மஹா சிவராத்திரி

பூசலார் நாயனார் வரலாறு


"நாயன்மார்" என்றால் "துறவோர்", "தலைவர்" அல்லது "ஆண்டவன்மார்" என்று பொருள். நாயன்மார்கள் அறுபத்து மூவர் ஆவர். பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயன்மார்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் ஏராளமானவை. சைவத்தையும், தமிழில் பக்தி இலக்கியத்தையும் வளர்த்ததில் நாயன்மார்களுக்கு பெரும் பங்குண்டு.

ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவர் ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இவரது உள்ள உணர்வெல்லாம் எப்பொழுதும் சிவ பெருமானின் சேவடியில் மட்டுமே பதிந்திருந்தது. பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் எப்படியும் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். அனால் ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை. இதை எண்ணி பூசலார் மிகவும் மனம் புண்பட்டு வருந்தினார்.

புறத்தே தான் பெருமானுக்கு கோயில் எழுப்ப இயலவில்லை; அகத்திலே, அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப எவ்வளவு பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா? என்று தமக்குள் தீர்மானித்தார். அதற்கு தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில அமர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்ட தொடங்கினார். இரவு, பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு கர்பகிருஹம், ஸ்தூபி, அலங்கார மண்டபம், திருக்குளம், திருக்கிணறு, கோபுரம் முதலிய அனைத்தையும் புத்தம் புதுப் பொலிவோடு உருவாக்கினார். புறத்தே கோயில் எழுப்ப எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது பூசனாருக்கு, அகத்தே கோயில் எழுப்புவதற்கு! நாயனார் ஒரு நல்ல நாள் குறித்து, தான் மானசீகமாக கட்டிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த எண்ணினார்.

இதே சமயத்தில், காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ தேசத்து மன்னன், காஞ்சியிலே ஈசனுக்கு கற்கோயில் ஒன்றைக் கட்டி முடித்தான். நாயனார் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நாளில், காஞ்சியிலும் கும்பாபிஷேகம் நடத்த எண்ணி அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் மன்னன்.

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு சிவபெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளினார். "அன்பா! திருநின்றவூரில், நம்முடைய அன்பனாகிய பூசலார் தாம் கட்டியுள்ள உள்ளக் கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம் நடத்த உள்ளார் . அந்த ஆலயத்தில் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக" என்று கூறி மறைந்தருளினார். கண் விழித்த மன்னன், கனவைக் கண்டு வியந்தான்.

திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வருவது என்று ஆவல் கொண்ட மன்னன், அமைச்சருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டான். திருநின்றவூரை அடைந்த மன்னன், பூசலார் கட்டியுள்ள கோயில் எங்கு உள்ளது என்று பலரிடம் கேட்டான். ஆனால், கோயிலை பற்றி எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் பூசலார் இருக்கும் இடத்தை, அவ்வூரிலுள்ள அந்தணர்கள் மூலம் தெரிந்து கொண்டு, அவரது இருப்பிடம் நோக்கி புறப்பட்டான். பூசலாரைக் கண்டு, வணங்கி, தாம் கண்ட கனவினை கூறினான். மேலும், தான் அவர் கட்டிய திருக்கோயிலைத் தரிசித்து வழிபட வந்துள்ளதாகவும் கூறி, திருக்கோயில் எங்கு உள்ளது? என்று கனிவோடு கேட்டான்.

மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரும் வியப்பில் மூழ்கினார். அவர் உடல் புளகம் போர்ப்ப மன்னனிடம், காடவர் கோமானே ! இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடுபட்டேன். பெருமளவு பொருள் இல்லாத நான், புறத்தே எம்பெருமானுக்கு கோயில் எழுப்ப முடியவில்லை. அகத்திலாவது கட்டுவோம் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டினேன். இன்று, அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார். பூசலார் மொழிந்தது கேட்டு மன்னன் மருண்டான். இறைவழிபாட்டின் இன்றியமையாத சக்தியை உணர்ந்தான். சங்கரனை சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளகோயிலுக்கு ஈடாக, பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில் ஒருபோதும் இணையாகாது என்பதை உணர்ந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

பூசலாரின் இறை பக்தியை உணர்ந்த மன்னன் அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஓர் ஆலயம் எழுப்பினான். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம் தான் இன்றைக்கும் திருநின்றவூரில் உள்ள ஹ்ருதாயாலேஸ்வரர் ஆலயம். தினமும் மனதில் நினைத்து வழிபட்ட பூசலார் நாயன்மார், பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

குறுக்கெழுத்து புதிர்

குறுக்கெழுத்து விடை

பூசலார் நாயனார் வண்ணம் தீட்டுதல்

- படங்கள்:திருமதி.ஹேமா சடகோபன்

சாக்கிய நாயனார்


தமிழகத்தில் வாழ்ந்த சிவனடியார்கள் நாயனார்கள் என்றழைக்கப்பட்டனர். அவர்கள், சிவபெருமான் மேல் கொண்டிருந்த உறுதியான பக்தியால் எங்கும் பக்தி மார்க்கத்தைப் பரப்பினர்.

அவ்வழியில் வந்த ஒரு சிவனடியார்தான் சாக்கிய நாயனார். அவர், தமிழ் நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்செங்கமங்கை என்னும் ஓர் சிறு கிராமத்தில் பிறந்தார். அச்சமயம், அந்தக் கிராமத்தில், பௌத்தர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. உயிருக்குப் பயந்து, சாக்கியருடையக் குடும்பத்தினர் கூட புத்த மதத்தையேக் கடைபிடித்தனர். சாக்கியரும் ஒரு புத்தத் துறவியாக விரும்பி காஞ்சிபுரம் சென்று ஒரு மடத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். இருப்பினும், சைவ சமயத்தின்மேல் அவருக்கிருந்த ஆர்வம் அவரை ஒரு தீவிர சிவ பக்தனாக்கிவிட்டது. அவரைப் பொருத்தவரை சிவபெருமான் ஒரு சத்ய ஸ்வரூபம். வெளித்தோற்றதினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று நம்பியதால், அவர் ஒரு புத்தத் துறவி போல உடை அணிவதையேத் தொடர்ந்தார்.

ஒரு நாள், சிவச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சாக்கியர் சுய நினைவின்றி ஒரு சிவலிங்கத்தின் மேல் ஒரு கல்லை வீசினார். மறுநாள், சாக்கியருக்கு ஒரு எண்ணம் உதித்தது. “நாம் சிவலிங்கத்தைக் கல்லால் அர்ச்சிக்க வேண்டும் என்று சிவபெருமான் விரும்புகிறார் போலும்” என்று எண்ணினார். அன்று முதல், சிவலிங்கத்தைக் கல்லால் அர்ச்சிப்பதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. தினமும் அவ்வாறு செய்துவிட்டுத்தான், .பாலோ, கஞ்சியோ கூட அருந்துவார். ஒரு நாள், சாக்கியர் உணவு உட்கொள்ள அமர்ந்த பொழுதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. “ ஆஹா! நாம் இன்று லிங்கத்தின் மேல் கல்லே எரியவில்லையே” என்று நினைத்து, உணவை விட்டுவிட்டு லிங்கம் இருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றார். அங்கிருந்து ஒரு சிறு கூழாங்கல்லை எடுத்து லிங்கத்தின் மேல் வீசினார். பசியை மறந்தார். அவருடைய பக்தியை மெச்சிய சிவபெருமான் அவருக்குக் காட்சியளித்து அருள் புரிந்தார். அவரைக் கைலாயத்திற்கே இட்டுச் சென்றார்.

இக்கதை, நவ வித பக்தியில், அர்ச்சனத்தின் சிறப்பை விளக்குவதாயுள்ளது. அந்த இறைவனுக்கு, நாம் உண்மையான அன்புடன் எதை அற்பனித்தாலும், அவன் அதை உடனே ஏற்றுக் கொள்கிறான் என்பதை நமக்குத் தெளிவாக்குகிறது. பக்தனுடைய பக்தியும் அன்பும் தான் இறைவனுக்கு முக்கியமே தவிர அவன் அளிக்கும் பொருளல்ல.

வழிதேடல்

கண்ணப்ப நாயனாரின் கதை


சிவனை வழிபடும் முனிவர்கள் மற்றும் ஞானிகளை நாயன்மார் என்று குறிப்பிடுகிறோம். அவர்களின் சிவபக்தி மிகவும் பிரசித்தம். அவர்களின் வாழ்வை அவர்கள் சிவனுக்காக முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டு பக்தி இயக்கத்திற்குப் பெரும்பங்காற்றினர்

அந்த வகையில் கண்ணப்ப நாயனார் மிகவும் முக்கியமான ஒரு அருட்தொண்டர் ஆவார். அவர் நாகன் என்ற பரம்பரை வேடுவகுலத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் திண்ணன். அவரது தந்தையார் அவர்களது குலத்தலைவராக இருந்தார். திண்ணன் என்ற வார்த்தைக்கு, “பலசாலி” என்று பொருள். அதற்கு இணங்க, திண்ணன் போர்க்கலை போன்றவற்றிலும் வில்வித்தையில் வல்லவனாகவும் தனது தந்தை மற்றும் அந்தக் கூட்டத்தின் மற்ற பெரியவர்களிடமும் கற்றுத் தேர்ந்தான். மிகவிரைவில் அவன் ஒரு கைதேர்ந்த வில்லாளனாக மாறினான். நாட்கள் உருண்டோடின, மாதங்கள் வருடங்கள் கடந்தன. அதில் திண்ணன் மிக பலசாலியாகவும், பொறுப்புள்ள ஒரு இளைஞனாய் மாறினான். அதனால் காலப்போக்கில் அவன் அந்த குலத்தலைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

அவர்களது குலவழக்கப்படி திண்ணனும் அவனது நண்பர்களும் அடிக்கடி வேட்டைக்குச் செல்வார்கள். அப்படி ஒருமுறை செல்லும் பொழுது ஒரு காட்டுப்பன்றியைப் பின்தொடர்ந்து காட்டிற்குள் மிக அடர்ந்த பகுதியை அடைந்தனர். அந்த காட்டுப்பன்றியை திண்ணன் கொன்று, அதன் இறைச்சியை எடுத்துக்குக் கொண்டு வீட்டிற்கு நடக்கலானான். அப்பொழுது அவனது கண்ணில் ஒரு அழகிய சிவனின் வடிவான லிங்கம் தென்பட்டது. அதன் அழகை திகைப்பாகப் பார்த்து ஆனந்தப்பட்டான். அதற்கு முன் அப்படிப்பட்ட ஒன்றை அவன் கண்டது இல்லை. அவனுக்கு அங்கேயே சிலநாட்கள் தங்க வேண்டும் என்று அவனால் கட்டுப்படுத்தமுடியாத அளவில் எண்ணம் உருவானது. அந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை அங்கேயே சமைக்குமாறு அவனது நண்பர்களிடம் கூறி அதை அந்த லிங்கத்திற்குப் படைத்தான். அந்த இடத்திலே சிறிது காலம் தங்கப் போவதாக அவனது பெற்றோருக்குத் தெரிவிக்குமாறு அவனது நண்பர்களிடம் வேண்டிக் கொண்டான். அங்கு திண்ணன் தினமும் லிங்கத்திற்குப் படைப்பதற்காக வேட்டையாடி, இறைச்சியை இறைவனுக்குச் சமைப்பதை வாடிக்கையாகச் செய்து வந்தான். அவனிடம் தண்ணீர் கொண்டுவர பாத்திரங்கள் இல்லாததினால் தனது வாயில் தண்ணீரைக் கொண்டுவந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். தனது சடைநிரைத்த சிகையில் இறைவனுக்குப் படைக்கப் படவேண்டிய பூக்களைக் கொண்டு வந்து இறைவனை அலங்கரித்தான். இறைவன் மீது அவனுக்கு இருந்த பக்தியால் இவைகளைச் செய்வதில் தவறேதும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே அதைச் செய்ய அவன் ஒருபொழுதும் யோசிக்கவில்லை. அவன் அவ்வாறாக இறைவனை வழிபடுவதே விசித்திரமாக இருந்தது.

சிவ கோசரியார் என்ற ஒரு மிகப் பெரிய சிவனடியார் ஆகிய முனிவர் அந்த இடத்தில் லிங்க வடிவத்தில் உள்ள இறைவனை வணங்குவது வழக்கம். அங்கு மாமிசம் இறைவனுக்குப் படைக்கபட்டுள்ளதைக் கண்டுஅதிர்ச்சி உற்றார். ஏதேனும் விலங்குகள் அவை சாப்பிட்டது போக மிச்சத்தை அங்கே விட்டுச் சென்றிருக்கும் என்று எண்ணி அதைச் சுத்தம் செய்தார். ஆனால் தினம்தினம் மாமிசம் இருப்பதைக் கண்டு அங்கு என்னமோ நடக்கின்றது என்று புரிந்து கொண்டார். இதைப் பற்றி அறிந்து கொள்ள இறைவனை வேண்டினார். அவரது கனவில் இறைவன் தோன்றி அதைச் செய்வது ஒருபக்தன் என்றும் பயப்படத் தேவை இல்லை என்றும் கூறினார். மேலும் ஒரு புதரின் பின் மறைந்திருந்து நடப்பதைக் கவனிக்கச் சொன்னார். இதைத் தொடர்ந்து அடுத்த நாள் இறைவன் கூறியது போல் அந்த முனிவர் செய்தார். திண்ணனின் செயலைக் கண்டு திகைப்படைந்தார். திண்ணன் தனது வாயில் கொண்டு வந்த தண்ணீரைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வதையும், தனது சடையில் சொருகி இருந்த பூக்களை எடுத்து இறைவனுக்குச் சூட்டுவதையும் இறைவனுக்கு இறைச்சியைப் படைப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்பொழுது திடீரென்று லிங்கத்தின் ஒருகண்ணிலிருந்து உதிரம் வழிந்தது. இதைக் கண்டு அதிர்ந்து போன தின்னன் திண்ணன் தனது துணியை வைத்துத் துடைத்துப் பார்த்தான். அதில் நிற்காததைக் கண்டு காட்டிற்குள் ஓடிச்சென்று மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து கண்ணில் வைத்து அழுத்திப் பார்த்தான். எதுவும் பயனற்றுப் போகவே, சிறிதும் யோசிக்காமல், தனது இடதுகண்ணை அம்பினால் துளைத்து எடுத்து இறைவனின் குழியான கண்களில் பொருத்தியவுடன் ரத்தம் வழிவது நின்றது. அதைப் பார்த்த திண்ணன் இறைவனுக்குக் குணமானதைக் கண்டு மகிழ்ச்சியுற்றான். அப்பொழுது, திடீர் என்று மறுகண்ணில் இருந்து உதிரம் வழிந்தது. இதைக் கண்ட சிவகோச்சாரியார் என்ன நடக்குமோ என்று பதைபதைத்தார். மீண்டும் திண்ணன் அவனது மறுகண்ணை எடுத்துவைப்பதாக இருந்தால், கண் தெரியாத நிலையில் அவன் எப்படி அதைச் செய்வான் என்று அவன் யோசித்துக் கொண்டு இருந்தார். அந்த கணமே திண்ணன் சிறிதும் யோசிக்காமல், தனது காலின் கட்டைவிரலை இறைவனின் கண்ணில் வைத்து அவனது வலது கண்ணை அம்பைக் கொண்டு எடுக்க முயற்சித்தான்.அப்பொழுது அங்கு ஒரு அசிரீரி கேட்டது. “நில், எனக்கு உன் கண்ணை அளித்ததால் இனி நீ கண்ணப்பன் என்று அழைக்கப்படுவாய் என்று கூறியது. அது அந்த இறைவனின் குரலே.

இதைக் கேட்ட திண்ணன் மிகுந்த மகிழ்ச்சியுற்றான். அவனுடைய கண்களும் குணமாயின. மேலும் அவனுக்கு இறைவனின் காட்சியும்கிடைத்தது. முனிவருக்கும் திண்ணனின் ஆழ்ந்த அன்பைப் பற்றிய பாடத்தையும் இறைவன் புகற்றினார். அவனுக்கு இறைவன் மீது இருந்த ஆழமான பக்தியினால், இறைவன் அவன் படைத்தவைகளையோ, அவருக்குச் செய்யபட்ட வாயில் கொண்டு வந்த தண்ணீரின் அபிஷேகத்தையோ, சடையில் சூடி இருந்த பூக்களின் அலங்காரத்தையோ அவர் பார்க்கவில்லை. இறைவன் அங்கு பார்த்தது திண்ணனின் தூய்மையான மனம் மற்றும் அதனால் அவன் செய்த பக்தியை மட்டுமே. அவனின் பக்தி அர்ச்சனம் என்ற பக்தி முறையின் சிறந்த உதாரணமாகும்.

திருஞானசம்பந்தர் வரலாறு


திருஞானசம்பந்தர் பற்றிய இவ்வரலாறு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி பக்தர்கள் மேல் கொண்ட அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துகிறது. முன்னொரு காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள சீர்காழி என்கிற ஊரில், சிவபாதஹ்ருதயர் மற்றும் பகவதி அம்மாள் என்ற ஒரு தெய்வ பக்தி மிக்க தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவ்விருவரும், சிவபெருமானின் தீவிர பக்தர்கள். அவர்கள் இல்லத்தருகில் இருந்த, தோணியப்பர் என்றழைக்கப்படும் சிவ பெருமானின் கோயிலுக்கு நாள் தவறாது சென்று வருவர்.

சில நாட்களுக்குப் பிறகு, பகவதி அம்மாளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சம்பந்தன் என்று பெயரிட்டனர். ஒரு நாள், மூன்று வயதே நிரம்பிய அக்குழந்தைத் தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தது. தந்தை சற்று தயக்கத்துடன் அழைத்துச் செல்ல சம்மதித்தார். கோயிலை அடைந்தவுடன் சிவபாதஹ்ருதயர் அங்குள்ளப் புனிதக் குளமாகிய பிரம்மதீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார். அவர் சம்பந்தனைக் குளக் கரையில் அமரச்சொன்னார். குழந்தையும் ஒப்புக்கொண்டது. தந்தையின் தலை குளத்தில் மாறி மாறி மூழ்குவதையும், வெளி வருவதையும் சம்பந்தன் கவனித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குத் தொடர்ந்த இந்தக் காட்சியைக் குழந்தை மிகவும் உற்சாகமாகப் பார்த்து ரசித்தது. திடீரென்றுத் தந்தையின் தலை வெளியில் காணவில்லை. குழந்தைக்குக் கவலையானது. சிவபாதஹ்ருதயர் தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் நீருக்கடியிலேயே இருந்தார். இதை அறியாத அக்குழந்தை, “அம்மா, அப்பா!” என்று கதற ஆரம்பித்தது. அந்த நேரத்தில், சிவ பெருமானும், பார்வதி தேவியும் வானில் உலா வந்துகொண்டிருந்தனர். இப் பிரபஞ்சத்திற்கே அம்மையும் அப்பனுமான அவர்கள் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகுரல் கேட்டு மனமுருகினர். குழந்தையின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு விரைந்தனர். அன்னை பார்வதி தேவி மனம் நெகிழ்ந்து, ஒரு கிண்ணத்திலிருந்துக் குழந்தைக்குப் பாலூட்டத் துவங்கினாள். அதுவே குழந்தையின் அழுகையை நிறுத்த வழி என்றெண்ணினாள். குழந்தையும் அழுகையை நிறுத்தியது. இருக்காதா பின்னர்? தெய்வத் தாயின் கையால் பாலுண்டால் எவருக்குத்தான் இறை அனுபவம் கிட்டாது? பின்னர், சிவபெருமானும், பார்வதி தேவியும் தம் உலாவைத் தொடர்ந்தனர்.

சிறிது நேரத்தில், சிவபாதஹ்ருதயர் குளித்து முடித்துத் திரும்பினார். தன் மகனின் வாயிலிருந்துப் பால் வழிவதைக் கண்டுத் திடுக்கிட்டார். மிகவும் கோபமடைந்த அவர், மகனை நோக்கி “யார் உனக்குப் பால் கொடுத்தார்” என்று வினவினார். குழந்தைப் புன்னகைத்தது. அதைக்கண்ட சிவபாதஹ்ருதயருக்குக் கோபம் அதிகமாகியது. ஒரு கோலை எடுத்துக்கொண்டு, யார் கொடுத்தார் என்று உண்மையைக் கூறாவிட்டால் அடிப்பேன் என்று பயமுறுத்தினார். அந்தக் கணமே வானில் காரிருள் மேகம் சூழ்ந்தது. சிவபெருமானும், பார்வதி தேவியும் பூமிக்கு இறங்கி வந்து, சம்பந்தனுக்குக் காட்சி அளித்தனர்.

சம்பந்தன் உடனே, “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி....” என்று தொடங்கி ஒரு பதிகம் பாட ஆரம்பித்தான். தந்தை அதிசயிக்கும் வகையில் சிறுவன் தொடர்ந்து நிறைய பதிகங்கள் பாடினான். விரைவில், மக்கள் கூட்டம் கூடியது. சம்பந்தனின் பாடலைக் கேட்டு, “ஞானம் நிரம்பிய சம்பந்தன்” என்று பொருள்படும்படி அவனுக்கு “ ஞானசம்பந்தன்” என்று பெயர் சூட்டினர். அவர் பின்னர், இறைவன் புகழ் பாடும் பல பதிகங்கள் பாடினார். அவை “தேவாரம்” என்று கூறப்பட்டன. சிவபெருமான் மேல் பாடப்பட்ட அந்தத் தெய்வீகப் பாடல்கள் இன்றும் பல சிவாலயங்களில் பாடப்பட்டு வருகின்றன.

சொல்லெடு, பஜனை பாடுஇறைவன் புகழ் பாடுவதென்பது அனைவருக்கும் ஆனந்தமளிக்கும் ஒன்று. இச்செயற்பாட்டில், குழந்தைகள் சிவனின் ஒரு நாமமோ அல்லது சிவன் தொடர்புடைய ஒரு வார்த்தையையோ வைத்து, அவ்வார்த்தையை உள்ளடக்கிய ஒரு பஜனையைப் பாடவேண்டும். அவர்கள் பாலவிகாஸ் வகுப்புகளில் கற்ற பஜனைகளைத் துரிதமாக நினைவு கூற ஏற்ற ஒரு செயற்பாடு. மேலும் அவர்களுடைய நினைவாற்றலையும் அதிகப்படுத்தும். சரி, எப்படி விளையாடுவதென்று பார்ப்போமா?

பங்கு பெறுபவர்கள்:
 • க்ரூப் I, II & III குழந்தைகள்

கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
 • நினைவாற்றல் அதிகரித்தல்
 • இறைவன் நாமம் பாடப் பயிற்சி
 • குழுவாக செயல்படும் எண்ணம்

தேவையான பொருட்கள்:
 1. ஒரு கூடை அல்லது தட்டு
 2. சிவன் பெயர்களோ அல்லது சிவன் சம்பந்தமான வார்த்தைகளோ எழுதிய சிறு துண்டுக் காகிதங்கள் (நம் பாலவிகாஸ் பாடத்திட்ட பஜனைகளிலிருந்து எடுக்கப்படவேண்டும்)

முன்னேற்பாடுகள்:

பஜனை பாடுவதின் முக்கியத்துவத்தைக் குருமார்கள் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும். மேலும் இதுவரை நடந்த வகுப்புகளில் கற்ற பஜனைகளை ஒரு முறை நினைவு கூற வேண்டும். சிவன் பெயர்களோ அல்லது சிவன் சம்பந்தமான வார்த்தைகளோ சிறு துண்டுக் காகிதங்களில் எழுதவேண்டும். (நம் பாலவிகாஸ் பாடத்திட்ட பஜனைகளிலிருந்து எடுக்கப்படவேண்டும்)

செயற்பாடு:
 1. குழந்தைகளை, எண்ணிக்கைக்கேற்றவாறு குழுக்களாகப் பிரிக்கவும்.
 2. ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து ஒரு துண்டுக் காகிதம் எடுக்கவேண்டும்.
 3. குழுவிலுள்ள மற்றவர்களிடம் காண்பித்து, அவ்வார்த்தைக் கொண்ட ஒரு சிவா பஜனையைக் குழுவாகப் பாடவேண்டும். பாடல் கண்டுபிடிக்க 3௦ வினாடிகள் மட்டுமே நேரம் கொடுக்கலாம்.
 4. கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் கண்டுபிடித்தால், அக்குழுவிற்கு 1௦ மதிப்பெண்கள் அளிக்கவேண்டும். தவறினால், அந்த வார்த்தை அடுத்த குழுவிற்குக் கொடுக்கப்படவேண்டும். இரண்டாவதாகக் கண்டுபிடித்த குழுவிற்கு 5 மதிப்பெண்கள் அளிக்கலாம்.
 5. துண்டுச் சீட்டுகள் உள்ளவரை ஒவ்வொவொரு குழுவாக விளையாடலாம்.
 6. இதே செயற்பாட்டைக் கொண்டு ராமர் பஜனைகள், கிருஷ்ணர் பஜனைகள் மற்றும் சர்வ தர்ம பஜனைகளும் பாடலாம்.
 7. க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 பாடத்திட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட சிவா பஜனைகளிலிருந்து சில வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
  1. விஸ்வேஸ்வர்
  2. கிரிஜாபதி
  3. கைலாச நாதா
  4. கௌரி
  5. கங்காதரா
  6. சம்போ
  7. நர்த்தனா
  8. விபூதி சுந்தரா
  9. உமா மகேஸ்வரா
  10. சிவ சங்கரா

புள்ளிகளை இணைக்கவும்

- படங்கள்:திருமதி.ஹேமா சடகோபன்

சிவன் துதி பாடுவோம்

சிவன் துதி பாடுவோம்

கண்ணப்ப நாயனாரின் (கேள்விகள் )
 1. கண்ணப்ப நாயனார் என்பவர் யார்? குழந்தை பருவத்தில் அவருடைய பெயர் என்ன?
 2. அவரது தந்தை மற்றும் குல பெரியோர்களிடம் என்ன வித்தையை கற்றுக் கொண்டார்?
 3. அடர்ந்த காட்டின் நடுவில் எந்த அழகான பொருளை கண்டான் ?
 4. திண்ணன் தினமும் காட்டினுள் அவனுடைய அன்பான கடவுளுக்கு என்ன படைத்தான்?
 5. திண்ணன் தண்ணீர் மற்றும் பூக்களை எவ்வாறு கொண்டு வந்தான்?
 6. முதன் முதலில் லிங்கத்தில் இருந்து இரத்தம் வருவதை கண்ட திண்ணன் என்ன செய்தான்?
 7. இரண்டாவது முறை கண்ணில் இரத்தம் வருவதை கண்ட திண்ணன் என்ன செய்ய விழைந்தான்?
 8. சிவபெருமான் திண்ணனுக்கு அளித்த பெயர் என்ன?எதனால்?
 9. இந்த கதையின் மூலம் நீங்கள் அறிந்தது என்ன?
 10. இந்த கதை உங்கள் வாழ்க்கையில் ஏதாவது நிகழ்ச்சியை நினைவூட்டுகிறதா?
 11. இந்த கதையின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட பண்புகள் யாவை?
நம் இதயத்தில் ஒரு கோவில் அமைப்போம்
(வழிகாட்டுதலுடன் காட்சிப்படுத்துதல்)
 1. உங்கள் உடலை தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
 2. உங்களது தோள்பட்டை, கைகள், கால்கள் முதலியவற்றை தளர்வாக வைத்துக் கொண்டு உங்களது மூச்சை கவனியுங்கள்.
 3. இப்பொழுது நம் மனதில் நமது பிரியமான கடவுளுக்கு ஒரு கோவிலை அமைப்போம்.
 4. பசுமையான மரங்கள் நிறைந்த கிராமத்திற்கு செல்வோம்.
 5. அந்த கிராமத்தின் மத்தியில் உள்ள மைதானத்தின் நடுவில் செங்கல் மற்றும் கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைப்போம்.
 6. அடுத்ததாக, அதன் மீது வலது புறம் ஒன்று, இடது புறம் ஒன்று, பின்னால் ஒன்று என மூன்று சுவர்களை எழுப்புவோம்.
 7. அதன் முன்பகுதியில் யானை சிற்பங்கள் பொறிக்கப்பட்ட இரு கதவுகளை நிறுவுவோம்.
 8. அந்த கோவிலின் மீது நீல வானத்தை தொடும் அளவிற்கு ஒரு கோபுரத்தை அமைப்போம். கோவிலின் உள்ளே சிறிய சன்னதி அமைப்போம்.
 9. இப்பொழுது கோவிலில் பூஜை செய்யும் பூசாரி நமக்கு பிடித்த கடவுளை நிறுவுகிறார்.
 10. கடவுளின் வலது மற்றும் இடது புறங்களில் இரு விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.
 11. அந்த அறையின் முன் பகுதியில் மெல்லிய ஓசை எழுப்பும் சிறிய மணிகளை கட்டுவோம்.
 12. இப்பொழுது நமது கோவில் தயாராக உள்ளது.
 13. அடுத்து, அந்த கோவிலை சுற்றி அழகிய நந்தவனம் அமைத்து, அதில் மல்லி, செம்பருத்தி, ரோஜா ஆகிய செடிகளை நடுவோம்.
 14. அந்த நந்தவனத்தில்அழகிய பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் மகிழ்ச்சியாகவும், உல்லாசமாகவும் பறந்து உலா வரட்டும்.
 15. பறவைகள் அழகான மென்னிசை ஒலி எழுப்பும்.
 16. அந்த நந்தவனத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற தாமரை மலர்கள் கொண்ட குளம் ஒன்றும் உள்ளது.
 17. நாம் அந்த கோவிலுக்குள் நுழைகிறோம். விளக்குகள் பிரகாசமாக ஒளி வீசுகின்றன. ஆஹா என்னே அழகு!
 18. அந்த பிரகாசமான ஒளியில் நமது பிரியமான கடவுள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
 19. நாம் நமது கைகளை குவித்து பிரார்த்தனை செய்கிறோம் .
 20. மற்ற பக்தர்கள் பஜனை பாடுவதை கேட்கிறோம்.
 21. உங்களது இரு கரங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தேய்த்து உங்கள் கண்களின் மீது வைக்கவும்.
 22. இப்பொழுது மெதுவாக உங்கள் கண்களை திறக்கவும்.
சொல்லும் செயலும்
(சிவபெருமானின் நாமங்களைக் கொண்டு ஒரு கை மொழி விளையாட்டு)கற்பிக்கப்படும் நற்குணங்கள் :
 1. குழந்தைகளுக்கு, சிவபெருமானின் பல்வேறு நாமங்களை அவற்றின் பொருளோடு அறிய உதவும்.
 2. நினைவாற்றல் அதிகரிக்கும்.
 3. தன்னம்பிக்கையை அளிக்கும்.

தேவையான பொருட்கள் :
 1. சிவனின் பல பெயர்கள் எழுதப்பட்டக் காகிதத் துண்டுகள். (பொருள் விளக்கம் எழுதவேண்டாம்)

தயாராகுதல் :

குருமார்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவநாமங்களின் கருத்தைக் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறவும். குழந்தைகளுக்கு நடித்துக் காட்ட எதுவாக இருக்கும்.

 • நீலகண்டர் : நீல நிறக் கழுத்துடையவர். பகவான் விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தில், பாற்கடல் கடையப் பட்டபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். மேலும் அந்த விஷம் தம் உடலில் நுழையாமல் தொண்டையிலேயே நிறுத்திவிட்டார்.
 • ம்ருகதரா : ஒரு கரத்தில் மானைப் பிடித்திருப்பவர். அலைபாயும் இந்த மனித மனதானது இங்குமங்கும் ஓடித் திரியும் மானுக்கு ஒப்பானது. நம் மனதை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தால், அவர் அதை இறுகப் பிடித்துக்கொள்வார்.
 • நடராஜர் : தாண்டவப் ப்ரியராகிய சிவன்
 • கங்காதரா : ஜடா முடியில் கங்கையைத் தரித்தவர்.
 • சந்திரசேகரா : சந்திர – நிலவு. சேகர் – ஜடாமுடி. தன் ஜடாமுடி மேல் நிலவைச் சூடியிருப்பவர்.
 • அர்த்தநாரீஸ்வரர்: சிவனும் பார்வதியும் இணைந்த வடிவம். வலப்புறம் சிவனும், இடப்புறம் சகதியுமாகக் காட்சியளிப்பவர்.
 • த்ரிபுராரி : அசுர குலத் தலைவனான மாயாசுரனின் நகரங்களை எல்லாம் அழித்தவர். அந்நகரங்களெல்லாம் பூலோகம், மேலோகம் மற்றும் சுவர்க்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் இருந்த இரும்பு, வெள்ளி மற்றும் தங்கங்களை வைத்துக் கட்டப்பட்திருந்தன.
 • த்ரிநேத்ரா : சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களை உடையவர்.
 • போலாநாத் : அனைவரிடமும் அன்பு காட்டுபவர்.
 • பச்மபூத : விபூதி பூசியத் திருமேனி உடையவர்.
 • உமாபதே : உமா என்றழைக்கப்படும் பார்வதி தேவியின் நாதனானவர்.
 • லிங்கோத்பவர் : லிங்க வடிவெடுத்த சிவபெருமான்.
 • திரிசூலதாரி : திரிசூலத்தைக் கையிலேந்தியவர்.
 • ஹரா: தீமைகளை அகற்றுபவர்
 • கைலாச நாதா : கைலாச மலையில் வீற்றிருப்பவர். இங்கு அவர் யோக நிலையில் காணப்படுகிறார். ஆகையால், கைலாசம் ஒளி, தூய்மை மற்றும் பேரானந்தத்தின் உறைவிடமாகக் காணப்படுகிறது.

எப்படி விளையாடுவது? :
 • ஒவ்வொரு குழந்தையாக வந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள பெயரின் விளக்கத்தை, வாயைத் திறந்து பேசாமல் நடித்துக் காண்பிக்கவேண்டும். மற்ற குழந்தைகள் அந்த பெயரைக் கண்டுபிடிக்கவேண்டும்.
சிவ நாமம் சொல்

சிவ நாமம் சொல்

Shivaratri HD wallpaper
தேவாரப் பதிகம்


தேவாரம் என்பது சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை கி.பி.7, 8 ஆம் நூற்றாண்டுகளில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

திருஞானசம்பந்தர், மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை ‘அம்மையே அப்பா’ என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தின் ஒரு சில துளிகளை ஒலி ஒளிக் காட்சியாக பகிர்வதில் தமிழ்நாடு பாலவிகாஸ் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இந்த ஆத்மார்த்தமான மற்றும் நம் இதயத்தை நெருடும் புனிதமான பாடல் வரிகளை, சிவராத்திரி குழுமசெயல்பாட்டின் ஒரு பகுதியாக பாலவிகாஸ் மாணவர்களுக்கு கற்பிக்கலாமே!

வரிகள் :
 • தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
 • காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
 • ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
 • பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

 • முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
 • வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
 • கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
 • பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

 • அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
 • பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
 • ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
 • திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.
சிந்திக்கவும் வண்ணம் தீட்டவும்

கயிறு இழுக்கும் போட்டி

சிவராத்திரி என்னும் மங்களகரமான, மிகவும் புனிதமான இத்திருநாளில், எல்லாம் வல்ல அளப்பரிய கருணை மிகுந்த, கொடிய ‘ஹாலாஹல’ விஷத்தை தன் தொண்டையில் நிறுத்தி அதன் வேதனையை தான் அனுபவித்து இந்த உலகை காக்கும் சிவபெருமானை நினைத்து அவரது நாமத்தை ஸ்மரணை செய்து மனதை புனிதப்படுத்துவோம்.

வித்திடப்பட்ட நல்ல பண்புகள் :
 • நல்ல பண்புகள் கடைபிடிப்பதன் முக்கியத்துவம்

தேவையான பொருட்கள்:
 • நல்ல தடினமான கயிறு அல்லது ஒரு பெரிய படுக்கை விரிப்பு

தயார் நிலையில் இருத்தல் :

குருமார்கள் குழந்தைகளுக்கு சிவபெருமான் ‘ஹாலாஹல’ விஷத்தை உண்டு உலகைக் காத்த நிகழ்ச்சியை விளக்கிக் கூறலாம். மேலும் தீயதை அழித்து நல்லதை வென்ற வேறு சில கதைகளைக் கூறலாம். மற்றும் ஒரு நல்ல மனிதனாக வாழ்வது எப்படி, அதற்கான பண்புகளும், குணநலன்களைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கலாம்.

செய்முறை :

குழந்தைகளை இரு அணிகளாகப் பிரித்து கயிறு இழுக்கும் விளையாட்டை விளையாடலாம். வெற்றி பெறும் அணி, தீமையை வென்றதாக அறிவிக்கப்படும்.

மாறுபாடு :

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையைக் கடைவது போல, ஒரு குழந்தையை இரு அணிகளின் நடுவில் நிற்க வைத்து மற்றும் ஒருவனை சிவனாக பாவித்து, அவர் அனுபவித்த வேதனையை உணர செய்து, சிவபெருமான் இவ்வுலகை காப்பதற்காக செய்த தியாகத்தை நினைவில் கொள்ளும்படி செய்யலாம்.

இவ்வாறு அந்த குழந்தையின் அனுபவத்தை மற்ற எல்லாக் குழந்தைகளும் அனுபவிக்க, அவர்களுக்கு அடுத்தடுத்த முறை வருமாறு செய்யலாம். அதே சமயம் மற்ற குழந்தைகள் “ஹர ஹர மஹாதேவ்” அல்லது “ஓம் நம சிவாய” அல்லது “சம்போ மகாதேவா” என்றோ நாம ஜபம் தொடர்ந்து செய்யலாம்.

இளைய கட்டட கலை நிபுணர்கள்
(கைலாச மலையை அமைத்தல்)


இறைவன் சிவன் மற்றும் பார்வதியின் இருப்பிடமான கைலாச மலையை உருவாக்கும் முயற்சி.

தேவையான பொருட்கள்:
 • புத்தகங்கள்/ மெத்தைகள்/ பைகள்

வித்திடப்படும் பண்புகள் :
 • உடல் அசைவுகள், படைப்பாற்றல், மற்றும் குழுவேலைகள் போன்றவற்றை ஊக்குவித்தல்.

தயார் நிலையில் இருத்தல்:
 • குரு குழந்தைகளுக்கு சிவனை பற்றிய கதையை சொல்லுதல்.

செய்முறை:

குழந்தைகள் பின்வருமாறு செய்யலாம் :
 1. குழந்தைகள் ஒருவர் மேல் ஒருவர் நின்று மலை போல் உருவாக்கலாம்.
 2. குழந்தைகள் அவர்களது புத்தகபைகள், அல்லது மதிய உணவு பைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி மலை போல் உருவாக்கலாம்.
 3. குழந்தைகள் அவர்களது நோட்டு புத்தகங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி மலைபோல் உருவாக்கலாம்.
 4. குழந்தைகள் ஒவ்வொருவரும் நோட்டு புத்தகத்தை திருப்பி வைத்து அதன் மீது மேலும் நோட்டு புத்தகங்களை அவ்வாறே முதல் பக்கத்தின் மீது திருப்பி வைத்து அழகிய மலை போல் உருவாக்கலாம்.
 5. குழந்தைகள் எல்லோரும் நின்றுகொண்டு தங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி மலை உருவாக்கலாம்.
 6. குழந்தைகள் இந்த செயல்களை செய்யும்பொழுது, ‘கைலாசராணா’ என்னும் ஸ்லோகத்தையோ அல்லது ‘வந்தே தேவம் உமாபதிம்’ என்னும் ஸ்லோகத்தையோ அல்லது ‘சிவ சம்போ ஹர ஹர சம்போ’ என்னும் பாடலை பாடியோ செய்யலாம்.
சிவலிங்கம் கோலம்


சிவராத்திரி வந்துவிட்டது! மகேஸ்வரன் என்று அன்பாக அழைக்கப்படும் நம் சிவபெருமான் நம்முள் உள்ள தீய குணங்களை அழிப்பவர். சிவலிங்கம், சிவபெருமானின் ஆக்க சக்தி மற்றும் அழிக்கும் சக்தியைக் குறிக்கிறது. மக்கள் தொன்று தொட்டு சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். மேலும், அனைத்து சிவாலயங்களிலும், கற்பக்ரஹத்தில் வீற்றிருப்பது இந்த சிவலிங்கம்தான்.

அத்தகு சிறப்பு வாய்ந்த சிவலிங்கத்தை எப்படி ஒரு கோலமாக வரைவது என்று பார்ப்போமா? வரையும் முறையைப் படிப் படியாக விளக்கும் ஒரு காணொளி இதோ உங்களுக்காக. இந்த சிவராத்திரி நன்னாளில், நாம் சிவபெருமானுக்கு, மனதை மயக்கும் இந்த வண்ண மயமான கோலத்தை சமர்ப்பித்து நம் பக்தியையும், நன்றியையும் வெளிப்படுத்துவோமாக!

இந்த இணையத்தைத் திறந்து, சிவராத்திரிக்கான மேலும் பல விறு விறுப்பான பாலவிகாஸ் வகுப்புச் செயற்பாடுகளைக் காணத் தவறாதீர்கள்!