின குண்டலங்கள் , மின்னும் கைவளைகள், பள பளக்கும் கிண்கிணிகள், கழுத்தில் முத்து மாலை என, அவனை அலங்கரிப்பது பேரானந்தம்!

நம் வீடுகளில் தாய்மார்களும், பாட்டிகளும் அழகிய பூமாலைகள் செய்து பூஜை அறையை அலங்கரிப்பது வழக்கம். இந்தக் காணொளியில், அழகிய மலர் மாலை கட்டுவது எப்படி என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பயின்று, இந்த கோகுலாஷ்டமி நன்னாளில், நம் கார்மேகக் கண்ணனின் விக்ரகத்தை அலங்கரிக்கலாமே!

வெண்ணெய்ப் பானை
(கழிவிலிருந்துக் கைவினை)


கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
 • கழிவுகளிலிருந்துக் கைவினைப் பொருள் செய்தல்
 • சுற்றுப்புறத் தூய்மை

தேவையான பொருட்கள் :
 1. தேங்காய் ஓடு - 1
 2. உப்புத்தாள்
 3. கலர் பேப்பர் (அ) அக்ரிலிக் பெயிண்ட், பிரஷ்
 4. குந்தன் கற்கள், அலங்கார லேஸ்
 5. ஃபெவிகால் (அ) ஃபெவிகுவிக்
 6. நூல் (அ) மெல்லிய கயிறு

ஆயத்தமாக:

வெண்ணெய்ப் பானையை உடைத்துவிட்டு, ஆயர்குலச் சிறுவர்களுடன் தப்பித்து ஓடிய கண்ணனின் அற்புத லீலைகளைக் குழந்தைகளுக்கு விளக்குங்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள், இந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்படும் உறியடி உற்சவத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு விளக்குங்கள். பொது இடத்தில் நடத்தப்படும் இந்த உறியடி விளையாட்டில், தயிர் நிரம்பிய மண் பானையை மிக உயரத்தில் கட்டித் தொங்கவிடுவர். இளைஞர்களும், சிறுவர்களும் ஒருவர் மேல் ஒருவர் ஏறி, மனிதப் பிரமிடு கட்டி அதன் மேல் ஏறி, தயிர் பானையை உடைக்க முயற்சிப்பர். இது ஒரு குழு விளையாட்டாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத் தொகை கூட அளிக்கப்படுகிறது. இவ்விளையாட்டு, கண்ணன் மண் பானையிலிருந்து வெண்ணெயும் தயிரும் திருடிய லீலையின் அடிப்படையில் நடத்தபடும் விரு விருப்பான .விளையாட்டாகும்.

செயற்பாடு :
 1. ஒரு தேங்காய் ஓடு எடுத்து, அதன் வெளிப்புறத்தை நன்கு சுரண்டி சுத்தம் செய்யவும்.
 2. உப்புத் தாள் வைத்து நன்கு தேய்த்து வழ வழப்பாக்கவும்
 3. இப்பொழுது, அதன் மேல் அழகாக வண்ணம் தீட்டவும் அல்லது வண்ணத் தாள் ஒட்டவும். (படத்தில் காண்பித்தபடி) வெண்ணெய்ப் பானைக்கு நூல் அல்லது கயிறு வைத்து பிடி ஒட்டவும். ஃபெவிகால் (அ) ஃபெவிகுவிக் உபயோகப்படுத்தி ஒட்டலாம் அல்லது டேப் உபயோகப்படுத்தி ஒட்டலாம்.
 4. பின்னர் அந்தத் தேங்காய் ஓடின் மேல் குந்தன் கற்கள் மற்றும் லேஸ் ஒட்டி அழகு படுத்தவும்
 5. அதன் உட்புறம் வெண்மையான பஞ்சு வைத்து நிரப்பினால் பானையில் வெண்ணெய் இருப்பது போல் தோற்றமளிக்கும்
 6. கண்ணனின் வெண்ணெய்ப் பானை தயார்
கிருஷ்ண அவதாரத்தைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்


கிருஷ்ணர், கிறிஸ்து பிறப்பிற்கு 3228 வருடங்கள் முன்னர், ஜூலை 20 ஆம் தேதி பிறந்தார். இதை நம் நாட்காட்டியில் குறிப்பிடுவதென்றால், ஸ்ரீமுக வருடம், சிராவண மாதம், பகுள பக்ஷம், அஷ்டமி திதி என்று குறிக்க வேண்டும். நட்சத்திரம் ரோகிணி, பின் இரவு 3 மணிக்கு பிறந்தார். நாம் இன்று தொடங்கிப் பின்னோக்கிக் கணக்கிட்டால், 5078 வருடங்களுக்கு முன்னர், கிருஷ்ணர் தம்முடைய உடலை விட்டுச் சென்றதாகக் கணக்கிட முடிகிறது. இதை சரி பார்க்க வேண்டுமானால் 3102 பி.சி. யையும், 1976 - யும் கூட்டினால், 5078 வருடங்கள் வரும். அதனால், கலியுகம் ஆரம்பித்து 5078 வருடங்கள் கழிந்து விட்டன என்பது தெரிகிறது. கிருஷ்ணர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றதும், கலியுகம் ஆரம்பமானதும் அதே நாள் தான். கலியுகத்தின் முதல் நாளான அந்த நாளைத்தான் நாம் 'யுகாதி' என்று அழைக்கிறோம்.

"நீர் நிலையின் மேலுள்ள நீர்க் குமிழிகளைப் போன்றது மனித உடல்", நீலகிரியில் பூத்த நிமலமலர்கள், 1976, ஊட்டி.
"நீர் நிலையின் மேலுள்ள நீர்க் குமிழிகளைப் போன்றது மனித உடல்", நீலகிரியில் பூத்த நிமலமலர்கள், 1976, ஊட்டி.

"கடவுளின் வழிகள் அறியமுடியாதவை"
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 26, ஆகஸ்டு10, 1993, பிருந்தாவன்

இருளிலிருந்து ஒளிக்கு

கிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷத்தில் (தேய்பிறைக் காலம்) பிறந்தார். இறைவனின் பிரகாசம், இருளில் பன்மடங்கு நன்கு தெரிவது ஆகும். ஒழுங்கின்றி செய்யப்பட்ட உலகில் ஓர் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவே அவர் பிறந்தார். அஷ்டமி தினத்தன்று பிறந்தார். அஷ்டமி துன்பங்களுடனும், தொல்லைகளுடனும் தொடர்பு உடையது. துன்பங்கள் எப்போது உண்டாகின்றன? தர்மம் மறைக்கப்படும் பொழுதே. கிருஷ்ணரின் வருகை இருளைப் போக்கி, துன்பங்களை துடைத்து, அறியாமையை அழித்தது. அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது தர்மமே. தர்மம் உறுதியாக நிலை நாட்டப்பட்டு விட்டால் பூமியும் தர்ம பத்தினியும் காக்கப்படுவார்கள்.

"அவதாரங்களின் பங்கு"
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 23, ஆகஸ்ட் 14, 1990, பிரசாந்தி நிலையம்.

கிருஷ்ணரது பிறப்பு மற்றும் வளர்ச்சியின் உட்பொருள்

கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்ததாகவும், பிருந்தாவனத்தில் வளர்ந்ததாகவும், மதுராவிற்கச் சென்றதாகவும், முடிவில் தனது இல்லத்தினை துவாரகையில் அமைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சாதகனுக்கு இதனுடைய உட்பொருள் என்ன வென்றால், உங்களது மனம் என்னும் கோகுலத்தில் கிருஷ்ணர் பிறக்கட்டும். உங்களது இதயம் எனும் பிருந்தாவனத்தில். குறும்புத் தனத்துடன் அவர் விளையாடி, வளரட்டும். பின், அவர் மதுரா என்னும் சித்தத்தில் நிலை கொள்ளட்டும். பின் முடிவில், பதற்ற மற்ற உணர்வு நிலையாகிய துவாரகையின் இறைவனாகவும், எஜமானராகவும் இருந்து ஆட்சி புரியட்டும். அவருடைய ராஜ்ஜியம் அலைகளுக்கு இடையே, துவாரகையில் நிறுவப்பட்டு நிர்விகல்ப ஆனந்தம் எனும் விளைவை அளிக்கும்.

"கிருஷ்ணா திருஷ்ணா" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 6, சென்னை

கிருஷ்ணர் கஸ்தூரி திலகத்தை (சந்தனக் கீற்று) தனது முன் நெற்றியில் இடுவது ஞானம் அடைந்ததைக் குறிக்கிறது. அவர் தனது நாசியில் தூய்மை எனும் முத்தை அணிகிறார். அந்தப் புள்ளியில் தான் தியானம் குவிக்கப்படுகிறது. அவரது மணிக்கட்டில் நான்கு புனிதமான சிவப்பு கயிறுகள் சுற்றிக் கட்டப்பட்டுள்ளன. உயிரினங்களுக்காக அவர் மேற்கொண்டுள்ள உறுதிப்பாடுகளான - நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை தண்டித்தல், நேர்மையை பாதுகாத்தல், அவரிடம் எவ்வித நிபந்தனையுமின்றி சரணாகதி அடைந்தவரைப் பாபத்திலிருந்து காத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

"தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான அறிவுரை"
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 9, அக்டோபர் 11, 1969, பிரசாந்தி நிலையம்

கோபியர்கள் அறிந்துகொண்ட கிருஷ்ண தத்துவம்

கிருஷ்ணர் எப்படிப்பட்ட நபர்? அவர் பல வகையான மக்களுடன் கூடி பழகி விளையாடி மகிழ்ந்தாலும் அவர் யாருடனும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் எப்போதும் ஆனந்தமாக திருப்தியோடு விளங்கினார். அவர் எல்லா கோணங்களிலும் மேம்பட்டு இருந்தார். அவர் தற்பெருமை இன்றி தனித்து இருந்தார். அவர் மகுடம் இல்லா சக்கரவர்த்தி. அவர் பல ராஜ்ஜியங்களை வெற்றி கொண்டாலும் அவர் எதன் மீதும் ஆட்சி புரியவில்லை. மற்றவர்கள் ஆட்சி புரிவதை கண்டு ரசித்தார். அவர் ஆசைகள் இன்று விலகி சுதந்திரமாக இருந்தார். அவர் தேடி சென்றது எல்லாம் மற்றவர்களுக்காகவே இந்த வகையில் தன்னுடைய தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.

"கிருஷ்ணரின் பிரேம தத்துவம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 22, ஆகஸ்ட் 24, 1989 பிரசாந்தி நிலையம்.

கிருஷ்ணர், மனதினை புலன் இன்பங்களில் இருந்து மீட்டு விடுகிறார். ஈர்ப்பு செயல்படும் மற்றொரு வகை இதுவே. அவர் மனதினை தன்னை நோக்கி இழுப்பதன் வாயிலாக, மற்ற அனைத்தும் தரம் குறைந்து, மதிப்பு தாழ்ந்து விடுகின்றன. அமைதி, ஆனந்தம் மற்றும் ஞானத்திற்கான மனிதனுடைய மிக ஆழமான தாகத்தை தீர்த்து வைக்கிறார். இதனாலேயே அவர் மேகசியாமன் ஆகிறார். ஆழ்ந்த நீல வண்ணம் உள்ள மழையினை சுமந்து வரும் மேகத்தின் காட்சியே புத்துணர்வு அளித்திடும். அவர்

தாமரைக் கண்ணனும், தாமரைக் கைகளும், பாதங்களும் தாமரையாகவுமானவர். தாமரை என்பது, குளிர்ச்சியான, அமைதியான, ஆழ்ந்த குளத்தின் தெளிவான நீரினை நினைவுக்குக் கொண்டு வரும். அது தாகத்தைத் தணித்து விடும் நீராகும். கிருஷ்ண - திருஷ்ணா தீர்க்கப்பட்ட உடன் மிக உயரிய ஆனந்தம் அடையப் பெறுகின்றது. அதன்பின் தேவைகளோ குறைகளோ இல்லை. கிருஷ்ண நாமம் மற்றும் கிருஷ்ண பாவத்தின் (கிருஷ்ணரது பெயரும், நினைவும்) இனிமை ஒரு முறை ருசித்த பின்னர் மதிப்பில் தாழ்ந்த பானங்களை அருந்தி, தாகத்தினைத் தீர்த்துக் கொள்ளும் உந்துதல் மறைந்துவிடுகிறது. புலன்களை ஈர்க்கும் பொருட்கள், கடல்நீரைப் போன்றன. அவை என்றும் தாகத்தினைத் தணிக்காது.

"கிருஷ்ணா திருஷ்ணா" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 6, சென்னை

போர்க்களமோ, மயானமோ, அல்லது ஒரு அமைதியான இடமோ எங்கு இருந்தாலும் தம்மைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் ஒரு குணம் கிருஷ்ணருக்கு உண்டு. அவருடைய கல்யாண குணங்களிலேயே மிகச் சிறந்த குணம் இது. அதனால் தான், போர்க்களத்தில் கூட அவரால் அர்ஜுனருக்கு கீதையை உபதேசிக்க முடிந்தது. கீதா என்றால் பாடல் என்று பொருள்படும். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும்தான் நம்மால் பாட இயலும். ஆனால் கிருஷ்ணரோ, போர்க்களத்தில் கூடப் பாடியிருக்கிறார். அதன் மூலம் மகிழ்ச்சியைப் பறவ விட்டிருக்கிறார்.

"தர்மம் ஒருபோதும் குறைவதில்லை. தர்மத்தைக் கடைப் பிடித்தல் தான் குறைகிறது", நீலகிரியில் நிமலமலர்கள்,1976, ஊட்டி

பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான், "இந்த உலகத்தில் எனக்கு வேண்டியது எதுவும் இல்லை நான் முயற்சி செய்ய. ஆனாலும் நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். காரணம், உலக மக்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டிய நானே வேலை செய்யாது இருந்துவிட்டால் மக்கள் வேலை செய்வதை துறந்து விடுவார்கள். தவிரவும் சிந்தனை செயல் ஆக்கப்படவில்லை என்றால் அது ஒரு நோயாக மாறிவிடும்"."இறையன் பின் ஆனந்தம்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 17, ஜூலை 14, 1984 பிரசாந்தி நிலையம்.

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரத்தில், பெயரிலிருந்தே, பண்டிதர்கள் பல்வேறு விளக்க உரைகளை அளிக்கின்றனர். கிருஷ்ணா எனும் பதத்தில் உள்ள எழுத்துக்களாகிய க, ர, ஷா, நா மற்றும் அ ஆகியன கிருஷ்ணரது புகழ்மிக்க குணாதிசயங்களை எடுத்துரைப்பதாக விளக்கப் படுகின்றன. கா என்பது கமலா காந்தா இலட்சுமியின் இறைவன் என்பதனைக் காட்டுகிறது. அந்த எழுத்திற்கு அளிக்கப்படும் இதர பொருட்கள் கமலேஸ்வரா கமல கர்பா தாமரையின் இறைவன், எவரது நாடியில் இருந்து தாமரை எழுந்ததோ அந்த இறைவன். அவர், கமலா பாந்தவுடு எனவும் அறியப்படுகிறார். தாமரையின் உறவினன். இந்த விளக்கங்களின் அகப்பொருள் யாதெனில், தெய்வீகம் நம்முள் வெளிப்படுகின்ற பொழுது, சூரியன் முன்பு விரிகின்ற தாமரையைப் போல நமது இதயம் விரிகின்றது என்பதே ஆகும். ஆகவே, கா என்பது சூரிய தத்துவத்தையும் குறிக்கிறது. 'ரா' என்பது களிப்பின் தத்துவத்தை எடுத்துரைக்கிறது. 'ஷா' என்பது செல்வம் மற்றும் வளமையின் ஆதாரமாகிய விஷ்ணுவைக் குறிக்கிறது. 'நா' என்பது நரசிம்ம அவதாரம் ஆகிய மனிதனும் விலங்கும் ஒருங்கிணைந்த ஒற்றுமையின் கலவையை எடுத்துரைக்கிறது. 'அ' என்பது இறைவனது அக்ஷர ஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர் அழிக்க இயலாதவர், நிலையான குணாதிசயம் உடையவர், என்பதனை காட்டுகிறது.

"இறைவனும் பக்தனும்"
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 19, ஆகஸ்ட் 27, 1986, பிரசாந்தி நிலையம்.

கிருஷ்ணா என்ற சொல்லின் பொருள்

கிருஷ்ணா என்ற சொல்லை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லுக்கு மூன்று பொருள்கள் உள்ளன. "கிருஷ்யதி இதிகிருஷ்ணா" (பயிரிடுபவன்) எது பயிரிடப்பட வேண்டும்? ஹ்ருதயக்க்ஷேத்வா (இதயம் ஆகிய வயல்) கிருஷ்ணர் நமது இதயம் ஆகிய வயலில் உள்ள தீய பண்புகளாகிய களைகளை அகற்றி அன்பாகிய நீர் ஊற்றி சாதனைகளால் உழுது பக்தி ஆகிய விதைகளை விதைக்கிறான். இவ்வாறு கிருஷ்ணர் நமது இதயத்தைப் பயிரிடுகிறார்.

இந்த சொல்லின் இரண்டாவது பொருளாவது "கர்ஷதி இதி கிருஷ்ணா" (தம்மால் வசீகரிப்பவர் கிருஷ்ணா) கிருஷ்ணர் உன்னை தம் கண்களால், தம் வாக்கினால், தம் விளையாட்டுகளால், ஒவ்வொரு செயலாலும் கவருகின்றார். வெறுப்பு நிறைந்த இதயங்களையும் தம் சொற்களால் மென்மையாக்கி அமைதியுறச் செய்து களிப்படையச் செய்கிறார்.

கிருஷ்ணர் என்ற சொல்லின் மூன்றாவது பொருள்

"குஷ்யதி இதி கிருஷ்ணா" (எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவர்) கிருஷ்ணா எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர். கிருஷ்ணர் உலகை தம் லீலைகளால் மகிழ்வித்தார். கிருஷ்ணரது வாழ்வின் சாரம் என்னவெனில் உலகிற்கு உண்மையை எடுத்துரைத்தார். என்றும் மாறாத அழிவற்ற கோட்பாடுகளை பரப்பினார். உலகைத் தம் லீலைகளினால் மகிழ்வித்தார்.

"அவதாரங்களின் பங்கு"
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 23, ஆகஸ்ட் 14, 1990 பிரசாந்தி நிலையம்.

குந்தி , கிருஷ்ணரை 'மாதவா' என்று அழைக்கிறாள் . 'மா' என்றால் லக்ஷ்மி என்று பொருள். மாயா என்றும் பொருள்படும். 'தவா' என்னும் சொல் தலைவன் அல்லது அதிபதி என்று பொருள்படும் . இங்கு கிருஷ்ணா என்பதற்கு இயற்கை, லக்ஷ்மி மற்றும் மாயா இவற்றின் தலைவன் அல்லது அதிபதி என்று பொருள்.

"கடவுள் அவ்வப்போது உன்னை சோதிக்க விரும்புகிறார்" பிருந்தாவனத்தில் கோடை மழை, 1978, பிருந்தாவன்.

நீங்கள் கொண்டாட வேண்டிய கிருஷ்ணருடைய அவதாரம், கிராம மக்களைத் தனது புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்த, மாடுமேய்க்கும் சிறுவன் அல்ல. ஆனால், விவரிக்க இயலாத, சூட்சுமமான தெய்வீகத் தத்துவமாகும். தேவகி என்கிற தெய்வீக சக்தியின் மூலமாக, மதுரா என்கிற உடலின் நாபியில் இருந்து உதித்து கோகுலம் ஆகிய வாய்க்குக் கொண்டு செல்லப்பட்டு, இனிமையின் இருப்பிடமாகிய யசோதா என்கிற நாவினால் வளர்க்கப்பட்டது. கிருஷ்ணா என்பது, நாமத்தினை மீண்டும் மீண்டும் ஜபிப்பதினால் கிடைக்கும் ஆத்மாவின் காட்சி. யசோதைக்குக் கிட்டிய காட்சி. கிருஷ்ணரை உங்களுடைய நாவில் போஷிக்கவேண்டும் . அவர் அதன் மீது நர்த்தனம் செய்து ஆடும்பொழுது, நாவில் உள்ள விஷம் முழுவதுமாக உமிழப்படுகிறது. காளிங்கன் எனும் பாம்பின் ஐந்து தலைகளின் மீது குழந்தையாக இறைவன் நர்த்தனம் செய்தபொழுது, நடந்தவைகளைப் போன்றே இங்கும் நடந்திடும்.


"இறைவனின் பாதச்சுவடுகள்" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 8, ஆகஸ்ட் 16, 1968 பிரசாந்தி நிலையம்.

திரௌபதியின் பாதுகைகளைச் சுமந்த கிருஷ்ணன் (சின்னகதை)


பகவானின் குரலில் மஹாபாரதத்தில் நடந்த ஒரு கதையை ஒலி வடிவமாக கேட்போம். நமது கால்களைப் பாதுகாக்கப் பாதுகைகளை அணிகிறோம். அதே காரணத்திற்காகச் சில சமயங்களில் அவைகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொள்கிறோம். பகவான் இதை நினைவுபடுத்தும் விதமாக மஹாபாரதத்தில் நடந்த ஒரு திகைப்பூட்டும் சம்பவத்தை விவரிக்கின்றார். திரௌபதியைக் காக்க வேண்டி பகவான் கிருஷ்ணர் அவளது பாதுகைகளைத் தனது தோள்களில் ஒரு சிறுதுணியில் தொங்கவிட்டுக் கொண்டு வந்ததைக் கூறுகின்றார்.

இந்த ஒலிவடிவைக் கேட்டு இறைவன் கிருஷ்ணர் தனது பக்தர்களைக் காக்கவேண்டி எவ்வளவு கீழே இறங்கி வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவும். எவ்வாறு திரௌபதி தமது கணவர்களைக் காக்க வேண்டி கிருஷ்ணனிடம் மன்றாடினாள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மேலும் எப்படி பீஷ்ம பிதாமகர் ஏமாற்றப்பட்டாலும் சினம் கொள்ளாமல் நிம்மதி அடைந்தார் என்பதையும் திரௌபதியின் பாதுகை என்ற சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

திரௌபதியின் பாதுகைகள்

மாலை வேளை சூரியன் அஸ்தமித்திருந்தது. அன்று மஹாபாரதப் போரின் ஒன்பதாம் நாள். பீஷ்ம பிதாமஹர் அன்று ஒரு சபதம் எடுத்து இருந்தார். அடுத்த நாள் முடிவில் பாண்டவர்களை அழித்தே தீருவதாகக் கூறி இருந்தார். இதைக் கேட்ட திரௌபதி மிகவும் கலக்க முற்றாள். ஒரு கணமும் தாமதிக்காமல் கண்ணனிடம் உதவி நாடி ஓடிச் சென்றாள். கண்களில் நீர்மல்க, தழுதழுத்த குரலில் கிருஷ்ணனிடம் அவள் மன்றாடினாள், "கிருஷ்ணா! இதுவரை எங்களைக் காத்து நின்றாய், இந்த முறையும் உன்னால் காக்க முடியுமா?" என்றாள். பீஷ்மரின் வாக்கு பொய்க்காதென்பதை திரௌபதியும் கண்ணனும் நன்கு அறிந்திருந்தனர். அவருடைய வாக்குகளே அவர் சொன்னதை முறியடிக்க முடியும் என்று கிருஷ்ணன் கூறினார். உடனே திரௌபதி, கிருஷ்ணனின் காலில் விழுந்தாள்.

கிருஷ்ணன், அவளிடம், சிலவற்றை அடைய, சில சூத்திரங்களைக் கையாளவேண்டும் என்றும், ஒரு சில நேரங்களில் சித்தாந்தங்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும் என்றும், புரியாமல் போனாலும் சில செயல்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். திரௌபதி மிகவும் உன்னிப்பாகக் கிருஷ்ணனின் அறிவுறுத்தலுக்குக் காத்திருந்தாள். கிருஷ்ணர் அவளை பீஷ்மரின் கொட்டகைக்குச் சென்று அவரது காலில் விழுமாறு பணித்தார். அப்படிக் காலில் விழும் பொழுது கை வளையலின் ஓசை அவருக்கு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மற்றவர்கள் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டி, திரௌபதி முன் நடக்க, கிருஷ்ணர் பின் தொடர்வதாகக் கூறினார். அவள் நடந்து செல்லும் பொழுது அவளது பாதுகைகள் மிகுந்த ஓசை எழுப்பின. அந்த சத்தம் மற்றவர்களை எழுப்பிவிடும் என்று உணர்ந்த கிருஷ்ணர் சற்றும் யோசிக்காமல் திரௌபதியைத் தனது பாதுகைகளைக் கழட்டித் தம்மிடம் கொடுத்து விடுமாறு பணித்தார். கிருஷ்ணர் அதைத் தமது அங்கவஸ்திரத்தில் (தோளின் மீது அணியும் துணி) சுற்றி வைத்துக் கொண்டார். கிருஷ்ணர் முன்னர் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்ட திரௌபதி எந்த கேள்விகளும் கேட்காமல் பாதுகைகளைக் கழட்டி கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு பீஷ்மரின் கொட்டகைக்கு நடந்து சென்றாள்.

தமது அறையில், பீஷ்மாரோ மனக்குழப்பத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். சத்யஸ்வரூபமான பாண்டவர்களைக் கொல்வதாகத் தாம் செய்த சபதத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். அவர் தமது உணவை உண்ணவில்லை. மேலும் உறக்கமும் அவருக்கு வரவில்லை. கவலையில் ஆழ்ந்துள்ள மனம் எவ்வாறு உண்ணவோ உறங்கவோ செய்யும்?

அவர் இருந்த கொட்டகையை அடைந்த திரௌபதி சற்றும் தாமதிக்காமல் பீஷ்மரின் காலில் விழுந்தாள். பீஷ்மரின் மனம் அங்கில்லாத காரணத்தால், யார் என்றும் பாராமல் "தீர்க்க சுமங்கலி பவ" அதாவது நீண்ட நாட்களுக்குத் தன் கணவர்களுடன் வாழ்ந்திருப்பாய் என்று ஆசிர்வதித்துவிட்டார். உடனே, “தாத்தா, உங்களிடம் இந்த ஆசியை நான் பெறவே வந்தேன்” என்று எழுந்து நின்று கூறினாள்.

இதன் பின்னரே திரௌபதியின் மீது பீஷ்மரின் பார்வை பதிந்தது. முதலில் அதிர்ச்சியுற்றாலும் அவரது தூய மனம் அங்கு முன் நின்றது. அவரது எல்லா சபதங்களும் நிறைவடையும் என்பது அவருக்கு தெரிந்ததே. அவரது வார்த்தைகள் அவ்வளவு வலுவானவை. அவர் திரௌபதியை ஆசீர்வதித்ததன் மூலம் பாண்டவர்களின் உயிரைக் காத்து விட்டார் என்பதை உணர்ந்திருந்தார். மனதின் ஆழத்தில் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்பதை அறிந்திருந்தார். இந்த யுக்தியைக் கூறியது யார் என்று அறிய ஆவலுற்றார். அது ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாது என்பதையும் அறிந்திருந்தார்.

சிறிது நேரத்தில் கிருஷ்ணர் பீஷ்மரின் கொட்டைகையினுள் நுழைந்தார். பீஷ்மர், கிருஷ்ணரை அன்புடன் பார்த்து, “இது எல்லாம் உனது திட்டம் தானா என்று வினவினார்?” மேலும் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறினார். அச்சமயம் தாம் பசித்திருப்பதை பீஷ்மர் உணர்ந்தார். வருத்தத்தில் இருக்கும் யாருக்கும் பசி தெரியாது. தமது எல்லா துன்பங்களும் நீங்கியதை பீஷ்மர் உணர்ந்தார்.

அப்பொழுது கிருஷ்ணரின் கையில் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்தார். கிருஷ்ணரிடம் அது என்ன என்று வினவினார். சற்றும் யோசிக்காமல் கிருஷ்ணர், “இது திரௌபதியின் பாதுகைகள்” என்று பதில் அளித்தார். பீஷ்மர் கண்ணனின் அன்பில் திளைத்து கண்ணீர் வடித்து நின்றார். மேலும் அவர், “உனது பக்தர்களை காக்க வேண்டி எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவிக்கிறாய், மேலும் உனது பக்தர்களுக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?” என்று உள்ளம் நெகிழ மெல்லிய குரலில் கூறினார். கிருஷ்ணரோ அதற்கு பதிலாக அமைதியான புன்னகை சிந்தினார்.

ஆம், அவர் தமது பக்தர்களை காக்க எதுவும் செய்வார்.

சின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம்

ஜன்மாஷ்டமி, நம்முள் பக்தியையும் குதூகலத்தையும் தூண்டிவிடுகிறது. அன்றைய தினத்தில், வழக்கமான பூஜைகளைத் தவிர, பெரும்பாலான மக்கள் தம் வீட்டு வாயிலிலிருந்து, பூஜையறை வரைக் கண்ணனின் பாதங்களை வரைந்தும், வண்ணமிட்டும் மகிழ்வது வழக்கம். இது குட்டிக் கண்ணனை நம் இல்லத்திற்கு வரவேற்பதாகும். கண்ணனை, இவ்வாறு நம் இல்லத்திற்கு வரவேற்று, நம் மன இருளை நீக்கி, நம் வாழ்வை ஒளியுறச் செய்வதாக ஓர் ஐதீகம்.

சின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம் வரைவது எப்படி என்று இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. மென்மையான, ஈர அரிசி மாவில், பஞ்சோ அல்லது ஒரு சிறிய துணியோ உபயோகித்துப் பாதம் போடலாம். நன்கு உலர்ந்தவுடன் பார்த்தால், நம் இல்லம் முழுவதும் சின்ன சின்ன பாதம், சிங்காரப் பாதம் நிறைந்திருக்கும்.

என்ன? இந்த ஜன்மாஷ்டமிக்கு அழகிய பிஞ்சுப் பாதங்கள் போட்டு, நம் உள்ளம் கவர் கள்வனை இல்லத்துள்ளும், இதயத்துள்ளும் வரவேற்போமா?

கிருஷ்ண நாமம் – புதிர் விளையாட்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிரில் கிருஷ்ணரின் பெயர்களைக் கண்டறியவும்

கிருஷ்ண நாமம்
வண்ணம் தீட்டவும்
இந்தியாவில் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்

நல்லோரை ரக்ஷித்து, தீயோரை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பகவான் கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்த நன்னாளையே நாம் கிருஷ்ண ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். அது, ஆவணி மாதம் (ஆகஸ்ட்-செப்டம்பர்), கிருஷ்ண பக்ஷம் எட்டாம் நாளான அஷ்டமி நன்னாளாகும்.

நமது இந்த பூலோக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் தெய்வீகப் பாடலாகிய பகவத் கீதையை நமக்கருளிய அவதராம் இந்த கிருஷ்ணாவதராம்.

பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால், மக்கள் பகல் முழுவதும் விரதமிருந்து, இரவில் கண்விழித்திருப்பர். மேலும், பகவானின் அவதார லீலைகளைப் புகழும் பாடல்களைப் பாடியும், பாகவதம் போன்ற புராணங்களைப் பாராயணம் செய்தும் அந்த இரவைக் கழிப்பர்.

இந்துக்கள், பாகவத புராணம், பகவத் கீதா போன்றக் கிரந்தங்களைப் பாராயணம் செய்து ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவர். இசை ஆர்வம் உள்ளோர் ஓரிடத்தில் ஒன்று கூடி, இரவு முழுவதும் பகவானின் புகழ் பாடிக் களிப்பர்.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அஸ்ஸாம், மேலும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளில் மக்கள், “ராச லீலை” அல்லது “கிருஷ்ண லீலை” எனப்படும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடத்துவர். பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னரேத் தொடங்கும் இம்மாதிரி நிகழ்ச்சிகளால், அந்த மாநிலங்களே விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும். ஒவ்வொரு வருடமும் புதுப் புது கலைஞர்கள் வந்து இந்நிகழ்ச்சிகளை நடத்துவர். அந்த ஊர் மக்களும் நன்கு ஊக்கமளிப்பர்.


மகாராஷ்டிர மாநிலத்தில், மிக உயரத்தில் கட்டப்பட்ட தயிர் நிரம்பிய பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனிதப் பிரமிடுகள் அமைத்து ஏறுவதைக் காணலாம். இந்நிகழ்ச்சிக்குப் பெயர் “உறியடி உற்சவம்” (Dahi Handi). பொதுவாக இந்நிகழ்ச்சி, கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள் நடத்தப்படும். வெண்ணெய்த் திருடும் நம் கள்வனும் அவனது தோழர்களும் செய்த பால லீலைகளை நினைவு கூறும் வகையில் நடத்தப்படுகிறது. அச்சிறுவர்கள், தம் அன்னையரிடமிருந்து எவ்வளவு திட்டு வாங்கினாலும் அந்தக் குறும்பு லீலைகளை நிறுத்தவே மாட்டார்கள். மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தெருக்களில் நடக்கும் இந்த உறியடி நிகழ்ச்சியைக் கண்டு களிப்பர்.


குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், மக்கள், “மக்கன் ஹண்டி” எனப்படும் வெண்ணெய்ப் பானை விளையாட்டு விளையாடுவர். இதுவும் உறியடி போலத்தான். ஆனால், இந்த விளையாட்டில், பானையில் தயிருக்குப் பதில் வெண்ணெயை நிரப்புவர்.

கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று அங்கு நடக்கும் பஜனைகளிலும், சத்சங்கங்களிலும் பங்கேற்பர். பல நாட்டுப்புற நடனங்களும் பார்வையாளர்களை உற்சாகமூட்டி, பண்டிகைக்குக் குதூகலமளிக்கும்.


‘கச்’ பகுதியில், விவசாயிகள் அவர்களுடைய மாட்டு வண்டிகளை அழகாக அலங்கரித்து அவற்றில் கிருஷ்ணரை ஊர்வலம் இட்டுச் செல்வர். இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, மக்களும் பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பின் செல்வர்.


வட இந்தியாவில், ஜன்மாஷ்டமி மிகவும் பிரபலாமான ஒரு பண்டிகை. கிருஷ்ணரின் ஜன்ம பூமியான மதுராவிலும், அவன் பால லீலைகள் செய்து கழித்த பிருந்தாவனத்திலும், கிருஷ்ண ஜன்மாஷ்டமி இன்றும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மதுரா, பிருந்தாவன், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், வட இமாலயப் பகுதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கோவில்களெல்லாம் இரவு நேரங்களில் வைரம் போல் மின்னும். ராச லீலை நாடகங்கள் பெரும்பாலும், கிருஷ்ணரின் பால லீலைகள் மற்றும் ராதை, கிருஷ்ணர் கதைகளை அடிப்படையாக வைத்தே நடத்தப்படும். அத்தகைய நாடகங்கள், பகவான் கிருஷ்ணரின் மேல் அன்பு கொண்டு ஏங்கும் பக்தர்கள் மனதிற்கு ஒளியூட்டும் விதமாக அமையும். டெல்லியில் அமைந்துள்ள இஸ்கான் கோவில், கிருஷ்ண பக்தர்கள் பெருமளவில் கூடும் ஒரு பிரபலமான இடமாகும்.


ஜம்முவில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று, வீட்டு மாடிகளிலிருந்துப் பட்டங்கள் விட்டுக் கொண்டாடுவர்..


தென்னிந்தியாவின் கொண்டாட்டமே ஒரு தனி அழகுதான். மக்கள் வீடுகளில் அழகான கோலங்கள் போடுவார். பெரும்பாலான வீடுகளில், வாசற்படியிலிருந்து, பூஜை அறை வரை, அரிசி மாவினால் கண்ணனின் பிஞ்சு பாதங்களைப் போடுவார். அதனால், பகவான் கிருஷ்ணன் அவரவர் வீட்டிற்கு விஜயம் செய்ததாக ஐதீகம்.


மக்கள் பகவத் கீதை வாசித்தும், பஜனைகள் பாட்டியும் கொண்டாடுவர். வெல்ல சீடை, உப்பு சீடை, கடலை உருண்டை போன்ற பலவித சுவையானப் பலகாரங்கள் செய்து பகவானுக்கு நிவேதனம் செய்வர். பொதுவாக, மாலையில் துவங்கும் கொண்டாட்டங்கள் நடு இரவு வரை நீடிக்கும்.


ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்லோகங்கள் வாசித்தும், பஜனைகள் பாடியும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவர். மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சின்னஞ்சிறு சிறுவர்கள், கிருஷ்ணனைப் போல் வேடமிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் அண்டை வீடுகளுக்குச் சென்று வருவர்.

கண்ணனே கண்ணுறங்கு
(ஐஸ்க்ரீம் குச்சிகளாலான ஓர் அழகிய தொட்டில்)பாகவதப் புராணத்தின்படி, பகவான் கிருஷ்ணர், தேவகிக்கும், வசுதேவருக்கும் மகனாகப் பிறந்தார். மதுராவின் அரசனும், தேவகியின் சகோதரனுமாகிய கம்சனிடமிருந்துக் காப்பாற்றுவதற்காக, வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைக் கோகுலத்தில் உள்ள நந்தர், யசோதை வீட்டில் கொண்டு விட்டார். மேலும், யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மதுரவிற்குத் திரும்பினார். நம் கிருஷ்ணன், ஒரு அழகிய சிறிய தொட்டிலில், வளர்ப்புத் தாயான யசோதையின் அன்புத் தாலாட்டில் பல மணி நேரம் ஆழ்ந்துறங்குவானாம்.

உன்னிக்கிருஷ்ணனுக்கு ஓர் அழகிய தொட்டில் செய்து, அந்த யசோதை அன்னையின் தெய்வீக அனுபவத்தை நாமும் பெறுவோமா?

இதோ ஒரு காணொளி உங்களுக்காக. ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு ஒரு அழகிய தொட்டில் செய்வது எப்படி என்று காணுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இன்பம் தரும் ஒரு செயற்பாடு. ஐஸ்க்ரீம் குச்சிகளைத் தவிர, பசை, ஃபெவிகால், கத்திரி, ஜிகினாக்கள் போன்ற பொருட்கள் தேவை.

இந்த வருட கோகுலாஷ்டமிக்கு, ஓர் கண்கவர் தொட்டிலுடன் நம் உன்னிக்கிருஷ்ணனை வரவேற்போமா? தொட்டில் செய்து முடித்தவுடன், ஒரு அழகிய கிருஷ்ணர் பொம்மையை அதில் படுக்கவைக்க மறக்காதீர்கள். குழந்தை, தாய் தந்தையைத் தேடுமல்லவா? அதனால், யசோதா, நந்தர் படத்தையும் தொட்டில் அருகில் வைக்கலாம். இந்தத் தொட்டில் கண்டிப்பாக நம் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.


கிருஷ்ணா பஜனைகள் - பிரிவு III

'சுந்தரம் பஜனைகள்' பக்கத்தில் இணைந்து கிருஷ்ணா பஜனைகளை கேட்டு, கற்று, பாடி மகிழவும்.

அழகுக்கு அழகூட்டுவோம்
கற்பிக்கப்படும் நற்குணங்கள் :
 1. பக்தி
 2. ஒருமுகத்தன்மை
 3. கலைநயம்/கற்பனைத்திறன்
 4. கூட்டு முயற்சி ( இந்த செயற்பாட்டைக் குழுவாகச் செய்யும் பொழுது)
தேவையான பொருட்கள் :
 1. வண்ணம் தீட்டப்படாத கண்ணன் படம்
 2. கனமான அட்டை அல்லது சார்ட் பேப்பர் (chart paper)
 3. கலர் பென்சில், ஸ்கெட்ச் பேனா
 4. குந்தன் கற்கள் (கண்ணனின் நகைகளை அலங்கரிக்க)
 5. பசை மற்றும் கத்தரிக்கோல்
செயற்பாடு :
 1. கொடுக்கப்பட்டுள்ள கண்ணன் படத்தை அச்சு (பிரிண்ட் ) எடுத்துக் கொள்ளவும்.
 2. பின் அதனை அட்டையில் அல்லது சார்ட் பேப்பரில் ஒட்டிக் கொள்ளவும்.
 3. பளிச்சிடும் வண்ணங்களால் கண்ணன் படத்தில் வண்ணம் தீட்டவும். (நகைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டாம்.)
 4. நகைகளுக்குக் குந்தன் கற்கள்/முத்துக்கள் பதிக்கவும்.
 5. சிறிய அட்டைத் துண்டைக் கொண்டு படத்தின் பின்னால் ஸ்டாண்ட் செய்யவும்.
 6. அலங்கரிக்கப்பட்ட கண்ணன் படத்தைப் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் பொது அறையிலோ எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் வைக்கவும்.

கிருஷ்ணா - வண்ணம் தீட்டுக
ராதே கிருஷ்ணா - வழிதேடல்