சுபாஷ் சந்திரபோஸின் சிறந்த நாட்டுப்பற்று


எனக்கு முன்பு பல பேச்சாளர்கள் பேசினார்கள். ஆனால், பல சிறந்த குணங்களையும், திறன்களும் வழங்கப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் குறித்து எவரும் எதனையும் கூறவில்லை. தனது ஐ.சி.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், அவர் இந்தியாவிற்கு வந்து, அரசியல் இயக்கத்தில் இணைந்து, பல வகைகளில் சிறப்பான பங்கினை ஆற்றி உள்ளார். ஆனால், துரதிருஷ்டவசமாக பாரதீயர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால், அவர் நாட்டை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. வெளிநாடுகளிலிருந்து வந்த போதும் கூட, அவர் இந்தியர்கள், ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக மிக முக்கியப் பங்கினை ஆற்றினார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில், சுபாஷ் சந்திர போஸின் முக்கியப் பங்கு:

அவருடைய சகோதரரின் மகளாகிய லலிதா போஸ், ஒருமுறை புட்டபர்த்தி வந்திருந்தார். அவர் தன் மாமா சுபாஷ் சந்திரபோஸ், பாரதமாகிய இப்புனிதமான பூமியில் பிறந்திருந்தும் கூட, இந்த நாட்டை விட்டுச் செல்ல வேண்டி இருந்ததே என வருந்தினார். இந்த நேரத்தில் வாழ்ந்து, ஸ்வாமியின் தரிசனம் பெற முடிந்தது எண்ணி, மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் பிருந்தாவனுக்கும், வொயிட் பீல்டுக்கும் வந்து சில நாட்கள் தங்கி இருந்தாள். பின்னர், நான் செல்லும் இடங்களுக்கெல்லாம், காரில் என் பின் தொடர்ந்து வருவாள். அவள் ஆர்மோனியம் வாசித்தபடி, பஜனை பாடுவது வழக்கம். அவள், நான் ஊட்டி மற்றும் கொடைக்கானல் சென்ற பொழுது, அங்கும் வந்திருந்தாள். எல்லா நேரங்களிலும், அவள் 'சாய்ராம், சாய்ராம்' என ஜபித்தபடி இருப்பாள். இந்த எண்ணத்தினைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவள் மனதில் இல்லை.

சுபாஷ் சந்திரபோஸ் சிறந்த மன மற்றும் ஆன்மீக வலிமைகளைப் பெற்றிருந்தார். ஆனால், தன் ஆன்மீக வலிமைகளை எவரிடமும் அவர் வெளிப்படுத்தவில்லை. இந்தியாவை சிறந்த வளர்ச்சி மிக்க தேசமாக உருவாக்கும் தனியாத தாகத்தினை அவர் கொண்டிருந்தார்.


சுபாஷ் சந்திரபோஸ் கொண்டிருந்தது போன்ற அத்தகு உறுதியான ஆசையினை, சுதந்திரத்திற்காகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் வேறு எந்தத் தலைவரும் பெற்றிருக்கவில்லை. அவர் செயலில் நம்பிக்கை வைத்திருந்தார். மற்ற தலைவர்களைப் போல பேச்சளவில் மட்டுமல்ல. இன்றும்கூட பல சிறந்த தலைவர்கள் உள்ளனர். ஆனால், தாங்கள் கூறுவதை செயலில் காட்டிடாத தலைவர்களால் என்ன பயன்? அவர்கள் இலட்சக்கணக்கான விஷயங்களைக் கூறுகின்றனர். ஆனால், ஒன்றைக் கூட பயிற்சிக்குக் கொண்டு வருவதில்லை. தேசத்திற்காக இவ்வளவு செய்த சுபாஷ் சந்திரபோஸினை எவரும் இன்று கூட நினைவில் கொள்ளாதது, எனக்கு வருத்தத்தினை அளிக்கிறது. அவர் தன் வாழ்வு முழுவதனையும் தேசத்திற்காகத் தியாகம் செய்தார். வெளிநாடுகளில் அவர் தங்கியிருந்த பொழுதும் கூட, தன் தாய்நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அன்பே, அவர் மனதின் மேல் மட்டத்தில் இருந்தது. மாறாக, அது நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது.

இது என் தாய் நாடு எனவும், இது என் தாய்மொழி எனவும், இது என் மதம் எனவும் பெருமையுடன் அறிவிக்காதவன், உண்மையில் உயிருடன் உள்ள ஒரு சடலமே (தெலுங்கு கவிதை).

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி எனும் பாதையில் தேசத்தினை செலுத்திட, சுபாஷ் சந்திரபோஸ் மிகக் கடுமையாக உழைத்தார். அவர் அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் இலட்சியங்களை எடுத்துக் காட்டினார். தன் தாய்நாட்டினை நேசிக்காத ஒருவன் உண்மையில் வாழும் பிணமே! நாட்டின் நல்ல பெயரை நிலை நிறுத்துபவனையே உண்மையான வகையில் வாழ்கின்ற மனிதனாக அழைத்திட இயலும்.

தன்னுள் பெறப்படும் சுதந்திரத்தினை அடையுங்கள்:

இதற்கிடையில், இந்தியா சுதந்திரம் (விடுதலை) அடைந்தது. ஆனால், இது வெறும், 'ஸ்வதந்திரம்' மட்டுமே, 'ஸ்வாதந்திரம்' இல்லை.

ஸ்வாதந்திரம் என்றால் என்ன?

அது உடல், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஸ்வாதந்திரம் ஆத்மாவுடன் தொடர்புடையது. ஆத்ம தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் உண்மையிலேயே சுதந்திரமானவர்கள். 'ஸ்வராஜ்ஜியம்' மற்றும் 'ஸ்வாராஜ்ஜியம்' ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடும் அத்தகையதே. 'ஸ்வா ராஜ்ஜியத்தை' அடையும் இலக்கினை நாம் கொள்ள வேண்டும். வெறும், 'ஸ்வராஜ்ஜியம்' அடைவது இலக்காக இருத்தல் கூடாது. ஆத்ம தத்துவத்தை நாம் பின்பற்றும் பொழுது, அனைத்தும் நமக்கு நன்மையாகவே இருக்கும். அது மட்டுமல்ல, அது உலகம் முழுவதன் நலம் மற்றும் வளமைக்கு இட்டுச் சென்றிடும். அரசியல் சுதந்திரத்தினால் மட்டும் நாம் நிறைவு பெறுதல் கூடாது. ஆத்மாவுடன் தொடர்பு கொண்டுள்ள அந்த சுதந்திரத்தினை நாம் அடைந்திட வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடன் தொடர்புடைய சுதந்திரத்தினை அடைய உழைத்தார். முடிவில், அந்த முயற்சியில் அவர் வெற்றியும் அடைந்தார். அத்தகு புனிதமான ஆத்மாக்களை அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றவர்கள், சுயநலம் நிரம்பிய தங்களது இலக்குகளை நிறைவு செய்து கொண்டிருந்த தருணத்தில், "ஸ்வாதந்திரத்தினை (தன்னைப்பற்றிய சுதந்திரம்) அடைந்த சில பாரதியார்களுள் சுபாஷ் சந்திரபோசும் ஒருவர். மற்றவர்கள், குறுகிய கருத்துக்களையும், வேறுபாடுகளையும் கொண்டிருந்த நேரத்தில், சுபாஷ் சந்திரபோஸ் நாடு முழுவதும் ஒன்று எனும் கருத்தினைக் கொண்டிருந்தார்.

ஒவ்வொருவரிடமும் உள்ள ஆத்ம தத்துவம் ஒன்றே. அனைவருக்கும் ஆத்ம சக்தி வழங்கப்பட்டுள்ளது. மனிதன் ஆத்மாவின் ஸ்வரூபமாவான். இதனாலேயே கிருஷ்ணர் பகவத் கீதையில் மனம வாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத ஸனாதனா (அனைத்து உயிரினங்களின் உள்ளும் இருக்கும் நிலையான ஆத்மா என்னுள் ஒரு அங்கம்) என்று அறிவித்தார். "அனைவரும் என் தெய்வீகத்தின் அம்சங்களே" என்று அவர் கூறினார். உங்களை என்னில் ஒரு அம்சமாக நான் கருதும் பொழுது மற்றவர்களை உங்களில் ஒரு பகுதியாக நீங்கள் கருதிட வேண்டும். அனைவரையும் நேசியுங்கள். அனைவருக்கும் சேவை செய்யுங்கள். ஒருவரை பிச்சைக்காரர் எனவும், மற்றவரை கோடீஸ்வரர் எனவும் தனி மனிதர்களுக்கு இடையே வேறுபாட்டினை நீங்கள் அனுசரிக்க கூடாது. பாரதத்தில் பல கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது வயிற்றினை நிரப்புவதிலேயே ஈடுபட்டுள்ளனர். "பவதி பிக்ஷாம் தேஹி" (தாயே, பிச்சை இடுங்கள்) என அவர்களது வீட்டு வாயிலின் முன்பு நின்று இரங்கும் பொழுது, ஒரு கவளம் உணவினைக் கூட அவர்களுக்கு அளித்திட, அவர்கள் தயாராக இல்லை. அத்தகு பணக்காரர்கள் நம் நாட்டில் இருப்பதனால் என்ன பயன்? பெயரளவிலேயே அவர்கள் செல்வந்தர்கள். ஆனால், உண்மையில் அவர்கள் ஏழைகளை விடவும் ஏழை ஆவார்கள். நமது நாட்டில் எண்ணற்ற செல்வந்தர்கள் இருந்தும் கூட, ஒழுக்கமும், தர்மமும் அதிலிருந்து மறைந்து விட்டது போலத் தோன்றுகிறது. ஆகவே இந்த நாட்டின் மக்கள் ஒழுக்கம் மற்றும் தர்மம் நிரம்பிய பாதையைப் பின்பற்ற வேண்டும். மற்றவர்களை உங்களுடைய சொந்த சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள். மாறாக அவர்களை உங்களாகவே எண்ணுங்கள். மக்கள், மற்றவர்களை, 'சகோதர சகோதரிகளே' என்று விளிக்கின்றனர். ஆனால், யார் அதனைப் பயிற்சியில் கொண்டு வருகிறார்? எவருமில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் போன்ற புனிதமான ஆத்மாக்களை நினைவில் கொள்ளுங்கள்

இன்று நீங்கள் எங்கு சென்றாலும், மக்கள் செல்வத்தின் பின்னால் ஓடுகின்றனர். மக்கள் பெருத்த செல்வத்தினை அடைய உழைக்கின்றனர். ஆனால், அன்பு மற்றும் ஒழுக்கத்தினை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை எவரும் மேற்கொள்வது இல்லை. முன்பு பேசிய மூன்று பேச்சாளர்களும், உலகினைப் பற்றிப் பேசினர். ஆனால், எவரும் ஆத்மாவைப் பற்றிப் பேசவில்லை. ஆத்மாவின் அதே தத்துவமே ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கிறது. அது உங்களினுள் இருக்கிறது. என்னுள் இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் உள்ளது. தெய்வம் மனுஷ்ய ரூபேண (இறைவன் மனித வடிவில் இருக்கிறார்). எவரிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், ஒவ்வொருவரும் இறைவனின் சொரூபமே. நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் எனும் இந்த தீர்மானத்துடன் வாழ்வினை நடத்திச் சென்றிட வேண்டும் . அத்தகு பரந்த உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும்பொழுது மட்டுமே நம்மால் ஸ்வாராஜ்யம் அடைய இயலும். அதுவரை நம்மிடம் ஸ்வராஜ்ஜியம் மட்டுமே உள்ளது. 'ஸ்வ' என்றால் ஸ்வார்த்தா(சுயநலம்) ஆனால், நாம் ஸ்வரராஜ்ஜியம் விழைய வேண்டும். அதில் 'ஸ்வா' என்பது ஆன்மிக இதயத்துடன் (ஹ்ருதயம்) தொடர்புடையது.

நீங்கள் அனைவரும் கிராம சேவை புரிந்து, ஏழைகளுக்கு சேவை செய்கிறீர்கள். ஆனால், முதலில், உண்மையான ஸ்வாதந்திரத்தினை நீங்கள் அடைய வேண்டும். அன்பு செலுத்தி, மரியாதை அளித்து, ஒவ்வொருவருக்கும் உதவி புரியுங்கள். அப்பொழுது மட்டுமே, உண்மையான ஸாயிமாணவன் என உங்களை நீங்கள் அழைத்துக் கொள்ள முடியும். அனைத்தும் மாற்றம் பெறும். ஆனால், ஆத்மா மாறாது.

ஒரு தீய மனிதன் அல்லது அரக்கன் கூட ஆத்மாவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அத்தகு மாற்றம் இல்லாத நிலையான ஆத்ம சாம்ராஜ்ஜியத்தினைக் கடைந்திட உழைத்திருங்கள்.

தன்னம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது மட்டுமே மனிதனாக உள்ள நிலையில் இயல்பான நிலையினை உங்களால் எய்த முடியும். இது உங்களுடைய, உண்மையான மற்றும் நிலையான நிலைப்பாடு. 'தான்' எனும் சாம்ராஜ்யத்தை அடைந்து நற்பெயரை நீங்கள் ஈட்ட வேண்டும் எனும் எனது நல்ல வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகளுடன் எனது உரையை முடிவிற்குக் கொண்டு வருகிறேன்.

என்னை எவரும் பேச அழைக்கவில்லை என்ற பொழுதிலும், சுபாஷ் சந்திரபோஸின் மீது கொண்டிருந்த அன்பினாலேயே நான் பேசினேன். சுபாஷ் சந்திரபோஸ் போன்ற அத்தகு மனிதர்கள் மீண்டும் மீண்டும் பாரதத்தில் பிறந்திட வேண்டும்.
இந்தியா மீண்டும் தன் சிறப்புமிக்க புகழைப் பெற்றிட வேண்டும். இன்று சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்திருந்தால், வரலாற்றில் மிகப்பெரிய பெயரினை அவர் பெற்றிருப்பார். இந்த நேரத்தில், பிச்சைக்காரர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பாரதீயர்களே அவர் இந்திய நாட்டை விட்டுச் செல்லக் காரணமாயினர். இதன் விளைவாகவே அவர்கள் இன்று துன்பங்களை எதிர் கொள்கின்றனர். அத்தகு புனிதமான ஆத்மாக்களை நாம் நேசித்து நம்பிக்கை வைத்திட வேண்டும். அன்பும் நம்பிக்கையும் நமது உண்மையான வலிமை. சுபாஷ் சந்திர போசை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. அவரது போதனைகள், புனிதமான எண்ணங்கள் மற்றும் சிறந்த இலக்குகளைக் கொண்டிருந்தது.

துரதிஷ்டவசமாக, மக்கள் அத்தகு சிறந்த மக்களை மறந்து, தீயவர்களை நினைவில் கொள்கின்றனர். அவர்கள் அரிதான ஆபரணங்களைப் போன்றவர்கள். அத்தகு புனிதமான ஆத்மாக்களை நீங்கள் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகளை வழங்கி எனது உரையினை நான் முடிக்கிறேன்.

15.8.2007 அன்று பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஆற்றிய உரை

Source: Divine Discourse in Sai Kulwant Hall on August 15, 2007, 60th Anniversary of Indian Independence