விறல்மிண்ட நாயனார்

திருச்செங்குன்றூரில், வேளாண் குலத்தில் அவதரித்த விறல்மிண்ட நாயனார் சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டவர். அவர் அடியார்களிடத்தில் தீவிரமான அன்புடையவராக இருந்தார். அடியார்களிடத்தில் மதிப்பு வைக்காதவர்களிடம் கடுமையாக நடந்து கொள்பவராகையால் விறல்மிண்டர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று ஊகிக்க இடம் உண்டு.

அவர் உறுதியான பக்தியுடையவராதலால் எதற்கும் அஞ்சாமல் வாழ்ந்தார். அடிக்கடி திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானை வழிபட்டு, அங்கிருக்கும் அடியார் திருக்கூட்டத்தை வணங்கி அவர்களோடு இருந்து இன்புற்று வருவார். இறைவனுடைய திருவருட் சிறப்பை மற்றவர்களும் உணரும் படியாகத் தம்முடைய ஒழுக்கத்தால் வெளிப்படுகிறவர்கள் அடியார்கள். ஆகையால் விறல்மிண்டருக்கு அடியார்கள் மேல் மிகுந்த பக்தி உண்டாயிற்று.

சிவனடியார்களை வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்கச் செல்லுவதை வழக்கமாகக் கொண்ட விறல்மிண்டர், ஒருமுறை திருவாரூர் தியாகராசப்பெருமானைத் தரிசனம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் அங்கிருந்த சிவனடியார்களை வணங்காமல் நேராக சிவ பெருமானை வணங்கச் செல்வதைக் கண்டு, மனம் வருந்தினார். சுந்தர மூர்த்தி நாயனாரிடம் சென்று "அடியார்களை வணங்காமல் செல்கின்றவன் சிவனடியார்களுக்குப் புறம்பானவன். அதுபோல சிவபெருமானுக்கும் புறம்பானவன்" என்று கூறினார்.

விறல்மிண்டரின் சினத்தை உணர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வழிபடுவது எளிது, தொண்டரை வழிபடுவது அரிது. அதற்கான தகுதியை அளித்து, தொண்டர்களைப் போற்றிப் பாட அருளுமாறு இறைவனை வேண்டினார். அப்போது இறைவனே, ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, அதை முதலில் வைத்து திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார் திருக்கூட்டதையும் வணங்கினார்.

பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி சிறந்து நின்ற சுந்தர மூர்த்தியாருக்குத் திருத்தொண்டரைப் பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு காரணமாக இருந்தவர் விறல்மிண்டர்.

இவர் பல காலம் அடியார் தொண்டு புரிந்து ஈசன் திருவருளால் கணநாயகர் என்னும் நிலையைப் பெற்றார், விறல்மிண்ட நாயனாராகப் போற்றப்பட்டார்.