கிருஷ்ண ஜன்மாஷ்டமி - செயற்பாடு

பகவான் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் ஜனனத்தைத்தான் நாம் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்று கொண்டாடுகிறோம்.

பகவான் கிருஷ்ணரை நினைத்தாலே நிறைய காட்சிகள் நம் மனக்கண்ணில் வந்து போகும். கிருஷ்ணனின் அழகான நீல நிறம், குறும்புச் சிரிப்பு, அவன் அந்தப் பானையை உடைத்து வெண்ணெயைத் திருடிக்கொண்டு ஓடுவது, அவன் தன் இடது கை சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடிக்கும் அந்த லாவண்யம், அழகாகக் கோபியர்களுடன் நடனம் ஆடும் அழகு, அவனுடையப் புல்லாங்குழலை எடுத்து வேணு கானம் இசைக்கும் அழகு, மேலும் பல எண்ணிலடங்காத லீலைகள்.

அந்த பகவானை நினைத்தால், நம் இதயம் அன்பு வெள்ளத்தால் நிரம்புகிறது. இந்த அன்பை வெளிப்படுத்த ஒரே வழி, அவன் நாமம் சொல்லி அவன் புகழ் பாடுவது ஒன்றுதான். ஆத்மார்த்தமான, விறுவிறுப்பான மேலும் அழகிய பாடல் வரிகள் அடங்கியக் கிருஷ்ணர் பஜனைகளைப் பாடுவதல்லாமல் நமக்கு வேறென்ன வழி இருக்கிறது? இந்தப் பாடல்கள் கிருஷ்ணனின் படத்திற்கே உயிரூட்டும்.

பாலவிகாஸ் பாடத் திட்டத்தில் உள்ள கிருஷ்ணர் பஜனைகளைத் தொகுத்து நமது இணைய தளத்தில் வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவற்றில், கேட்பொலி (audio), காணொளி (video), வார்த்தை விளையாட்டுகள், பகவான் கிருஷ்ணரின் பல நாமங்களின் தாத்பர்யத்தைப் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ளப் பல பகுதிகள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் இப்பொழுது குழந்தைகள் பஜனை பாடும்பொழுது அதன் ஆழ்ந்த கருத்தினையும் அறிந்துகொண்டுப் பாடி இறை அனுபவம் பெற ஏதுவாக இருக்கும்.

பாலவிகாஸ் வகுப்புகள் அனைத்திலும் பகவான் கிருஷ்ணரின் பக்தி கானம் முழங்கட்டும்!